Published:Updated:

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!
பிரீமியம் ஸ்டோரி
கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

Published:Updated:
கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!
பிரீமியம் ஸ்டோரி
கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

ட்ரயல் பால்: பும்ரா, ஸ்டார்க், ரபாடா, ரஷீத், போல்ட்... இந்தப் பெயர்களின் முக்கியத்துவம் உணர வேண்டிய நேரம் இது. எட்டு, பத்து அணிகள் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த கிரிக்கெட்டை, இப்போது ஓமன், நேபாளம், பாபுவா நியூ கினியா நாடுகள்கூட ஆடிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு ஏன், மெக்சிகோவில்கூட பெண்கள் கிரிக்கெட் அணி உருவாகியிருக்கிறதாம். இத்தனை ஆண்டுகள் கழித்து, உலகளவில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் விளையாட்டு, உள்ளுக்குள் யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறதே! அதை எப்படி அனுமதிப்பது? அதன் வாழ்நாளை நீட்டிக்க, அது பிறந்த மண்ணில், மேற்சொன்னவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. ஏன்..? கசப்பான உண்மைகளின் வாயிலாக அலசுவோம்...

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

முதல் பந்து: இந்தியாவின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்

தெருவின் ஒரு பக்கம் 3 குச்சிகளை நட்டு, மறுபக்கம் செருப்புக் குவியலை ஸ்டம்பாக்கி சிங்கிள்ஸ் விளையாடும் சிறுவர்களை எங்கெங்கும் பார்த்திருப்போம். ஒருவன் குனிந்து, அவன் முதுகில் கை வைப்பவனிடம், பேட்டிங் ஆர்டரைச் சொல்லிக்கொண்டிருப்பான். விரல்களில் எண்ணைக் காட்டுபவன், ஒன்றாம் எண்ணை மட்டும் காட்டமாட்டான். பேட் வைத்திருக்கும் சிறுவனுக்கான இடம் அது. அவன் முதலில் ஆடாவிட்டால், யாரும் அந்தப் பேட்டால் ஆட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். வேறு வழியில்லை. ஆனால், கொடுமை என்னவெனில், அந்தச் சிறுவர்களுக்குள் பந்தின் உரிமையாளரும் ஒருவன் இருப்பான். ஆனால், அவனுக்கு எந்தவித சலுகையும் இருக்காது. ஏனெனில், பேட்தான் அங்கு எல்லாமே. பந்து இல்லாவிட்டாலும்கூட விளையாட முடியாதுதான். ஆனால், அந்தச் சிறுவர்களின் மனம் அப்படி யோசிக்காது. அந்த வட்டத்தில், பேட்டுக்கு இருக்கும் மரியாதை பந்துக்குக் கிடைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பேட்தான் கிரிக்கெட், பேட்ஸ்மேன்கள்தான் கிரிக்கெட்டர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

இந்தச் சிறுவர்களுக்குள் அப்படியான எண்ணத்தை விதைத்தவர்கள் நாம்தான். சச்சினையும், தோனியையும், கோலியையும், ரோஹித்தையுமே கொண்டாடிக் கொண்டாடி அவர்களை ஹீரோக்களாகவும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, உனத்கட் போன்றவர்களைக் காமெடியர்களாக்கியும் வைத்திருக்கிறோம். ‘பௌலர் என்றோர் இனமுண்டு. கிரிக்கெட்டில் அதற்கும் இடமுண்டு' என்று சொல்ல இங்கு யாரும் இல்லை. சரி, அவர்களுக்காகவே டி.வி-யில் பார்க்கப்போனால்... ஐ.பி.எல், பிக் பேஷ், கரீபியன் பிரீமியர் லீக். சிக்ஸரும் பவுண்டரிகளுமே அங்கு பிரதானம். அதையும் தாண்டி ஒருநாள் போட்டிகள் பார்த்தால், சதங்கள், இரட்டைச் சதங்கள், பறக்கும் சிக்ஸர்கள்! போதாக்குறைக்கு எந்த ஒருநாள் போட்டியிலும் ரன்ரேட் இப்போதெல்லாம் ஐந்தரை, ஆறுக்கு குறைவாக இருப்பதில்லை. பெரும்பாலான போட்டிகளில் ஆறு ரன்களுக்கு மேல்தான். அவன் மனதுக்குள் பதிவதெல்லாம் ரன்... ரன்... ரன்..!

இரண்டாவது பந்து: இங்கிலாந்து எப்படி இருக்கிறது?

373, 361, 358, 359, 340, 341, 351, 297 - உலகக்கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் எடுக்கப்பட்ட ஸ்கோர்கள் இவை. டெஸ்ட் போட்டிகளில் அல்ல... ஒருநாள் போட்டிகளில்! தொடர்ந்து ஏழு 340+ ஸ்கோர்கள். ஜஸ்ட் லைக் தட் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இந்த ஸ்கோர்களைப் பதிவு செய்தன. அதிலும் இங்கிலாந்து தொடர்ந்து நான்கு முறை 340 ரன்களைத் தாண்டியுள்ளது. சௌதாம்ப்டன், பிரிஸ்டோல், நாட்டிங்ஹாம், லீட்ஸ் என ஒவ்வொரு மைதானமும் பேட்டிங்குக்குச் சாதகமாகவே இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் 350 என்பதே ‘par score' என்கிறார்கள் வல்லுநர்கள். ஆம், 350! 

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

இங்கிலாந்தின் ஒவ்வொரு பிட்சும் அச்சுப்பிசகாமல் ஒரே மாதிரி பேட்டிங்குக்குக் கைகொடுக்கின்றன. அதிலும் டிரென்ட் பிரிட்ஜ்..! 'உலகின் மிகச் சிறந்த பேட்டிங் பிட்ச் இதுதான்' எனச் சொல்லிவிடலாம். கடந்த ஆண்டு, ஒருநாள் கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோரான 481 ரன்களை இந்த மைதானத்தில்தான் எடுத்தது இங்கிலாந்து. அதுமட்டுமல்ல, கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 6 ஒருநாள் போட்டிகளில் (முழுமையாக முடிந்த போட்டிகள்) ஆறு முறை 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு 400+ ஸ்கோர்கள். 2015 ஜனவரிக்குப் பிறகு, இந்த மைதானத்தின் சராசரி ரன்ரேட் 6.98.

அந்த மைதானம் மட்டும்தான் அப்படியா என்றால், இல்லை. இந்த உலகக் கோப்பை நடக்கும் 11 மைதானங்களில், மான்செஸ்டர் தவிர்த்து மற்ற அனைத்து மைதானங்களின் சராசரி ரன் ரேட்டுமே (2015-குப் பிறகு) 5.50-க்கு மேல்தான். சௌதாம்ப்டன், பிரஸ்டோல், ஓவல், செஸ்டர் லீ ஸ்ட்ரீட் போன்ற மைதானங்களில், ரன்ரேட் ஆறுக்கும் மேல் இருக்கிறது. இப்படியான மைதானங்களில் தான் உலகக்கோப்பைத் தொடர் நடக்கிறது. இந்நிலையில்தான் ‘‘இந்த உலகக் கோப்பையில் 500 ரன்கள் சாத்தியப்படலாம்’’ என்கிறார் மார்க் வாக். சாதனைகள் உருவாகப்போகின்றன என நினைத்து சந்தோஷம் கொள்வதா இல்லை, ஒவ்வொரு பௌலரும், ஒவ்வொரு போட்டியிலும் நிராயுதபாணியாக நிற்கப் போகிறாரே என்று வருத்தம் கொள்வதா?

மூன்றாவது பந்து: ஒருநாள் கிரிக்கெட் என்கிற நீள் டி-20

முன்பெல்லாம் ஒருநாள் போட்டிகளில் 270 ரன்கள் என்பதே பெரிய விஷயமாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி அதைக் கடந்துவிட்டாலே, எதிரணி கிட்டத்தட்ட பாதி தோற்றுவிடும். 300 என்பது, சென்னையில் பெய்யும் மழையைப்போல். அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது நடக்கும். ஆனால், அது ஒவ்வொருவருக்கும் அப்படியொரு ஆச்சர்யத்தைப் பரிசளிக்கும். 400..? தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அதை அடித்தபோது ஒரு வாரத்துக்குப் பேச்சு அடங்கவில்லை. உலகக் கோப்பையைவிட அதிகமாகப் பேசப்பட்டது. காரணம், அது ஏற்படுத்திய வியப்பு. 

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

எல்லாம் ஒருசில ஆண்டுகள் முன்புவரைதான். இப்போதெல்லாம் 300 என்பது சென்னையின் வெயில்போல் ஆகிவிட்டது. எல்லோரும் பழகிவிட்டனர். ஆச்சர்யம், வியப்பு, மகிழ்ச்சி எதுவும் இல்லை. 300 என்ற ஸ்கோர் யாரையும் ஆச்சர்யப்படுத்தவில்லை என்ற இடத்திலேயே கிரிக்கெட் வீழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் அதை ஆதரித்துக்கொண்டிருக்கிறோம். ஒருநாள் போட்டிகள், நீட்டிக்கப்பட்ட டி-20 போட்டிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் 300 என்ற ஸ்கோர் அவ்வளவு அநாயாசமாக அடிக்கப்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு, 128 போட்டிகளில் 51 முறை 300+ ஸ்கோர் அடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக 5 போட்டிகளில், இரண்டு 300+ இன்னிங்ஸ்! 2018-ம் ஆண்டு (128 போட்டிகளில்) 38 முறை ஸ்கோர் போர்டுகள் 300 எனக் காட்டியுள்ளன. இந்த ஆண்டு, இன்னும் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.உலகக்கோப்பைக்கு முன்பாக நடந்துள்ள 69 போட்டிகளில், 31 முறை 300+ ஸ்கோர்கள் அடிக்கப்பட்டுள்ளன!

சரி, முன்பெல்லாம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, குத்துமதிப்பாக 2010-ம் ஆண்டைத் தேர்வு செய்து ஆராய்ந்தேன். அந்த ஆண்டு நடந்த 142 சர்வதேச ஒருநாள் போட்டிகளில், 18 முறையே 300 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு 13 போட்டிக்கும், ஒரு 300+ ஸ்கோர். அது இப்போது கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு உயர்ந்துள்ளது. இதைவிட இன்னொரு விஷயம், 2010-ல் இரண்டு போட்டிகளில் மட்டும், இரண்டு அணிகளுமே 300 ரன்களைக் கடந்துள்ளன. ஆனால், இந்த 5 மாதத்தில் மட்டும், 9 போட்டிகளில் இரண்டு அணிகளுமே 300 ரன்களைக் கடந்துள்ளன. அதில் 5 முறை இலக்கை சேஸ் செய்து வெற்றியும் பெற்றிருக்கின்றன என்பதுதான் அடுத்த சோகம்! இப்போது 350 என்பதே போதாது என்கிற நிலையை அடைந்திருக்கிறோம். மேலே இருக்கும் எண்களைப் பாருங்கள். முதல் 10 ஓவர்களில் சராசரியான எகானமி பெரும்பாலும் ஐந்தரை ரன்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. முன்பெல்லாம், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த 10 ஓவர்களைத்தான் டார்கெட் செய்து அதிரடியாக ஆடுவார்கள். ஆனால், இப்போது அப்படியில்லை என்பதை இந்த எண்கள் உணர்த்துகின்றன. இருந்தும் அணிகள், எளிதாக 350 ரன்கள் அடிக்கின்றன என்றால் என்ன பொருள்? இங்கு மிடில் ஓவர், டெத் ஓவர் பாகுபாடு இல்லை. பவர்ப்ளே கவலை இல்லை. எல்லா ஓவர்களிலும் ரன் அடிக்கப்படுகின்றன. அடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்படியான போட்டிகளில் முழுக்க முழுக்க ரன்களும், பௌண்டரிகளும்தானே பிராதனப்படுத்தப்படும்!

