Election bannerElection banner
Published:Updated:

பந்தை சிதறடித்த பன்ட்... பதற்றத்தில் கோட்டைவிட்ட மும்பை! #MIvDC

பந்தை சிதறடித்த பன்ட்... பதற்றத்தில் கோட்டைவிட்ட மும்பை! #MIvDC
பந்தை சிதறடித்த பன்ட்... பதற்றத்தில் கோட்டைவிட்ட மும்பை! #MIvDC

டெல்லி அணியில் ஐந்தே பேட்ஸ்மேன்கள். மும்பையிலோ முரட்டு ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனுக்குப் பதிலாக யுவராஜ் சிங். அணித்தேர்வு குறித்து டாஸின்போதே சலசலப்புக் கிளம்பியது. ஆனால்.. ஐ.பி.எல்லில் எதையுமே கணிக்க முடியாதே.

ஐ.பி.எல்-லில் முதல் சில போட்டிகளை அணிகள் டேக் இட் ஈஸியாகத்தான் எடுத்துக்கொள்ளும். அவர்களின் பிரதான நோக்கம் `Enjoy the game’ என்பதாகவே இருக்கும். ஆனால், நேற்றைய போட்டி மும்பை, டெல்லி இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தது. காரணம், 11 ஆண்டுகளாக அவர்களைத் துரத்தும் சாபம் அப்படி! ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியை இவ்விரு அணிகளும் பெரும்பாலும் தோல்வியுடன்தான் தொடங்கியுள்ளன. சரியாகச் சொல்லப்போனால் 11 ஆண்டுகளுக்கான 11 போட்டிகளில் 4 தொடக்கப் போட்டிகளில் மட்டுமே வெற்றி. நேற்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி இந்தச் சோக சோதனைக்கு சோலோ ஓனராகிவிடும் என்பதால்தான் இந்த முக்கியத்துவம். #MIvDC

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் பீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியில் இங்க்ரமும் கீமோ பெளலும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். மும்பை அணியின் சர்ப்ரைஸ், ஜம்மு-காஷ்மீரின் வேகப்பந்து வீச்சாளரான 17 வயது ரஷிக் சலாம் இடம்பெற்றதுதான். மும்பை, சென்னை போன்ற அணிகளைப் பொறுத்தவரை ஐ.பி.எல் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏராளம் என்பதால் புது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது ரொம்பவே அபூர்வம். தொடர்ந்து 4 ஆண்டுகளாக பென்ச்சில் காத்திருக்கும் வீரர்களெல்லாம் மும்பையில் உண்டு. அந்த வகையில் ரஷிக்குக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக ரோகித்தைப் பாராட்டத்தான் வேண்டும். 

டெல்லி அணியில் ஐந்தே பேட்ஸ்மேன்கள். மும்பையிலோ முரட்டு ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனுக்குப் பதிலாக யுவராஜ் சிங். அணித்தேர்வு குறித்து டாஸின்போதே சலசலப்புக் கிளம்பியது. ஆனால், ஐ.பி.எல்-லில் எதையுமே கணிக்க முடியாதே! போட்டியின் முதல் பந்தை நோ பாலோடு தொடங்கினார் ரஷிக். ஆனாலும், அந்த ஓவரில் விட்டுக்கொடுத்தது வெறும் ஆறே ரன்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா அடுத்த ஓவரிலேயே அவுட்டாகி ஏமாற்றினார்.

அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 16 ரன்களில் நடையைக்கட்ட 29 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது டெல்லி. பத்தாண்டுகளுக்குப் பின் டெல்லிக்காகக் களமிறங்கும் ஷிகர் தவானும் 7 ஆண்டுகளுக்குப் பின் ஐ.பி.எல்-லில் களமிறங்கும் இங்க்ரமும் இணைந்து ஸ்கோரை மெதுவாக உயர்த்தினார்கள். வாகாக சிக்கும் பந்துகளைப் பவுண்டரிக்கு விரட்டி, மிச்ச பந்துகளைத் தட்டிவிட்டு சீராக ஸ்கோரை ஏற்றியது இந்த ஜோடி. 13வது ஓவரின் இறுதியில் அரை சதத்தை நூலிழையில் தவறவிட்டு அவுட்டானார் இங்க்ரம். ஸ்கோர் - 112/3.

அடுத்ததாகக் களமிறங்கிய பன்ட் தன் முதல் ஓவரில் எடுத்தது ஒரே ஒரு ரன்தான். `சரி, பையன் தடுமாறாப்ல போல’ என எல்லாரும் நினைத்த நேரத்தில் பந்துகளை சிதறடிக்கத் தொடங்கினார் பன்ட். பென் கட்டிங்கின் அடுத்த ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ்! அடுத்த முனையில் தவான் அவுட்டாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்துத் துவைத்தார் பன்ட். லெக் சைடில் சிக்ஸும், பவுண்டரியுமாக பந்து பார்வையாளர்களிடம் தஞ்சமடைந்துகொண்டே இருந்தது. 

பும்ரா, மெக்லேகனஹன், ரஷிக் என யார் பந்துவீசினாலும் பாரபட்சமே பார்க்காமல் வெளுத்தார் பன்ட். ஏழு சிக்ஸர்கள், ஏழு பவுண்டரிகள். 27 பந்துகளில் 78 ரன்கள். உலகின் அபாயகரமான பவுலராகக் கருதப்படும் பும்ராவின் கடைசி ஓவரில் 16 ரன்கள். அவரின் பால் ப்ளேஸ்மென்ட் கேப்டன் ரோகித் சர்மாவை ஓப்பனாகவே கோபப்பட வைத்தது. இன்னிங்ஸ் முடிவில் டெல்லியின் ஸ்கோர் 213 ரன்கள். மும்பையின் எல்லா பவுலர்களும் எகானமியும் பத்தைத் தாண்டியிருந்தது. பன்ட் களமிறங்கிய கடைசி ஆறு ஓவர்களில் மட்டும் 99 ரன்களைக் குவித்திருந்தது டெல்லி. இதை சேஸ் செய்தால் வான்கடேவில் ஐ.பி.எல்லில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகத்தான் இருக்கும். அதற்கான பேட்டிங் பலமும் மும்பையிடம் இருந்தது. 

ரோகித் ஷர்மாவும் டி காக்கும் ஓப்பனிங் ஜோடியாகக் களமிறங்கினார்கள். ட்ரென்ட் போல்டின் முதல் ஓவரில் ஐந்தே ரன்கள். ஒரு பெரிய இடைவேளைக்குப் பின் ஐ.பி.எல்லில் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் இஷாந்த் சர்மாதான் இரண்டாவது ஓவரை வீசினார். ஆறே ரன்கள். தன் அதிரடியை 3வது ஓவரில் தொடங்கியது மும்பை. போல்ட் வீசிய அந்த ஓவரில் 17 ரன்கள். எல்லாப் புகழும் டி காக்கிற்கே! அடுத்த ஓவரிலேயே ரோகித் ஷர்மாவை காலி செய்தார் இஷாந்த் சர்மா. ரன்ரேட் சட்டென பிரேக் அடித்தது. 2016-க்குப் பின் ஐ.பி.எல்லில் இஷாந்த் எடுக்கும் முதல் விக்கெட்.

ஆனாலும், இது போதாதென தன் மூன்றாவது ஓவரில் டி காக்கையும் பெவிலியன் அனுப்பினார் இஷாந்த். கடந்த ஆண்டு மிஸ்டர் கன்சிஸ்டென்ட் எனப் பெயர் வாங்கிய சூர்யகுமார் யாதவும் 2 ரன்களில் ரன் அவுட்டாக, காற்று டெல்லி பக்கம் வீச ஆரம்பித்தது. க்ரீஸில் இப்போது இருப்பது கடந்த ஆண்டு சோபிக்காத பொல்லார்டும் ஐ.பி.எல்லில் சாதித்திடாத யுவராஜும். இரண்டு பேரில் யாராவது ஒருவர் நின்றால்தான் வெற்றி என்ற நிலை.

பொல்லார்ட் முதலில் அதிரடியைத் தொடங்க, பின்னாலேயே சேர்ந்துகொண்டார் யுவராஜ். மூன்று ஓவர்களில் 40 ரன்களை விறுவிறுவென சேர்த்தார்கள் இருவரும். இந்த இணையைப் பிரித்தார் கீமோ பெளல். போன சீஸனின் ஸ்லீப்பர் ஹிட்டான நக்கிள் பால் இந்த ஆண்டும் வேலையைக் காட்டியது. பொல்லார்ட் அவுட். காயத்துக்குப் பின் களம் கண்ட ஹர்திக்கும் `இனி என்னத்த ஆடிகிட்டு?’ எனக் கைக்கு கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். 12 ஓவர் முடிவில் 101/5 என்ற பரிதாப நிலைமையில் இருந்தது மும்பை.  

மும்பை நிர்வாகம் தங்களின் Best buy எனக் கருதுவது க்ருணால் பாண்ட்யாவை! அதை நிரூபிப்பதுபோல 15 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார் க்ருணால். போல்ட் புண்ணியத்தில் அவரை பெவிலியனுக்கு அனுப்பி நிம்மதியடைந்தது டெல்லி. ஆனாலும், சிங்கிள் சிங்கமாக சிங் சிக்ஸ்களைப் பறக்கவிட்டு டெல்லி முகாமை டென்ஷனாகவே வைத்திருந்தார். போல்ட்டின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் கடந்தார். ஐ.பி.எல்லில் கடந்த 4 ஆண்டுகளில் 31 போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது. 

இவரைக் காலி செய்தால்தான் வெற்றிக்கு வாய்ப்பு என்பதால் அணியின் ஸ்டார் பவுலர் ரபாடாவை கொண்டுவந்தார் ஸ்ரேயாஸ். கை மேல் பலன். 53 ரன்களுக்கு யுவராஜ் அவுட். அடுத்த விக்கெட்டும் சீக்கிரமே போக, 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மும்பை. ஆட்டநாயகன் பன்ட்! பவுலிங்கின்போது காயமடைந்த பும்ரா பேட்டிங் இறங்கவே இல்லை. தோல்வியைவிட மும்பை அணியைப் பெரிதும் பாதிப்பது பும்ராவின் உடல்நிலை குறித்த சந்தேகங்களாகத்தான் இருக்கும்.

மும்பை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியிடம் தோற்றிருக்கிறது. ஓப்பனிங் மேட்ச் கணக்கின்படி 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி. 8 பேட்ஸ்மேன்கள் கொண்ட டெப்த் இருந்தாலும் பதற்றத்தில் கோட்டைவிடுவது மும்பையின் வாடிக்கையாக இருக்கிறது. கேப்டனும் கோச்சுகளும் இணைந்து பேசாவிட்டால் கடந்த ஆண்டின் சோகம் துரத்த வாய்ப்பிருக்கிறது. டெல்லி அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பாஸ்ட் பவுலிங் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் ஸ்பின்னில் சொதப்புகிறது. அக்‌ஷர் படேல் வள்ளலாக ரன்களை வழங்கினார். அடுத்த ஆட்டத்தில் அமித் மிஸ்ராவோ, லமிச்சன்னேவோ களமிறங்குவது நலம்.

நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் ஒரே ஒரு ஒற்றுமை கம்பேக் கொடுத்த அத்தனை வீரர்களும் `வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார்கள். ஹர்பஜன் விக்கெட்டுகளைக் குவித்தார். வார்னர் செம ஃபார்மில் இருக்கிறார். இஷாந்த் சூப்பராக தன் ஸ்பெல்லை முடித்துவைத்தார். சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் நிதானமாக ஆடி யுவராஜும் அரை சதம் கடந்துவிட்டார். இந்த சீனியர்கள் ஃபார்முக்குத் திரும்புவதைத்தான் அணிபேதம் கடந்து அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புவார்கள். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு