Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுப் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புயலை கிளப்பி வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச நடுவர் ஆசாத் ரவுப் சிக்கியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 13 ஆட்டங்களுக்கு நடுவராக பணியாற்றினார் ஆசாத். கடைசியாக ஹைதராபாத்-கொல்கத்தா அணிகள் இடையே கடந்த 19ஆம் தேதி நடந்த ஆட்டத்திற்கு நடுவராக இருந்தார்.

இந்த நிலையில் அவரது சில தீர்ப்புகள், நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாகவும், மும்பை போலீசின் விசாரணை வளையத்திற்குள் அவர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் ஜூன் 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

இந்த போட்டிக்கு நடுவராக பணியாற்றும் குழுவில் ஆசாத் ரவுப்பும் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரது பெயர் சூதாட்டத்தில் அடிபடுவதால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், "நடுவர் ஆசாத் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து, அது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டின் நலனுக்காகவும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து அவரை விலக்குவது என்று முடிவு செய்தோம்" என்றார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு லீக் ஆட்டங்களுக்கும், பயிற்சி ஆட்டத்துக்கும் ஆசாத் ரவுப் நடுவராக நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

##~~##
அவர் மீது சூதாட்ட சந்தேக பார்வை விழுந்துள்ளதால், விரைவில் அவரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள், தரகர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், நடுவர் சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆசாத் ரவுப், பிரச்னைகளில் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு மும்பை மாடல் அழகி லீனா கபூர், நடுவர் ஆசாத் ரவுப் பலமுறை உல்லாசமாக இருந்து விட்டு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக போலீசில் புகார் கொடுத்தது நினைவு கூறத்தக்கது.