நான்காவது பந்து: பௌலர்களின் எழுச்சி

கடந்த சில மாதங்களாக, பௌலர்களின் தரம் உயர்ந்துவிட்டதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். பும்ரா, ரபாடா, ரஷீத் கான் ஆகியோரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் அபார எழுச்சியை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், இது எத்தனை காலம் நிலைத்து நிற்கப்போகிறது என்பதை யோசிக்கவேண்டியதும் அவசியம் அல்லவா?

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் கேமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று யாரும் சும்மா சொல்லிவிடுவதில்லை. காரணம் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய தேதிக்கு, பௌலர்களால் நீண்ட காலம் அணியில் நீடிக்க முடிவதில்லை. பேட்ஸ்மேன்கள் 10 வருடம் தேசிய அணிக்கு ஆடினால், பௌலர்கள் ஐந்தே வருடங்களில் ஒதுங்கிவிடுகிறார்கள். இல்லையெனில் ஓரங்கட்டப்படுகிறார்கள். அக்ரம், மெக்ராத், முரளிதரன் போல் பௌலிங் ஜாம்பவான்கள் உருவாவது இனி அரிதிலும் அரிதாகவே இருக்கும். 2015 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியின் டாப் ஸ்கோரர், டாப் விக்கெட் டேக்கர்களின் இன்றைய நிலைமையைப் பார்த்தாலே அது புரிந்துவிடும்.

மேலே இருக்கும் பட்டியலைப் பாருங்கள். 10 அணிகளின் டாப் ஸ்கோரர்களில் 4 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். மற்ற ஆறு பேருமே இந்த உலகக் கோப்பையிலும் விளையாடப்போகிறார்கள். ஆனால், பௌலர்கள்? ஒவ்வொரு அணிக்காகவும் அதிக விக்கெட் எடுத்தவர்களில், மோர்னே மோர்க்கல் மட்டுமே ஓய்வு பெற்றுள்ளார். மற்ற 9 பேரில் நால்வர் மட்டுமே இந்த உலகக் கோப்பையில் விளையாடவுள்ளனர். உமேஷ் யாதவ், ஃபின், ஜெரோம் டெய்லர், டஸ்கின் அஹமது, ஷபூர் சத்ரான் ஐவருக்கும் இந்த உலகக் கோப்பை அணியில் இடமில்லை. காரணம், அவர்களின் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. கடந்த உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஃபின், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. இதுதான் பௌலர்களின் உண்மை நிலை.

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

சரி, இந்தத் தொடரில் ஆடும் ஸ்டார்க், வஹாப் ரியாஸ் ஆகியோரின் நிலை மட்டும் என்ன? 2015 உலகக் கோப்பையில் தொடர் நாயகனான ஸ்டார்க், இப்போது என்ன நிலைமையில் இருக்கிறார்? ‘உலகின் சிறந்த பௌலர்' என்று அன்று எடுத்த பெயரை பும்ரா, ரபாடா, ரஷீத் ஆகியோரிடம் இழக்க எத்தனைக் காலம் ஆனது? அந்த உலகக் கோப்பையில், வாட்சனுக்கு வீசிய ஒற்றை ஓவரில் அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்திய வஹாப் ரியாஸ், இன்று அணிக்குள் வருவதற்கே பெரும்பாடு ஆகிப்போனதே!

மேலே இருக்கும் ஆறு பேட்ஸ்மேன்களின் சராசரியையும் பார்த்தால் புரியும், பேட்ஸ்மேன்கள் எவ்வளவு எளிதாக ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறார்கள் என்பது. உலகக் கோப்பைக்கு முன்பு வைத்திருந்த சராசரியைவிட அனைவரின் சராசரியுமே முன்பை விடப் பலமடங்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குப்ஷில், டுப்ளெஸ்ஸி, மஹமதுல்லா ஆகியோரின் சராசரி கிட்டத்தட்ட பத்துக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. அதேசமயம், ஒவ்வொரு பௌலரின் சராசரியுமே, முன்பு இருந்ததைவிட அதிகமாகவே இருக்கிறது. டிரென்ட் போல்ட் சராசரி மட்டும்தான் அப்படியே இருக்கிறது.

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

மிகச் சிறந்த பௌலர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட ஸ்டார்க்கின் சராசரி 18-ல் இருந்தது, 2015 உலகக் கோப்பைக்குப் பிறகான போட்டிகளில் 25-ஆக இருக்கிறது. வஹாப் ரியாஸின் சராசரி முன்பு 30. இந்த 4 ஆண்டுகளில் 47. இவர்கள் மட்டுமல்ல, மிகச் சிறந்த பௌலர்களாகக் கருதப்பட்ட பலரின் நிலையும் இப்படித்தான். முகமது ஆமிர் இன்று மாற்று வீரராகத்தான் உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறார். அஷ்வினுக்கு இன்று ஒருநாள் அணியில் இடமில்லை. இப்படிப் பலரையும் சொல்லலாம்!

இதற்கு வயதைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. பிரெண்டன் டெய்லர், டுப்ளெஸ்ஸி, தவான் எல்லோருக்குமே 33, 34 வயது ஆகிறது. ஆனால், அவர்களின் சராசரி கூடிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், பௌலர்களுக்கு அப்படியில்லை. ஸ்டெய்ன், மலிங்கா போன்ற ஜாம்பவான்களே முப்பதைத் தாண்டிய பிறகு ஒவ்வொரு வருடமும் தங்களின் வேகத்தை, ஆற்றலை இழக்கத்தான் நேரிட்டது! அதிகமாக ஆடப்படும் சர்வதேச, உள்ளூர், டி-20 போட்டிகளால் பேட்ஸ்மேன்களைவிட பௌலர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவை போதாதென்று பவர்ப்ளே விதிகள், மைதானத்தின் அளவு, பிட்சின் தன்மை, பயன்படுத்தப்படும் பந்துகள் என எல்லாமே பௌலர்களுக்குப் பாதகமாகவே அமைகின்றன. இதில் ‘ட்யூ ஃபேக்டர்' என்ற இயற்கையின் சதி வேறு.

நான்காவது பந்து: பௌலிங்கின் எழுச்சி?!


இன்னொரு முக்கியமான விஷயம். ரபடா, பும்ரா, ரஷீத் போன்ற ஒருசில பௌலர்களின் வெற்றியை, பௌலிங்குக்குக் கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியுமா? நிச்சயமாக இல்லை. இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் மிகவும் புத்திசாலித்தனமாக போட்டியைக் கையாளத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக இந்த ஐ.பி.எல் தொடரில் நடந்த நைட்ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் போட்டியை எடுத்துக்கொள்வோம். 

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 182 ரன் இலக்கை சேஸ் செய்தபோது, ரஷீத்தை மிகக் கவனமாகக் கையாண்டது கொல்கத்தா. அவரது 4 ஓவர்களில் வெறும் 26 ரன்கள்தான். ஆனாலும், மற்ற பௌலர்களின் 15.4 ஓவர்களில் அவர்களால் 157 ரன்கள் எடுக்க முடிந்தது. ரஷீத்துக்கான மரியாதையைக் கொடுத்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள், புவி, சந்தீப், ஷகிப் என அனைவரையும் அடித்து நொறுக்கினர்.

அந்த ஒரு போட்டி மட்டுமல்ல, டெல்லி, மும்பை, பஞ்சாப் என 3 போட்டிகளிலும் அதேதான் நடந்தது. ரஷீத்தின் எகானமி 5.50 கூடத் தாண்டவில்லை. ஆனால், எதிரணி 7.50-க்கும் அதிகமான ரன்ரேட்டோடு போட்டியை வென்றன. ரஷீத், பும்ரா போன்ற ஆபத்தான பௌலர்களின் ஓவர்களில் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற பௌலர்களை முழுமையாக டார்கெட் செய்துவிடுகிறார்கள். அப்படிச் செய்யவும் முடிகிறது. இப்போதெல்லாம் 16 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்ய பேட்ஸ்மேன்கள் தயாராகிவிட்டனர். இது டி-20 போட்டிக்கு மட்டுமல்ல. ஒருநாள் போட்டியையும் இதே மனநிலையில்தான் அணுகிக்கொண்டிருக்கிறார்கள்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் சொன்ன ஒரு மிகப்பெரிய உண்மை (அதிசயமாக!) :  “இனிவரும் காலங்களில், இந்த ‘மாடர்ன் பேட்ஸ்மேன்களை’ கட்டுப்படுத்துவது பௌலர்களுக்கு மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்”. ஆம், இது மாடர்ன் பேட்ஸ்மேன்களின் காலமாகிவிட்டது!

ஐந்தாவது பந்து: உலகக் கோப்பை என்பது யாதெனில்...

உலகக் கோப்பை - வெறும் தொடரல்ல. கொண்டாட்டம் மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கான அறிமுகம் அது. ஒரு தலைமுறைக்கு, கிரிக்கெட்டைப் பற்றிச் சொல்லும் மேடை அது. இந்தியாவுக்கான அடையாளத்தை, பாகிஸ்தான் பந்துவீச்சுக்கான அங்கீகாரத்தை, பவர்ப்ளேவில் ஆடக் கற்றுக்கொடுத்த இலங்கை ஓப்பனர்களின் புரட்சியை, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை... பார்த்து உணர்ந்தது உலகக் கோப்பைகளின் வாயில்களாகத்தானே!

‘‘1992 உலகக் கோப்பை வெற்றிதான் என்னை கிரிக்கெட்டுக்குள் அழைத்து வந்தது’’ என்றார் ஷாகித் அஃப்ரிடி. அவர் மட்டுமல்ல, பல சிறுவர்களை, இளைஞர்களை இந்த விளையாட்டை நோக்கி நகரவைத்தது அந்த வெற்றி. அந்தத் தொடரில் வாசிம் அக்ரம் காட்டிய ஹீரோயிசம், இன்றளவும் பாகிஸ்தானில் தாக்கம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு தொடரில், ஒரு மேட்ச் வின்னரைப் பார்க்கும் சிறுவர்கள், தங்களை அந்த வீரனைப் போலவே பாவிக்கத் தொடங்குவார்கள். முகமது ஆமிர், ஷோஹைல் தன்வீர், வஹாப் ரியாஸ், ஷஹீன் அஃப்ரிடி, ஜுனைத் கான், முகமது இர்ஃபான் என்று  தொன்றுதொட்டு வந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாகிஸ்தான் இடது கை பௌலருக்குள்ளும், 1992-ன் மேட்ச் வின்னர் அக்ரம் ஒளிந்திருப்பார்.

ஒவ்வொரு அணியிலும் அப்படித்தான். 1996-ல் ஜெயசூர்யா டிரெண்ட் செட்டராக மாறியபின், இலங்கைச் சிறுவர்கள் அவரைப் பிரதிபலிக்கத் தொடங்கினரே! உபுல் தரங்கா, திரிமன்னே, டிமுத் கருணரத்னே, குசல் பெரேரா என அந்த அணியில்தான் எத்தனை இடதுகை ஓப்பனர்கள். உலகக் கோப்பை - மேட்ச் வின்னர்களை, அடுத்த தலைமுறையின் நாயகர்களை அறிமுகப்படுத்திவைக்கும் தொடர். ஆனால், இந்த உலகக் கோப்பை யாரை அறிமுகப்படுத்தி வைக்கப்போகிறது? போட்டிக்குப் போட்டி 350 ரன்கள் அடிக்கப்படும் தொடரில், எந்த பௌலர் மேட்ச் வின்னராகப்போகிறார்?

கிரிக்கெட்டின் எழுச்சி பெளலர்கள் கையில்?!

இங்கிலாந்துக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ரூட்; இந்தியாவுக்கு தவான், ரோஹித், கோலி; ஆஸ்திரேலியாவுக்கு வார்னர், ஃபின்ச், ஸ்மித்... இப்படி ஒவ்வொரு அணிக்கும் இரண்டு மூன்று பேட்ஸ்மேன்களை மேட்ச் வின்னராகக் காட்டப்போகும் இந்த உலகக் கோப்பை, பௌலர்களை எப்படிக் காட்டப்போகிறது?

கடைசிப் பந்து: பௌலர்கள் கையில்தான் கிரிக்கெட்டின் முடிவு..!


ஒருநாள் போட்டி, டி-20 போல் ஆடப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், பௌலர்கள் எளிதாகக் கையாளப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், பேட்டிங்குக்குச் சாதகமான இந்த இங்கிலாந்து ஆடுகளங்களில், பௌலிங்கின் அருமையை அடுத்த தலைமுறைக்குப் புரியவைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, இந்த பௌலர்களிடத்தில்தான் இருக்கிறது. பேட்டின் முன்பு பந்துக்கான மரியாதையை மீட்டெடுக்கும் பொறுப்பும் இவர்களிடத்தில் இருக்கிறது.

மிகக் கடினமான இடத்தில் போராடி வெற்றியை ஈட்டும்போதுதான், அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். இந்த இங்கிலாந்து ஆடுகளங்களில், பும்ரா, ரபடா, ஸ்டார்க், ரஷீத் போன்றவர்கள் செய்யப்போகும் மாயம்தான், இனி அடுத்த தலைமுறைக்கு பௌலிங்கின் பெருமையை உணர்த்தப்போகிறது. இப்போதும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே தொடரும் எனில், அடுத்தடுத்த ஆண்டுகளில், பௌலிங்கின், பௌலர்களின் முக்கியத்துவமும் மதிப்பும் முற்றிலும் குறைந்துவிடும். இவர்கள் இது நடக்காமல் பார்க்க வேண்டும்.

"What would I do without you? Go back ripping off mob dealers?"

"No, No, No... No... You complete me!"

டார்க் நைட் படத்தில், பேட்மேனிடம் ஜோக்கர் சொல்லும் ஐகானிக் வசனம். கிரிக்கெட்டுக்கும் இது பொருந்தும். பௌலர்கள்தான் பேட்ஸ்மேன்களை முழுமையாக்குகிறார்கள். தரமான பௌலிங்கை எதிர்கொண்டு எடுக்கும் ரன் களுக்குக் கூடுதல் மதிப்பு இருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருக்கும் பௌலர்களின், பௌலிங்கின் வீழ்ச்சி, பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தும். கிரிக்கெட்டின் பேலன்ஸை அது கெடுக்கும். அழிவால் ஒரு விஷயத்தை பேலன்ஸ் செய்ய முற்பட்ட தானோஸ் போல் இல்லாமல், ஆக்கத்தால் சமநிலையை ஏற்படுத்த முயற்சிசெய்ய வேண்டும். பௌலர்கள் எழ வேண்டும். கிரிக்கெட்டைக் காப்பாற்ற, பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் சூப்பர் ஹீரோக்களாக எழ வேண்டும்!

ஓவர் முடிந்தது..!

மு.பிரதீப்கிருஷ்ணா 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism