Published:Updated:

வின்டேஜ் தோனி... பௌலர்களை பழிவாங்கிய பனி! #CSKvsRR

முதல் மேட்ச்சில் பௌலர்களுக்கு கைகொடுத்தது பிட்ச். நேற்று மேட்ச்சில் அவர்களை பழிவாங்கியது பனி. ஆட்டம் தொடங்கும் முன்பே பனியும் வெப்பக்காற்றுமாக படுத்தி எடுத்தன.

வின்டேஜ் தோனி... பௌலர்களை பழிவாங்கிய பனி! #CSKvsRR
வின்டேஜ் தோனி... பௌலர்களை பழிவாங்கிய பனி! #CSKvsRR

ஐ.பி.எல்லின் முதல் வார இறுதியில் சென்னை அணி மட்டுமே தோல்வியைத் தொடாமல் தப்பித்தது. நேற்று தொடங்கிய இரண்டாம் வாரத்தில் எப்படியாவது சென்னையைத் தோற்கடித்துவிட வேண்டும் என்ற முடிவோடுதான் களமிறங்கியது ராஜஸ்தான். போக, முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி என்பதால் இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்து பாசிட்டிவாக நகரமுடியும் என்ற நெருக்கடி வேறு. அதனால் டாஸ் ஜெயித்த ரஹானே சென்னை பிட்ச்சை மனதில் வைத்து ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜனுக்கு பதில் சான்ட்னர். அந்த அணியில் வலதுகை பேட்ஸ்மேன்கள் நிறைய என்பதால் இடது கை ஸ்பின்னர்!

முதல் மேட்ச்சில் பௌலர்களுக்குக் கைகொடுத்தது பிட்ச். நேற்று மேட்ச்சில் அவர்களைப் பழிவாங்கியது பனி. ஆட்டம் தொடங்கும் முன்பே பனியும் வெப்பக்காற்றுமாகப் படுத்தி எடுத்தன. அதன் பலன் ஆட்டத்திலும் தெரிந்தது. பந்து முதல் சில ஓவர்களுக்கு பேட்ஸ்மேன் பக்கம் சிக்கவே இல்லை. முதல் ஓவரில் ஒரே ஒரு ரன் மட்டும்தான். இரண்டாவது ஓவரின் கடைசி பாலில் ராயுடு அவுட்டாக அது விக்கெட் மெய்டன். நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த கையோடு வாட்சனும் அவுட்டாக ஸ்கோர் 14/2. சென்னை ரசிகர்களுக்கு ஆர்.சி.பிக்கு நடந்தது எல்லாம் கண்முன் வந்து போனது. 

ஜாதவ் வந்த வேகத்தில் அடுத்தடுத்து  பௌண்டரிகள் அடித்து பற்ற வைத்தார். `ஹே.......' எனக் கூட்டம் கத்தி முடிப்பதற்குள் அவரும் அவுட்! ஸ்கோர் 27/3. மெரினா தொடங்கி துறைமுகம் வரை அதிர க்ரவுண்டிற்குள் நுழைந்தார் தோனி. விக்கெட்கள் வெகு சீக்கிரமே விழுந்துவிட்டதால் ரெய்னா, தோனி இருவருமே பொறுமையாகத்தான் ஆடுவார்கள் எனத் தெரிந்துவிட்டது. அதற்கேற்றார்போல, அடுத்த ஐந்து ஓவர்களில் வெறும் 28 ரன்களே எடுத்தார்கள் இருவரும். பத்து ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 55/3.

பட்லர், சாம்சன், ரஹானே என முதல் மூன்று பேரும் செம ஃபார்மில் இருப்பதால் அதிக ரன்கள் எடுத்தால் மட்டுமே டிபெண்ட் செய்யமுடியும் என்ற நிலை. பனி முதல் இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் அதிகமிருக்கும் என்பதால் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக வேறு இருக்கும். ஆனால், ரன்களோ வந்தமாதிரியே இல்லை. தோனி, ரெய்னா என்ற இரண்டு பெயர்கள் தந்த நம்பிக்கை மட்டுமே இருந்தது ரசிகர்களிடத்தில்.

11வது ஓவரில் 11 ரன்கள் வர நிமிர்ந்து அமர்ந்தது அரங்கு. 12வது ஓவரில் 12 ரன்கள். உனத்கட் தான் எங்களின் இலக்கு என அவரின் முதல் ஓவரிலேயே தெரிவித்தது சென்னை அணி. அதற்கடுத்த ஓவரை ஸ்ஓக்ஸ் அபாரமாக வீச வெறும் ஐந்து ரன்கள் மட்டும்தான். 14வது ஓவர் மீண்டும் உனத்கட். `என்னை அவ்வளவு ஈஸியா டார்கெட் பண்ணமுடியாது' என விலகி ஆட முயன்ற ரெய்னாவை போல்டாக்கினார் உனத்கட். 14 ஓவர்கள் முடிவில் 88/4. ரன்ரேட் ஆறு மட்டுமே.

அதற்கடுத்த மூன்று ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தார்கள் பிராவோவும் தோனியும். ஆனாலும் ஸ்கோர் பிரமாதமாக எல்லாம் ஏறவில்லை. 115 ரன்கள்தாம். 150-ஐத் தாண்டினால் ஓரளவிற்குச் சமாளிக்கலாம் எனக் கருத்து சொல்ல ஆரம்பித்தார்கள் வல்லுநர்கள். ஆனால், dhoni had other ideas! குல்கர்னி வீசிய 18வது ஓவரை குறித்து வைத்துக்கொண்டார்கள். தோனி அபாயகரமான பினிஷர் என்பதால் பதற்றமான குல்கர்னி எக்ஸ்ட்ராக்களை கொடுக்க, சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் தோனி. ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸ் அடித்து ப்ராவோவிடம் ஸ்ட்ரைக் கொடுக்க அவர் தன் பங்கிற்கு பத்து ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள். முதல் 3 ஓவர்களுக்கும் சேர்த்தே 13 ரன்கள்தாம்  கொடுத்திருந்தார் குல்கர்னி.

சூப்பராக பந்து வீசிய ஆர்ச்சரிடம் 19வது ஓவரைக் கொடுத்தார் ரஹானே. கேப்டன் ஆசைக்கேற்ப ப்ராவோவை பெவிலியனுக்கு அனுப்பினார் ஆர்ச்சர். புது பேட்ஸ்மேன்கள் வந்தால் ரன்ரேட் பாதிக்கும் என ஆர்ச்சர் ஓவரை சிங்கிள்கள் தட்டி முடித்துவைத்தார் தோனி. வெறும் 8 ரன்கள்தான். தோனி ஓவரின் முதல் பாலில் அடித்த பௌண்டரி மூலம் அரைசதம் கடந்தார். சென்னை பேட்ஸ்மேன் இந்த ஐ.பி.எல்லில் அடிக்கும் முதல் அரைசதம் இது.

கடைசி ஓவர். 160 எப்படியும் உறுதியாகவிட்டது என ரசிகர்கள் குஷியான போது இறங்கி வந்து பொளேரன ஒரு சிக்ஸ் அறைந்தார் ஜடேஜா. எகிறியது கூட்டம்! உனத்கட்டின் கான்ஃபிடென்ஸ் அந்த பந்திலேயே காலி. ஜடேஜா ஸ்ட்ரைக்கை தோனியிடம் கொடுக்க, எகிறி வந்த ஸ்லோ பாலை ஒரு சாத்து சாத்தினார். பேக்வர்ட் ஸ்கொயரில் சிக்ஸ்! ஐந்தாவது பந்து லென்த் பால், அதை லாங் ஆஃப்பில் சிக்ஸ் அனுப்பினார் தோனி. கூட்டத்தின் கொண்டாட்டத்திற்கு சொல்லவா வேண்டும்? கடைசி பந்து... சிக்ஸ்ஸ்ஸ்ஸ்! லாங் ஆனில் பறந்தது. வின்டேஜ் தோனி.... சென்னை மண்ணில் பலகாலம் கழித்து அவரின் அவதாரம்! கடைசி ஓவரில் மட்டும் 28 ரன்கள். ஸ்கோர் - 175. தோனியின் பங்கு 75 ரன்கள். முதல் 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த தோனி அடுத்த 16 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார்.

தோனி கொடுத்த உற்சாகத்தில் களமிறங்கிய சென்னை அணி இரண்டாவது பந்திலேயே ரஹானேவை கிளப்பிவிட்டது. `ஃபீல்டிங் ஒண்ணுக்காகவே இந்தப் பையனை டீம்ல வச்சுக்கலாம்' என்பதுபோல செம கேட்ச் ஒன்றை லபக்கினார் ஜடேஜா. விக்கெட் மெய்டன். சஹாரின் அடுத்த ஓவரில் சாம்சனும் காலி. இந்த முறை அதேபோல கேட்ச் பிடித்தது ரெய்னா. தாகூரின் அடுத்த பாலிலேயே பட்லரும் நடையைக் கட்டினார். ஸ்கோர் 14/3. ஃபார்மில் இருந்த மூன்று பேட்ஸ்மேன்களும் அவுட்.

சரியான சமயம் என சான்ட்னரைக் கொண்டுவந்தார் தோனி. ஆனால் பனி சதி செய்ய வழுக்கியபடி பறந்து பேட்ஸ்மேன்களுக்கு வாகாக அமைந்தது. நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார் த்ரிபாதி. 17 ரன்கள் அந்த ஓவரில்! என்ன சிக்கல் எனச் சென்னை பௌலர்களுக்கு புரியத் தொடங்கியது. அதன்பின் மூன்று ஓவர்களில் 27 ரன்கள். ஜடேஜாவிற்கும் பந்து சரியாக அமையவில்லை. சிக்கலான நேரத்தில் தாஹிரை இறக்கினார் தோனி. மூக்கு மேல ராஜா! த்ரிபாதி அவுட். ப்ராவோவையும் தாஹிரையும் அடுத்தடுத்து பயன்படுத்தி ரன்ரேட்டைக் குறைத்தார் தோனி.

இருவரும் வீசிய ஐந்து ஓவர்களில் 25 ரன்கள்தாம். போதாக்குறைக்கு ஸ்மித்தையும் திருப்பியனுப்பியிருந்தார் தாஹிர். ஆறு ஓவர்களில் 79 ரன்கள் எடுக்கவேண்டும். ஸ்டோக்ஸ் மட்டுமே ஆபத்தான பேட்ஸ்மேன். ஆனாலும் ஈஸியாக விட்டுக்கொடுக்கவில்லை ஸ்டோக்ஸ். ரன்ரேட் மேலும் குறைந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார். மறுமுனையில் கெளதமும் கிளம்ப, ஆர்ச்சர் களமிறங்கினார். இறங்கிய வேகத்தில் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸ். ஆட்டம் திரும்ப சூடுபிடித்தது. பிராவோ வீசிய 18வது ஓவரை இருவரும் போட்டு வெளுக்க 19 ரன்கள். தாகூரின் அடுத்த ஓவரில் 13 ரன்கள். சட்டென ராஜஸ்தான் பக்கம் கடற்காற்று வீசத் தொடங்கியது.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. அனுபவம் வாய்ந்த பிராவோவை அதற்கு முந்தைய ஓவரில்தான் வெளுத்திருந்தார்கள். ஆனாலும் தான் ராஜா என்பதை நிரூபித்தார் பிராவோ. முதல் பந்திலேயே ஸ்டோக்ஸ் அவுட். அடுத்த வந்த ஸ்ரேயாஸ் கோபால் பந்துகளைச் சாப்பிட வெற்றி சென்னை வசமானது. வெறும் 3 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில்! சென்னைக்கு ஹாட்ரிக் வெற்றி. பட்டியலில் ஃபர்ஸ்ட் ரேங்க். அனுபவம் வெற்றிக்கு எந்தளவிற்குக் கைகொடுக்கும் என மீண்டும் நிரூபித்தது சென்னை. ஆட்டநாயகன் விருதைச் சிரித்தபடி பெற்றுக்கொண்டார் தோனி.