Published:Updated:

ஐ.பி.எல் 2019-ன் முதல் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! - ஹைதராபாத்துக்கு 199 ரன்கள் இலக்கு #SRHvRR

ஐ.பி.எல் 2019-ன் முதல் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! - ஹைதராபாத்துக்கு 199 ரன்கள் இலக்கு #SRHvRR
ஐ.பி.எல் 2019-ன் முதல் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! - ஹைதராபாத்துக்கு 199 ரன்கள் இலக்கு #SRHvRR

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. 

ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் 8வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் இன்றைய போட்டியில் களமிறங்கினார்.  

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸை கேப்டன் ரஹானே மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடங்கினர். இந்த ஜோடியை ரஷீத் கான், நான்காவது ஓவரிலேயே பிரித்தார். 8 பந்துகளில் 5  ரன்கள் எடுத்திருந்த பட்லர், ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்து வெளியேறினார். 
இரண்டாவது விக்கெட்டுக்குக் கைகோத்த ரஹானே - சஞ்சு சாம்சன் ஜோடி ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. இருவரும் அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. 49 பந்துகளைச் சந்தித்த ரஹானே, 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரஹானே ஆட்டமிழந்த பின்னர் அதிரடியில் சஞ்சு சாம்சன் மிரட்ட, ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக புவனேஷ்வர் குமார் வீசிய 18வது ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 24 ரன்களை சஞ்சு சாம்சன் குவித்தார். 34 பந்துகளில் அரைசதமடித்த சஞ்சு சாம்சன், 54 பந்துகளில் சதமடித்து அசத்தினார். நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் சதம் இதுவே. கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்கப்படவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 55 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.