Published:Updated:

சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்?

சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்?
சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்?

புதுடெல்லி: சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்களையும், வங்கிக் கணக்குகளையும் முடக்க அமலாக்கப்பிரிவு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்?

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீசாந்த் உள்பட 3 ஐ.பி.எல். வீரர்கள், 4 முன்னாள் வீரர்கள் மற்றும் பல சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பை என பல்வேறு போலீஸார் இந்த புகார் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவும் வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லி போலீசார், ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய ஐ.பி.எல். வீரர்கள் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு பதிவு செய்து உள்ளது.

சூதாட்ட விவகாரத்தில், ஹவாலா பாணியில் பணபரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இதையும், இதர நிதி முறைகேடுகளையும் விசாரிப்பதே அமலாக்கப்பிரிவின் நோக்கம். அமலாக்கப்பிரிவு ஏற்கனவே சில ஹவாலா பரிவர்த்தனைகளையும், ஹவாலா ஏஜெண்டுகளின் நடமாட்டத்தையும் கண்காணித்து வந்தது.

அமலாக்கப்பிரிவு தனது முதல் கட்ட விசாரணைக்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தரகர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்வது குறித்து முடிவு செய்யும்.

அமலாக்கப்பிரிவு தனது விசாரணையின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சர்வதேச சூதாட்ட கும்பல் பற்றி நம்பகமான தகவல்களை திரட்ட முடிவு செய்து உள்ளது. மேலும், சூதாட்ட புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள இதர போலீஸ் துறைகளின் அறிக்கைகளை ஆய்வு செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது.

அமலாக்கப்பிரிவும் களம் இறங்கி இருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் நெருக்கடி முற்றி உள்ளது. ஏனென்றால், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டப்படி, குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் பொறுப்பு, குற்றம் சாட்டப்பட்டவரையே சாரும்.

இதுதவிர, வருமான வரித்துறையும் சூதாட்ட புகார் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளது. சூதாட்டத்தில் தொடர்புடையவர்களின் வருமானவரி கணக்குகளையும் பணபரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்ய உள்ளது. இதன்மூலம், அவர்கள் கணக்கில் காட்டப்படாத வருமானத்தை பெற்றுள்ளார்களா என்று கண்டறிய திட்டமிட்டு உள்ளது.

##~~##