Published:Updated:

`உலகக் கோப்பை போட்டிகளைப் பார்க்க 3டி கிளாஸ்!' - யாரைச் சீண்டுகிறார் அம்பதி ராயுடு?

`உலகக் கோப்பை போட்டிகளைப் பார்க்க 3டி கிளாஸ்!' - யாரைச் சீண்டுகிறார் அம்பதி ராயுடு?
`உலகக் கோப்பை போட்டிகளைப் பார்க்க 3டி கிளாஸ்!' - யாரைச் சீண்டுகிறார் அம்பதி ராயுடு?

தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பேசியதைக் கிண்டல் செய்யும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு, ரிஷப் பன்ட் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்கள் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ``விக்கெட் கீப்பிங் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ரிஷப் பன்ட்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அம்பதி ராயுடுக்குப் போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், அவர் சரியாக விளையாடவில்லை. அதேநேரம் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டிங், பீல்டிங், பௌலிங் என மூன்று டைமன்சன்களிலும் (3டி) சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனாலேயே ராயுவுடுக்குப் பதிலாக விஜய் சங்கரைத் தேர்வு செய்தோம். விஜய் சங்கர், அணிக்குப் பல ஆப்ஷன்கள் கொடுக்கிறார். அவரது பந்துவீச்சு, அணியின் பௌலிங் ஆப்ஷன்களை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் நல்ல ஃபீல்டரும்கூட" என விளக்கம் அளித்தார். 

கடைசி 14 போட்டிகளில், சுமார் 42 என்ற சராசரி வைத்திருந்தார் ராயுடு. அவர் கட்டாயம் அணியில் ஆடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ராயுடு என்ன  ரியாக்ஷன் காட்டப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார். அதில், ``உலகக் கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக 3டி கிளாஸ் ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். எம்.எஸ்.கே.பிரசாத் விஜய் சங்கர் மூன்று டைமன்சன்களிலும் (3டி) விளையாடுகிறார் எனக் குறிப்பிட்டதைக் கிண்டலடிக்கும் விதமாக அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.