Published:Updated:

``உலகக்கோப்பை தொடரின் ப்ளேயிங் லெவன் முடிவு செய்யப்பட்டுவிட்டது" - விராட் கோலி

``உலகக்கோப்பை தொடரின் ப்ளேயிங் லெவன் முடிவு செய்யப்பட்டுவிட்டது" - விராட் கோலி
``உலகக்கோப்பை தொடரின் ப்ளேயிங் லெவன் முடிவு செய்யப்பட்டுவிட்டது" - விராட் கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி அதிர்ச்சியளித்தது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 5 -வது ஒருநாள் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியைத் தழுவியதால், சுமார் 28 மாதங்களுக்குப் பின்னர் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது. மேலும் இந்தியாவில் 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது. 

இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி தோல்வி தொடர்பாகவும் உலகக்கோப்பை தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். விராட் கோலி, ``முதலில், எங்கள் அணிக்கு இது எட்டக்கூடிய ஸ்கோர்தான். அதை மறுக்க முடியாது. ஆனால் இறுதியில் ஆட்டத்தை அவர்கள் எங்கள் பக்கம் இருந்து எடுத்துச் சென்று விட்டனர். 

ஒன்று இரண்டு ஓவர்கள் ஆட்டத்தையே மாற்றி விடுகிறது. இந்தத் தொடரைப் பார்த்தால், ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக நேர்த்தியுடன் இதயபூர்வமாக விளையாடியது தெரிய வரும். அவர்கள் இந்த வெற்றிக்குத் தகுதியானவர்கள். 

உலகக்கோப்பை தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை ஓர் அணிக்கு மட்டும் வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் பலமாக இருக்கின்றன. நாங்களும்(இந்திய அணி)பலமான அணியாக உள்ளோம். ஆஸ்திரேலிய அணியும் தற்போது முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில் எந்த அணியையும் வீழ்த்தும் திறன் கொண்டது. என்ன மனநிலையை உலகக்கோப்பை தொடருக்கு நாம் எடுத்துச் செல்கிறோம் என்பதுதான் முக்கியம்“ என்றார். 

கடந்த சில போட்டிகளாக அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது. உலகக்கோப்பை தொடருக்கான ப்ளேயிங் லெவன் அணியைத் தேர்வு செய்ய பலருக்கும் மாறி மாறி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான ப்ளேயிங் லெவன் தேர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கோலி, ``இந்தத் தொடர் தோல்வியினால், எங்களின் டிரெஸ்ஸிங் ரூமில் எந்த வீரருக்கும் பயம் ஏற்பட்டுவிடவில்லை. உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள ப்ளேயிங் லெவன் தொடர்பாக உறுதியாக இருக்கிறோம். 

யார் யார் ப்ளேயிங் லெவனில் இடம்பெறப் போகிறார்கள் என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான். ஆட்டத்தின் தேவையைப் பொறுத்து ஓரிடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். ஹர்திக் பாண்ட்யா அணிக்கு வரும்போது அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் கூடுதல் பலம் பெறும். நாங்கள் அணியாக எங்கு இருக்கிறோம் என்பதை அறிவோம். உலகக்கோப்பை பிளேயிங் லெவன் தொடர்பாக தெளிவாக இருக்கிறோம்” என்றார்.