Published:Updated:

பன்ட்டுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் - ரிக்கி பான்டிங்குக்கு காத்திருக்கும் பெரிய வேலை!

மலையரசு
பன்ட்டுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் - ரிக்கி பான்டிங்குக்கு காத்திருக்கும் பெரிய வேலை!
பன்ட்டுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் - ரிக்கி பான்டிங்குக்கு காத்திருக்கும் பெரிய வேலை!

இந்திய வீரர் ரிஷப் பன்ட்டுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொஹாலி போட்டியில், தோனி இல்லாமல் களம் புகுந்தது இந்திய அணி. முதலில் இறங்கிய இந்திய அணி, 358 ரன்கள் என்ற இமாலய டார்கெட்டை பிக்ஸ் செய்தது. இதனால், இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருந்த வேளையில், அந்த நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அதிரடியாக ஆடி, ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெறவைத்தார் டர்னர். முன்னதாக, 38 ரன்கள் எடுத்தபோது, டர்னரை ஸ்டெம்பிங் மூலம் அவுட் ஆக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், தோனிக்குப் பதிலாக அன்று கீப்பிங் பார்த்த ரிஷப் பன்ட் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். இதனால், ரசிகர்கள் கோபத்தில் மைதானத்திலேயே தோனி... தோனி... எனக் கத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனால், உலகக்கோப்பையில் அவர் இடம்பெறக் கூடாது என ரசிகர்கள் பதிவுகள் இட்டு வந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம்குறித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார். அதில், ``தோனிக்குப் பிறகு இந்திய அணிக்கு வெற்றிகரமான கீப்பராகக்கூடிய திறமை ரிஷப்பிடமே உள்ளது. நிறைய நம்பிக்கை அவர் மேல் உள்ளது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரைத் தவிர்த்து வேறு யாரையும் இரண்டாவது விக்கெட் கீப்பராக நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஒரு பயிற்சியாளராகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு நடந்த கசப்பான அனுபவங்களை மறக்கவைப்பது என்பது கொஞ்சம் பெரிய வேலைதான்.

டெல்லி அணியில் விளையாடி, ஒரு சில ஆட்டங்கள் வெற்றிபெற்றுவிட்டால் அனைத்தையும் மறந்துவிடுவார். ஒரு கடினமான மனநிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து ஆட்டங்களில் விளையாட முடியாது. அந்த வகையில், இரண்டு போட்டிகளில் மட்டுமே பன்ட் விளையாடியது அவருக்குக் கிடைத்த அதிர்ஷ்டமே. தற்போது, பழைய சம்பவங்களில் இருந்து அவர் மீண்டு வந்துவிட்டார். வரவுள்ள ஐ.பி.எல்-லில் சில நல்ல இன்னிங்ஸை அவர் ஆடினால், மக்களுக்குப் பிடித்துவிடும். இதை அவர் செய்வார் என நினைக்கிறேன்" என்றார்.