Published:Updated:

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!
பிரீமியம் ஸ்டோரி
தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

Published:Updated:
தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!
பிரீமியம் ஸ்டோரி
தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!
தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

னவெறி காரணமாகத் தென்னாப்பிரிக்காவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை நீக்கப்பட்ட பின் முதன்முதலாக 1991-92-ல் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. `மேற்கிந்திய தீவு அணியினரைவிட அதிவேகமாகப் பந்து வீசுவார்கள்... சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தடை இருந்தாலும், அவர்கள் தங்களுக்குள்ளேயே அசுரத்தனமாகப் பயிற்சிப் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்’ என, அந்த அணி இந்தியா வருவதற்குள் ஏகப்பட்ட ஹேஸ்யங்கள். வந்து விமான நிலையத்தில் இறங்கிய அணியைப் பார்த்த உடனே சப்பென்று ஆகிவிட்டது. இந்திய வழக்கப்படி ஆரத்தி எடுக்கப்பட்டு, குங்குமம் வைத்து மாலையுடன் அவர்களைப் பார்த்தபோது, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த ஓய்வு பெற்ற வெளிநாட்டுப் பயணிகளைப்போல இருந்தார்கள்.

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அணியில் நாலைந்து பேருக்கு வயதான தோற்றம். ஐந்தாறு பேருக்கு விளையாட்டுக்கு ஏற்ற உடல்வாகு இல்லை. எல்லோருமே 30 வயதைத் தாண்டியவர்கள்போல இருந்தார்கள். அந்த அணியின் கேப்டன் கிளைவ் ரைஸ் நாற்பதைத் தாண்டியவர். உள்ளூர் திருவிழா கிரிக்கெட் போட்டிக்கு, சென்னையில் செட்டிலான அங்கிள்கள் வீம்புக்கு ஒரு அணியாகப் பெயர் கொடுப்பார்களே, அதுபோலத்தான் அவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம் ஆலன் டொனால்ட். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர்தான் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். மற்றபடி ஒரு சராசரி அணியாகத்தான் இருந்தது தென்னாப்பிரிக்கா. ஆனால், மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டியில் வென்று, `எங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டு, 1992-ம் ஆண்டு உலகக்கோப்பை விளையாட ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறினார்கள்.

1987-ல் உலகக் கோப்பையை வென்றபின், ஆஸ்திரேலிய அணி தன் பலத்தை அதிகரித்து வைத்திருந்தது. நிறைய தொடர்களை வென்று நம்பர் 1 அணியாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் குகையிலேயே உலகக் கோப்பை நடப்பதால், வெற்றி அவர்களுக்கே என எல்லோரும் கணித்திருந்தார்கள். ஆஸ்திரேலியா வெல்லும் எனப் புக்கிகளிடம் பணம் கட்டினால் ஒரு ரூபாய்க்கு ஒரு ரூபாய் பத்து பைசாதான் பரிசுத்தொகை. `இதே பந்தயத்தை இந்தியாவின் மீது கட்டினால் ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாயும், ஜிம்பாப்வே மீது கட்டினால் ஒரு ரூபாய்க்கு 300 ரூபாயும் கொடுப்போம்’ என்றார்கள்.

ஆஸ்திரேலியா தன் முதல் ஒருநாள் போட்டியில் கோப்பையை நடத்தும் சக நாடான நியூசிலாந்துடன் விளையாடியது. நியூசிலாந்தின் தயாரிப்பையும் தந்திரங்களையும் குறைவாக மதிப்பிட்டிருந்தது ஆஸி அணி. நியூசிலாந்து கேப்டன் மார்டின் க்ரோ காட்டிய வித்தையைச் சமாளிக்க முடியாமல் தோற்றது ஆஸ்திரேலியா. இரண்டாவது மேட்ச் தென்னாப்பிரிக்க அணியுடன். தென்னாப்பிரிக்காவுக்கு அதுதான் முதல் போட்டி. காயம்பட்ட சிங்கத்தின் மூச்சுக்காற்று லெவலுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு வர்ணனையாளர்களும், பத்தி எழுத்தாளர்களும் உருவேற்றிக் கொண்டிருந்தார்கள். தென்னாப்பிரிக்க அணிக்கு கெப்ளர் வெஸல்ஸ் கேப்டன். அவர் மட்டுமே அனுபவம் பெற்றவர். மற்றவர்கள் சர்வதேசப் போட்டி அனுபவம்கூட இல்லாதவர்கள்.

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

எனவே, உலகக் கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு தரமான சம்பவத்தை ஆஸ்திரேலியா நிகழ்த்தும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. புரோட்டாக் கடைகளிலேயே பல ஆண்டுகளாகச் சாப்பிட்டு அனுபவம் வாய்ந்தவர், எப்படி ஒரு ஆஃபாயிலை சிந்தாமல், சிதறாமல் வாயில் போட்டுக்கொள்வாரோ, அதுபோல ஆஸ்திரேலியாவை 163 ரன்களில் சுருட்டி விழுங்கியது தென்னாப்பிரிக்கா. மேலும், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அந்த இலக்கை எளிதாக சேஸ் செய்து வென்றது. இந்த வெற்றி மூலம் கிரிக்கெட் உலகுக்கு தன் வருகையை ஆரவாரமாக அறிவித்தது தென்னாப்பிரிக்கா.

ஆஸ்திரேலியாவுடன் பிள்ளையார் சுழி போட்ட தென்னாப்பிரிக்கா, அடுத்து இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகளை வென்று அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவின் ஆட்ட வியூகம் எளிதானது. கெப்ளர் வெஸல்ஸ், ஆண்ட்ரு ஹட்சன் இருவரும் ஓப்பனிங் இறங்கி, விக்கெட் விழாமல் மெதுவாக ஆடுவார்கள். பின் பீட்டர் கிறிஸ்டன், க்யிப்பர், குரோனியே, மெக்மில்லன், ரோட்ஸ் தங்கள் பங்களிப்பைச் செய்வார்கள்.

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் டொனால்ட், பிரிங்கிள், ஸ்நெல், மேக்மில்லன் என நான்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். க்யிப்பர், குரோனியே என இரு பார்ட்டைம் பௌலர்கள். முதல் நால்வரும் லைன் அண்ட் லென்த் தவறாமல் வீசி, ரன் எடுக்க விடாமல் செய்வார்கள். எனவே, எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க வேண்டுமென்று அடுத்த இருவரின் பந்தில் அடித்து ஆடி ஆட்டமிழப்பர்.

இதுபோன்ற வியூகங்களும், ஆட்டக்காரர்களும் எல்லா முன்னணி அணியிலும் உண்டுதான். ஆனால், தென்னாப்பிரிக்காவை மற்ற அணிகளிடம் இருந்து தனித்துக் காட்டியது, அவர்களின் ஃபீல்டிங். தென்னாப்பிரிக்கா ஒவ்வோர் ஆட்டத்திலும் தன் ஃபீல்டிங்கின் மூலம் சராசரியாக 40 ரன்களைக் கட்டுப்படுத்தியது. 1992 உலகக் கோப்பையில் அணிகளின் சராசரி ரன் 220 - 250 எனும்போது இதன் வீரியம் புரியும். இந்த 40 ரன்களில் ஜான்ட்டி ரோட்ஸ் மட்டும் சுமார் 30 ரன்களை தன் ஃபீல்டிங்கின் மூலம் கட்டுப்படுத்தியிருப்பார்.

அதுவரை நடந்துகொண்டிருக்கும் ஒரு செயலை, அதைவிடப் பல மடங்கு சிறப்பாகச் செய்து மற்றவர்களையும் அந்தத் தரத்தை நோக்கி இழுப்பவர்களை `வேற லெவலுக்குக் கொண்டு போயிட்டான்பா’ எனச் சிலாகிப்பது வழக்கம். அந்த சிலாகிப்புக்கு முழுக்க உரித்தானவர் ஜான்ட்டி ரோட்ஸ். கைக்கு வந்த கேட்சை பிடிப்பவர்கள், தனக்கு நேராக வரும் பந்தை மட்டும் எந்த விடுதலுமின்றி தடுப்பவர்கள் சிறந்த ஃபீல்டர்கள் என்ற கருத்தியல் நிலவிய காலம் அது. ஜான்ட்டி ரோட்ஸ் தனக்கு இடப்பக்கம் நாலடி, வலப்பக்கம் நாலடி, தலைக்கு மேலே, முன்னே எனப் பந்து எங்கு வந்தாலும், அந்தப் பந்தைத் தடுத்து, பாயின்ட் திசையில் ஒரு அரணையே எழுப்பினார். எளிதாக ஸ்கொயர் கட் அடிப்பவர்களைக்கூட, `எதுக்கு அடிச்சுக்கிட்டு எப்படியும் இவன் தடுத்துருவான்’ என எண்ண வைத்தார். 

தென்னாப்ரிக்காவின் ரீஎன்ட்ரி!

தென்னாப்பிரிக்க அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர் கொண்டது. கூச், லாம்ப், ஹிக், பேர் பிரதர், ஸ்டூவர்ட் என ஃபார்மில் இருந்த பேட்ஸ்மேன்கள். உலகத்தர ஆல்ரவுண்டர் இயன் போத்தம், நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் எனக் கோப்பையை வெல்லத் தகுதியான அணி. சொல்லப் போனால் 92 இங்கிலாந்து உலகக் கோப்பை அணியைப்போல் அடுத்து, 25 ஆண்டுகளுக்கு அவர்களுக்குச் சரியான அணி அமையவில்லை. இந்த 2019 உலகக் கோப்பை அணியைத் தவிர!

1992 உலகக்கோப்பை. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு, அப்போதைய இங்கிலாந்து பத்திரிகைகளால் `அடுத்த பிராட்மென்’ எனப் புகழப்பட்ட கிரீம் ஹிக் 87 ரன்கள் எடுத்துக் கொடுக்க, அணியின் ஸ்கோர் 250-க்கு மேல் வந்தது. அடுத்து பேட் செய்த  தென்னாப்பிரிக்க அணிக்குச் சோதனை மழை உருவில் வந்தது. 14 பந்துகளில் 22 ரன் எடுக்க வேண்டிய நிலை. அப்போது வந்த மழையால் ஆட்டம் சுருக்கப்பட்டது. அப்போது வழக்கத்தில் இருந்த `மோஸ்ட் புரடெக்டிவ் ஓவர்’ விதிமுறையின்படி, தென்னாப்பிரிக்கா  ஒரு பந்தில் 22 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதோடு, தென்னாப்பிரிக்காவின் கோப்பைக் கனவு கலைந்தது. அதன் பின்னரும் அந்த அணியால் அரை இறுதியைத் தாண்ட முடியவில்லை. 1999 உலகக் கோப்பை அரையிறுதியில் ஒரு ரன்னில் பரிதாபகரமாகத் தோற்றது. இங்கிலாந்துக்கும்கூட அதன்பின் ஒருமுறைகூட ஃபைனல் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எப்படித் தென்னாப்பிரிக்க அணி, உலக ஃபீல்டிங்கின் தரத்தை உயர்த்தத் தூண்டுகோலாக இருந்ததோ, அதுபோல மழை விதியையும் மறு பரிசீலனை செய்ய வைத்தது தென்னாப்பிரிக்காவின் அந்தப் பரிதாபத் தோல்வி. `மோஸ்ட் புரடெக்டிவ் ஓவர்’ விதி கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. அது இப்போதைய டக்வொர்த் லூயிஸ் விதியை அமல்படுத்த காரணமாக இருந்தது.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளுமே உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆனால், வெல்லத் தகுதியான அணிகளைக் கொண்டிருந்த நாடுகள் அவை. இந்தமுறை தென்னாப்பிரிக்கா Chockers பட்டத்தைத் துறக்குமா என்பது சந்தேகம்தான். முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது தென்னாப்ரிக்கா!

முரளி கண்ணன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism