Published:Updated:

பவர் பிளேவில் 10 டாட் பால்… கோலியை இம்சிக்கும் கூக்ளி! #RRvRCB

பவர் பிளேவில் 10 டாட் பால்… கோலியை இம்சிக்கும் கூக்ளி! #RRvRCB
பவர் பிளேவில் 10 டாட் பால்… கோலியை இம்சிக்கும் கூக்ளி! #RRvRCB

"பிட்ச் ஒத்துழைக்க மறுக்கும்போது, பந்து பேட்டுக்கு வருவது சிரமமாக இருக்கும்போது, ரன் எடுக்க தடுமாறும்போது அழகாக சிங்கிள் தட்டிவிட்டு Non striker முனையில் நிற்கும் கலை ஏனோ கோலிக்கு இன்னும் வசப்படேவே இல்லை."

ஐ.பி.எல் பார்க்கும் பலரும், `எப்படியும்  ஆர்.சி.பி தோற்றுவிடும். எப்படித் தோற்கிறார்கள் என்று பார்ப்போம்’ என்ற மைண்ட்செட்டுக்கு வந்துவிட்டார்கள். ஆம், இந்த சீஸனில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ராஜஸ்தானுக்கு முதல் வெற்றி. #RRvRCB

`இன்னும் ஏன் இவன் இந்த மொக்க டீம்ல இருக்கான்… சென்னை, மும்பைனு வேற டீம்ல ஆடியிருந்தா இந்நேரம் ரெண்டு மூணு கப் அடிச்சிருப்பான். இன்டர்நேஷனல் லெவல்ல ராஜா மாதிரி ஆடிட்டிருந்தவன, வருஷா வருஷம் ஒண்ணுமில்லாம சீரழிக்கிறதுக்குத்தான் இந்த ஐ.பி.எல் வருதுபோல. வேர்ல்ட் கப் வருது… சிவனேன்னு இஞ்சுரினு சொல்லி ரெஸ்ட் எடுக்கலாம்ல!’ - இது கோலி ரசிகர்களின் புலம்பல். ஸ்டார் பிளேயர்கள் இருந்தும் 11 ஆண்டுகளாகக் கோப்பை வெல்லவில்லை என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புலம்பல்.

ஆர்.சி.பி கோப்பை வெல்ல முடியாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக வெற்றிபெற முடியாமல் போனதற்கு, கோலிதான் முழுமுதற் காரணம். கேப்டன் என்ற முறையில் தோல்விக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் செய்த முதல் தவறு ஓப்பனிங் இறங்கியது. கோலியின் ஆட்ட இயல்புக்கு அவருக்கு ஒன்டவுன்தான் செட்டாகும். முதலில் பேட்செய்த ஆர்.சி.பி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்தது. ரன்ரேட் 8. டீசன்ட்டான ஸ்கோர்போல தெரியும். ஆனால், ரன்ரேட்டை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம்.

6 ஓவர் முடிவில் கோலி 23 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்தார். அந்த 23 ரன்களும் 13 பந்துகளில் அடிக்கப்பட்டவை. அதாவது 10 டாட் பால்கள். மூன்றே மூன்று பவுண்டரி. அதில் ஒன்று எட்ஜ். அதற்காகக் கோலிக்கு ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடத் தெரியாது என்பதல்ல அர்த்தம். இதே கோலிதான், மும்பைக்கு எதிரான போட்டியில் வந்ததும் வராததுமாக பும்ரா ஓவரில் மூன்று பவுண்டரிகள் விரட்டினார். எவ்வளவு பெரிய ஜாம்பவானுக்கும் சறுக்கல் இருக்கும். கோலியும் அதற்கு விதிவிலக்கல்ல. பிட்ச் ஒத்துழைக்க மறுக்கும்போது, பந்து பேட்டுக்கு வருவது சிரமமாக இருக்கும்போது, ரன் எடுக்கத் தடுமாறும்போது அழகாக சிங்கிள் தட்டிவிட்டு Non striker முனையில் நிற்கும் கலை ஏனோ கோலிக்கு இன்னும் வசப்படேவே இல்லை.

கிருஷ்ணப்பா கெளதம் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் தட்டிவிட்டு அடுத்த நான்கு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல், கடைசிப் பந்தில் 1 ரன் எடுத்தார் கோலி. ஒரு பந்து டாட் பால் ஆனதுமே சுதாரித்து சிங்கிள் தட்டி, எதிர்முனையில் இருக்கும் பார்த்திவ் படேலை ஆட விட்டிருக்கலாம். குல்கர்னி வீசிய அடுத்த ஓவரிலும் முதல் பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு அடுத்த மூன்று பந்துகளை வீணடித்தார் விராட்.

டி-20-யின் முடிவுகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்றாலும், குறிப்பிட்ட வீரரின் பலம், பலவீனத்தை ஆய்வுசெய்து ஹோம்வொர்க் செய்ய வேண்டியதும் அவசியம். முதல் போட்டியில் கொல்கத்தாவின் ரசல் வெளுத்து வாங்கிய போதிலும், யார்க்கரில் அவர் தடுமாறுவதைப் புரிந்துவைத்து, அதற்கேற்ப ரசலுக்கு யார்க்கர்களை இறக்கினார் முகமது ஷமி. ரசல் அதில் தடுமாறவும் செய்தார். ஆர்.சி.பி-க்கு எதிராக ரிஸ்ட் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால் பிரமாதமான ரெக்கார்டு வைத்திருக்கிறார் (2 போட்டிகளில் 6 விக்கெட்... டி வில்லியர்ஸை இருமுறை அவுட் செய்திருக்கிறார்) என்பதால், அவரை டிரம்ப் கார்டாகப் பயன்படுத்தினார் ரஹானே. `விராட், ஏபிடிக்கு எதிரான ஷ்ரேயாஸ் கோபாலின் ரெக்கார்டு நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே’ என போட்டி முடிந்த பின் ரஹானேவே பட்டவர்த்தனமாக இதை வெளிப்படுத்தினார். 

`கோலி கூக்ளியில் வீக்’ என ராஜஸ்தான் ராயல்ஸ் டெக்னிக்கல் டீம் ஆய்வு செய்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் கோலிக்கு வீசிய முதல் பந்தே கூக்ளி. இன்சைட் எட்ஜ் இருக்கும் என்பதால் ரிவ்யூ போகவில்லை. ஆனால், அடுத்த பந்திலேயே மேஜிக்கை நிகழ்த்திவிட்டார் ஷ்ரேயாஸ். எது கோலியின் டிரேட்மார்க் ஷாட்டோ அதையே ஆடத் தூண்டி, அதை வைத்தே சோலியை முடித்துவிட்டார். எது பலமோ அதுவே சில நேரங்களில் பலவீனமும்கூட. ஆம், கோலியின் பலம் கவர் டிரைவ். நேற்று அதுவே பலவீனமும்கூட.

`ஷ்ரேயாஸ் மட்டுமில்லை, ரஷித் கான், அடில் ரஷித், சோதி, ஆடம் ஜம்பா எனக் கடந்த ஓராண்டாக இவர்களது கூக்ளியில், கோலியின் அரண் நொறுங்கிக்கொண்டிருக்கிறது’ என ட்விட்டரில் ஒருவர் கமென்ட் அடித்திருந்தார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனிடம் விக்கெட்டை பறிகொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து ஜெயித்த கோலி, உலகக் கோப்பைக்கு முன் உடனடியாக இந்த கூக்ளி பலவீனத்தையும் சரிசெய்ய வேண்டியது அவசியம். கோலி மட்டுமல்ல, ஏபி டிவில்லியர்ஸ், ஹெட்மயர் என ஆர்.சி.பி-யின் டாப் ஆர்டரை காலி செய்தது ஷ்ரேயாஸின் கூக்ளி. ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவை பெவிலியனுக்கு அனுப்ப ஆர்.சி.பி பெளலர் சாஹல் கையில் எடுத்த ஆயுதமும் கூக்ளி. நேற்று ஒரே கூக்ளி மயம்.

அடுத்தவன் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். கோலிக்கு இன்னமும் அது கைகூடவில்லை. சேப்பாக்கம் பிட்ச்சை கணித்து அதற்கேற்ப ஸ்பின்னர்கள் அதிகம் இருக்கும்படி பிளேயிங் லெவனை தேர்வு செய்தார் தோனி. கோலி அப்படியே உல்டா. நேற்று ரஹானே பிட்ச் எப்படி இருக்கும் என்பதை மூன்றாவது ஓவரிலேயே கணித்துவிட்டார். ஸ்லோ பிட்ச், ஸ்பின் எடுபடும் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால்தான், கிருஷ்ணப்பா கெளதமை பவர்பிளே முடிவதற்குள் மூன்று ஓவர்களை வீசச் செய்து, பவர்பிளே முடிந்தபின் ஷ்ரேயாஸ் கோபாலை விட்டு ஆட்டம் காட்டினார். இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கோலி, சாஹலிடம் எட்டாவது ஓவரில்தான் பந்தைக் கொடுத்தார். மொயின் அலி பந்துவீச வந்தது 12-வது ஓவரில்..!

சாஹல் வீசிய நான்காவது பந்திலேயே ரஹானே அவுட். இருப்பினும், இங்கு ஸ்கெட்ச் ரஹானேவுக்கு அல்ல பட்லருக்கு. ரிஸ்ட் ஸ்பின்னருக்கு எதிராக பட்லர் தடுமாறுவார் என்பதைப் புரிந்து, முந்தைய மேட்ச்சில் ரஷித் கானிடம் பந்தைக் கொடுத்தார் கேன் வில்லியம்சன். இரண்டே பந்துகளில் பட்லர் விக்கெட்டை எடுத்து, கொடுத்த அசைன்மென்ட்டை பக்கவாக நிறைவேற்றினார் ரஷித் கான். அதுவும் பவர்பிளே முடிவதற்குள். வில்லியம்சனுக்குத் தெரியும் பட்லர் நின்றால் ரன்ரேட் எப்படி இருக்கும் என்று. பஞ்சாபுக்கு எதிராக பட்லர் அடித்ததை வில்லியம்சன் பார்த்திருப்பார். இந்த இடத்தில் கோலி மட்டுமல்ல, எதிரணியின் முக்கிய பேட்ஸ்மேன்களின் பலவீனத்தைக் கண்டறிந்து, டீம் மீட்டிங்கில் பேச வேண்டியது ஆர்.சி.பி வீடியோ அனலிஸ்ட் டீமின் கடமை.

பிளேயிங் லெவனை மாற்றுகிறார், பேட்டிங் ஆர்டரை மாற்றுகிறார்… ஆனால், அணித் தேர்வில் இன்னும் கோலி ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை. வின்னிங் லெவனை அவரால் தேர்வு செய்யமுடியவில்லை. உதாரணத்துக்கு நேற்று வாஷிங்டன் சுந்தரைத் தேர்வு செய்திருந்தால், முதல் 10 ஓவருக்குள் சாஹல், வாஷிங்டன் சுந்தர் இருவரையும் அடுத்தடுத்து வீசச் செய்து வித்தைக் காட்டியிருக்கலாம். வாஷிங்டன் ஓப்பனிங் இறங்குவதற்கும் நல்ல சாய்ஸ். பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்தக்கூடிய, எந்த இடத்திலும் பேட் செய்ய தயாராக (குறிப்பாக ஓப்பனிங்) இருக்கும் ஒருவரை ஏன் பெஞ்சிலேயே வைத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை. கடந்த சீஸனிலும் இதேபோலத்தான், காலம் கடந்து களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த ஆல்ரவுண்டருக்குப் பதிலாக நேற்று பேக்அப் விக்கெட் கீப்பர் ஆக்ஷ்தீப் நாத்துக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

இவ்வளவு நடந்தும் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் கோலி. இன்னும் 20 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்கிறார். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோம் எனச் சமாளிக்கிறார். இங்கே வாய்ப்புகள் என்று கோலி சொல்வது ரஹானே கொடுத்த கேட்ச்சை ஸ்லிப்பில் அவர் மிஸ் செய்ததையும் சேர்த்துதான். இன்னொரு விஷயம்... `ஸ்லிப்பில் நாம் பிடிப்பதைவிட அதிக கேட்ச்களை மிஸ் செய்கிறோம்’ என்பதையும் கோலி புரிந்துகொள்ள வேண்டும்.

ராஜஸ்தானிடம் தோல்வியடைந்த பின், `கன்ஸிஸ்டன்ட் லெவன் அல்லது வெற்றிக்கான அணியைக் கண்டறியும் வரை மாற்றங்களை நிகழ்த்துவது... இதில் எது உங்கள் இலக்கு’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, `வெற்றி பெறுவதற்கேற்ப மாற்றங்கள் தொடரும்’ எனப் பூதாகரமாகப் பதில் அளித்தார் கோலி. நல்ல பேட்ஸ்மேன்கள் இல்லை. திறமையான பெளலர்கள் இல்லை, மேட்ச் வின்னர்கள் இல்லை என்று சொல்வதைவிட, இருப்பவர்களை மேட்ச் வின்னர்களாக மாற்றுவதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு!

அடுத்த கட்டுரைக்கு