Published:Updated:

14 டாட் பால்கள்... பும்ரா ஏன் மும்பையின் மேட்ச் வின்னர்?! #RCBvMI

14 டாட் பால்கள்... பும்ரா ஏன் மும்பையின் மேட்ச் வின்னர்?! #RCBvMI
14 டாட் பால்கள்... பும்ரா ஏன் மும்பையின் மேட்ச் வின்னர்?! #RCBvMI

முதல் போட்டியில் பும்ராவின் தோளில் அடிபட்டதும் எல்லோரும் பதறினார்கள்... ஏன் இந்தப் பதற்றம், மும்பைக்கு, இந்திய அணிக்கே கூட இருந்தது. உலகக் கோப்பைக்கு பும்ரா ஏன் அவ்வளவு முக்கியம்? எல்லாக் கேள்விகளுக்கும், பதற்றத்துக்கும் களத்தில் பதில் சொன்னார் பும்ரா. 4 ஓவரில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள். மொத்தம் 14 டாட் பால்கள்.

சென்னை - பெங்களூரு போட்டியில் தோனி, கோலி இருவருமே சேப்பாக்கம் பிட்ச் மீது அதிருப்தி தெரிவித்தார்கள். பெங்களூரு - மும்பை போட்டியில் கோலி, ரோஹித் இருவருக்கும் அம்பயர் முடிவில் திருப்தியில்லை. `இது கிளப் லெவல் போட்டி அல்ல; ஐ.பி.எல் போட்டி. அம்பயர்கள் கண்களைத் திறந்துவைத்து உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்’ எனக் காட்டமானார் கோலி. `ஆமா, ஆமா எங்களுக்கும் இப்படித்தான் பும்ரா ஓவர்ல ஒரு வைடு கொடுத்துட்டாரு. இதெல்லாம் ரொம்பத் தப்பு’ என ரோஹித் தன்னிலை விளக்கமளித்தார். என்ன செய்ய கிரிக்கெட் இப்படித்தான்... சில சமயங்களில் வெற்றி, தோல்வி களத்தில் நேரடிப் பங்களிப்பு இல்லாதவர்களின் மூலமும் (மேட்ச் ஃபிக்ஸிங் உட்பட) நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. இட்ஸ் ஆல் இன் தி கேம். #RCBvMI

மும்பை, ஆர்.சி.பி இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், முதல் வெற்றிபெறும் முனைப்பில் இரு அணிகளும் பெங்களூருவில் நேற்று மோதின. கடந்த சீசனில் ஆலோசகராக இருந்த மலிங்கா மீண்டும் பெளலர் அவதாரம் எடுத்தார். பென் கட்டிங்குக்குப் பதிலாக மயங்க் மார்க்கண்டே பிளேயிங் வெலனில் இடம் பிடித்தார். ஆச்சர்யம்தான், கோலி டீமை மாற்றவில்லை.

முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு டி காக் - ரோஹித் ஜோடி, பவர்பிளே வரை சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொண்டது. ஆஃப் டிரைவ், தன் பிரத்யேக புல் ஷாட்டில் சிக்ஸர் என ரோஹித் ஒருபக்கம் மிரட்ட, டி காக் அலட்டல் இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தார். அவரை சொல்லி வைத்துத் தூக்கினார் சாஹல். பவர்பிளே முடிந்து சாஹல் வீசிய முதல் பந்தையே ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார் டி காக். `ஸ்பின்னை நன்றாக ஆடத் தெரிந்திருந்தால் மட்டுமே துணைக் கண்டங்களில் தாக்குப்பிடிக்க முடியும்’ எனப் போட்டி தொடங்கும் முன்பே சொல்லியிருந்தார், அந்தத் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்.

ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஸ்வீப்தான் ஒரே வழி எனக் கணித்திருப்பார் போல. ஆனால், ஸ்வீப் எல்லா நேரமும் கைகொடுப்பதில்லை. ஸ்வீப் சரியாக மாட்டவில்லை எனில் பேட்ஸ்மேன் மாட்டிக்கொள்வார் என்பதை சாஹல் நன்கு புரிந்து வைத்திருந்தார். அதனால்தான், தான் வீசிய முதல் பந்திலேயே டி காக்கின் மனநிலையைப் புரிந்துகொண்டார். இரண்டாவது பந்தை அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசினார். கட் ஷாட் மூலம் இரண்டு ரன்கள் எடுத்தார் டி காக். அடுத்த பந்து லெக்ஸ்டம்ப்புக்கு வெளியே... இதையும் ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். போல்டு. டி காக் அவுட். ஆர்.சி.பி-க்கு முதல் திருப்பம்.

யுவராஜ் வந்ததும் அடுத்த திருப்பம். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் யுவி 53 ரன்கள் அடித்தார் என்றாலும், அதில் திருப்தியில்லை. ஏகப்பட்ட டாப் எட்ஜ். மீஸ்ஃபீல்டு. ஆனால், நேற்று அப்படியில்லை. சாஹல் ஷார்ட் லென்த்தில் வீசியதை அலட்டாமல் டீப் ஸ்கொயர் லெக் பக்கம் தூக்கி அடித்தார். சாஹல் பதறவில்லை. அடுத்த பந்தை இன்னும் கொஞ்சம் ஏத்தி பிட்ச் செய்தார். லட்டு மாதிரி வந்தது. விடுவாரா யுவி? சைட் ஸ்கிரீனுக்கு மேலே பறக்கவிட்டார். சாஹல் மனசைத் தளரவிடவில்லை. அடுத்த பந்து கொஞ்சம் ஸ்லோ... அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைன். ஓர் அடி விலகி லாங் ஆன்திசையில் ஓர் இழு. கேலரியின் இரண்டாவது அடுக்கில் பட்டுத் தெறித்தது பந்து. `வின்டேஜ் யுவி’ எனத் தொண்டை கிழிய கத்தினர் ரசிகர்கள். ட்விட்டரில் `ஹாட்ரிக் சிக்ஸ்டா’ என ஸ்மைலிகள் கண் சிமிட்டின. சாஹல் இப்போதும் அசரவில்லை. `இருக்கு இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கு’ என எல்லோரும் யுவி 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிப்பார் என எதிர்பார்த்தனர். நான்காவது பந்து. குட் லென்த், ஐந்தாவது ஸ்டம்ப் லைன். அதையும் தூக்கி அடித்தார். இந்த முறை லாங் ஆஃபில் இருந்த சிராஜ் கேட்ச் பிடித்து விட்டார். மின்னல் போல் மறைந்தார் வின்டேஜ் யுவி.

கால்பந்தில் ஒரு விஷயம் சொல்வார்கள். கோல் வாங்கிய பின் ஒரு கோல் கீப்பர் எவ்வளவு வேகமாக அந்த கோலை மறக்கிறானோ, அவனால்தான் அடுத்து கோல் விழாமல் தடுக்க முடியும். சிக்ஸர்கள் விட்டுக்கொடுக்கும் பெளலர்களுக்கும் இது பொருந்தும். குறிப்பாக சாஹலுக்கு. `சிக்ஸர்கள் போவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். விக்கெட்தான் என் இலக்கு’ என ஏற்கெனவே அவர் சொல்லியதைத்தான், மும்பை பேட்டிங் முடிந்த பின்பும் திரும்பச் சொன்னார். அதனால்தான் அவரால் நான்கு விக்கெட் வீழ்த்த முடிந்தது. அதில் மூன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்ஸ்மேனை பெரிய ஷாட் ஆடத் தூண்டும் பந்துகள்.

சூர்யகுமார் யாதவ் அந்த வலையில் விழுந்தார் எனில் பொல்லார்டும் அதே தவற்றைச் செய்தார். அதிலும் பொல்லார்டு அவுட்டானதை மும்பை ரசிகர்கள் ஜீரணிக்கவே மாட்டார்கள். முந்தைய பந்தை லெக் சைடு வைடு போடுவது போல போட்டு, அடுத்த பந்தை ஆஃப்  சைடு ரொம்ப வெளியே, அதேநேரத்தில் பெரிய ஹிட் அடிக்கத் தூண்டும் வகையில் போட்டு பொல்லார்டு விக்கெட்டைத் தூக்கினார் சாஹல். அந்தப் பந்தை அடிக்காமல் விட்டிருந்தால், அது வைடு போயிருக்கும். சாஹலுக்கும் அது கடைசிப் பந்து. ஒரு வகையில் பொல்லார்டு நல்லதுதான் செய்திருக்கிறார். `அடுத்த மேட்ச் என்னை பெஞ்சில் உட்கார வையுங்கள்’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

ரோஹித் ஷர்மா கிரிஸிலிருந்து முன்வந்து புல் ஷாட் சிக்ஸர் அடித்தார் எனில், டெத் ஓவர்களில் ஹர்டிக் பாண்டியா கிரிஸில் கொஞ்சம் உள்வாங்கி நின்று அடித்த சிக்ஸர்கள் அட்டகாசம். அதிலும் சைனி பந்தில் பேக் ஃபுட்டில் முழு பேலன்ஸ் செய்து டீப் மிட் விக்கெட்டில் பறக்க விட்ட சிக்ஸரும், முகமது சிராஜின் கடைசி ஓவரில் ஸ்டேடியத்துக்கு வெளியே அடித்த சிக்ஸரும், டிபிகல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் Muscle power சிக்ஸர்கள். கடைசி கட்டத்தில் பாண்டியா 14 பந்தில் 32 ரன்கள் வெளுக்க, மும்பை 187 ரன்கள் எடுத்தது.

சேஸிங்கில் மொயின் அலியை ஓபனிங் இறக்கிவிட்டு, ஒன்டவுன் வந்தார் கோலி. இதுதான் அவரது இடம். இதை மாற்றக்கூடாது. மொயின் அலியையும் குறைசொல்ல முடியாது. மெக்ளினகன் பந்தில் அவர் பறக்கவிட்ட அந்த ஃப்ளிக் போதும். அவரைத் துல்லிய த்ரோவில் காலி செய்தார் ரோஹித். பார்த்திவ் தன் பங்குக்கு 31 ரன்கள் சேர்க்க, பவர்பிளே முடிவில் பெங்களூருவின் ஸ்கோர் 60/1.

கோலி – டி வில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப். பொன்னான தருணம். கோலி வந்ததும் வராததுமாக பும்ரா பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி, பாண்டியாவின் பந்தில் அடுத்தடுத்து பவுண்டரி அடிக்க, ஆர்சிபியின் கான்ஃபிடன்ட் லெவல் அதிகரித்தது. 9 பந்தில் 20 ரன்கள் என கோலி அமர்க்களமாக இன்னிங்ஸை ஆரம்பித்தார் எனில், டி வில்லியர்ஸ் முதல் பந்திலேயே அவுட்டாக இருந்தார். மயங்க் மார்க்கண்டே பந்தில் டி வில்லியர்ஸ் பேட்டில் பட்டு எட்ஜாகி சென்றதை ஸ்லிப்பில் இருந்த யுவராஜ் கோட்டை விட்டார். ஒருவேளை பெங்களூரு ஜெயித்திருந்தால் யுவியின் அந்த டிராப்தான் காரணம் என்று சொல்லியிருப்பார்கள்.

இது டி வில்லியர்ஸ் இயல்பு இல்லை. எவ்வளவு பதற்றமான சூழல் என்றாலும் தன் ஆட்டத்தை இயல்பாக ஆடுவார். ஆனால், நேற்று முதல் பந்திலேயே எதிரணிக்கு சான்ஸ் கொடுத்துவிட்டோம் என்ற பதற்றம் தெரிந்தது. செட்டிலாக டைம் எடுத்துக் கொண்டார். குறிப்பாக, ஸ்பின்னை எதிர்கொள்வதில் தடுமாற்றம் தெரிந்தது. முதல் 11 பந்துகளில் 7 ரன்கள். கோலியின் இன்னிங்ஸுக்கு அப்டியே உல்டா. அதனால்தான், மயங்க் மார்க்கண்டே பந்தில் டி வில்லியர் சிக்ஸர் அடித்தபோது, தான் ஓர் உலக சாதனை படைத்தது போல துள்ளிக் குதித்தார் விராட்.

கோலி 5,000 ரன்களைக் கடந்தார். கோலி – ஏபிடி ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்து விட்டது. 42 பந்துகளில் 75 ரன்கள் தேவை. இதெல்லாம் டி-20-யில் ஒரு விஷயமே இல்லை. அதிலும் இரண்டு உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆனாலும், யாரும் ஆர்.சி.பி ஜெயிக்கும் என்று பெட் கட்டியிருக்க மாட்டார்கள். ஏனெனில், டெத் ஓவர்களில் பயன்படுத்த மலிங்கா, பும்ரா எனும் பிரமாஸ்திரங்களை வைத்திருந்தார் ரோஹித். அதிலும், பும்ராவின், அந்த ஸ்பெல். ப்ப்பா!

உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு விஷயம் புரியும். ஒருபுறம் நம்பர் 1 பேட்ஸ்மேன். மறுபுறம் நம்பர் 1 பெளலர். இதில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வெற்றி என்ற மாதிரியான சூழல். ஸ்போர்ட்ஸ் அப்படித்தான்... சில சமயங்களில் அணிகளுக்கு இடையிலான மோதல் தனி நபர் மோதலாகக் கட்டமைக்கப்படும்.14-வது ஓவரில் அந்தப் பலப்பரிட்சையும் நடந்தது. வேறு வழியில்லை அடித்து ஆட வேண்டிய கட்டாயம். ஷார்ட் பால், கொஞ்சம் பெளன்சராக வந்த பந்தில் புல் ஷாட் ஆட முயன்று பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி. கிட்டத்தட்ட, இந்த இடத்தில் பும்ரா வென்றுவிட்டார். `பும்ரா பந்தில் நான் அப்படி ஆடியிருக்கக் கூடாது’ என விராட் கோலியே ஒப்புக் கொண்டார்.

முதல் போட்டியில் பும்ராவின் தோளில் அடிபட்டதும் எல்லோரும் பதறினார்கள்... ஏன் இந்தப் பதற்றம், மும்பைக்கு, இந்திய அணிக்கே கூட இருந்தது. உலகக் கோப்பைக்கு பும்ரா ஏன் அவ்வளவு முக்கியம்? எல்லாக் கேள்விகளுக்கும், பதற்றத்துக்கும் களத்தில் பதில் சொன்னார் பும்ரா. 4 ஓவரில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள். மொத்தம் 14 டாட் பால்கள். அதிலும் 17-வது ஓவரில் ஹெட்மயர் விக்கெட்டையும் எடுத்து 4 டாட் பால்கள். 19-வது ஓவரில் கிரந்தோமை பெவிலியன் அனுப்பி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அப்போதே மேட்ச் மும்பை பக்கம் வந்துவிட்டது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற சூழலில், மலிங்கா அதை டிஃபண்ட் செய்துவிட்டார். கடைசிப் பந்தில் மலிங்கா நோ பால் வீசியதை அம்பயர் ரவி உடனடியாக கவனிக்கவில்லை. இது இந்த சீசனின் அடுத்த சர்ச்சை.

முதன்முறையாக ஏ பி டி வில்லியர்ஸ் களத்தில் அவுட்டாகாமல் இருந்தும் ஆர்.சி.பி தோற்றிருக்கிறது. இதற்கு முன் 15 முறை அவர் ஆர்.சி.பி-க்காக சேஸிங்கில் வெற்றி தேடித் தந்திருக்கிறார். ஏற்கெனவே சொன்னது போல, கோலி வெர்சஸ் பும்ரா மோதலில், 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து விட்டார் கோலி. ஆனால், பும்ரா வெர்சஸ் டி வில்லியர்ஸ் மோதலில் 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார் டி வில்லியர்ஸ். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய டி வில்லியர்ஸ் செட்டிலானதும் மலிங்கா, பாண்டியா என மற்றவர்களின் ஓவர்களைப் பிரித்து மேய்ந்தார். டிசைன் டிசைனாக 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். 41 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனால், அவரை பும்ரா ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை. அதனால்தான், அவர் மேட்ச் வின்னர்.

மேட்ச் முடிந்ததும், `ஐ.பி.எல் போட்டிகளில் நான் பார்த்த பெஸ்ட் மேட்ச் இது’ என ஹர்ஷா போக்ளே ட்வீட் செய்திருந்தார். ஆம், மறுப்பதற்கில்லை!

அடுத்த கட்டுரைக்கு