சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஸ்டம்ப் அடித்த சிக்ஸர்!

ஸ்டம்ப் அடித்த சிக்ஸர்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டம்ப் அடித்த சிக்ஸர்!

ஸ்டம்ப் அடித்த சிக்ஸர்!

சென்ற வாரம் முழுக்க மழையும் குடையுமாக உலகக் கோப்பை முழுக்க ஈரக்காற்று சுழன்று அடித்தது. இளையராஜா பாட்டும் சூடான போண்டாவும்தான் மிஸ்ஸிங். ஏதோ வருணபகவான் கருணையால் அவ்வப்போது ஒன்றிரண்டு மேட்சுகள் உருப்படியாக நடந்தன. மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் நடந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பு இங்கே...

• ஏழாவது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது இந்திய அணி. “ஒருகாலத்துல எப்படி இருந்த டீம்” என வர்ணனை செய்த மஞ்ச்ரேக்கர் உசுப்பேற்றிவிட, “உள்ளூர் கிரிக்கெட்டை மோசமாக நடத்திக்கொண்டிருந்தால் இப்படித்தான்” என கமென்டரியில்  பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை ஆவேசமாக கடிந்துகொண்டிருந்தார் வாசிம் அக்ரம்.

• பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது போட்டியின்போது கொட்டாவி விட்டதுதான் உச்சம். ‘அவனவன் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்னு உருண்டுகிட்டு இருக்கான். இவன் என்னய்யா கொட்டாவி விட்டுட்டிருக்கான்’ என்று ரசிகர்கள் கலாய்க்க, ‘இவ்ளோ ரணகளத்துலயும், எவ்ளோ கூலா இருக்காரு பாரு சிங்கம்’ எனப் பாராட்டுகிறார்கள் இன்னொரு தரப்பு ரசிகர்கள்!

ஸ்டம்ப் அடித்த சிக்ஸர்!

• யூடியூபில் தடதடத்துக்கொண்டிருக்கிறது. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ். சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, ஆறு மாதங்களாக வீடியோக்கள் பதிவிட்டுவருகிறார் ஷோயப் அக்தர். தன் பழைய நினைவுகள், உலகக் கோப்பை பிரிவ்யூ, ரிப்போர்ட், அனாலசிஸ் என ரவுண்டுகட்டி அடிக்கிறார். அவ்வப்போது சில இந்திய வீரர்களும் இதில் நட்புக்காக வந்து முகம் காட்டுகிறார்கள்.  ஹர்பஜன் சிங், சேவாக் போன்றவர்களுடனான வீடியோ உரையாடல்களையும் அவர் பதிவிட, செம டிரெண்ட் ஆகியிருக்கிறது ஷோயப்  சேனல். எந்த சென்சார் கட்டும் இல்லாமல், தன் மனதில் இருப்பதையெல்லாம் மன்கிபாத்தாகப் பேசுகிறார்... இது ஒன்று போதாதா வைரல் ஆக?!

• இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் ஃபீல்டிங் செய்தபோது, கீழே விழுந்து (டைவ் அடித்து அல்ல... கீழே விழுந்து..!) பந்தைத் தடுக்க, ரசிகர்கள் ஸ்டேண்டிங் ஒவேஷனே கொடுத்தார்கள். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட அவர், பௌலிங்கின்போது செய்ததுதான் உச்சக்கட்டம். இவரது பந்தை அடிக்க நினைத்துத் தவற விட்டார் ஜோ ரூட். உடனே கையைக் கண்களுக்கு மேல் வைத்து எதையோ தேடுவதுபோல் செய்தார் கெய்ல். அதுமட்டுமல்லாமல், ரூட் ரன் ஓடியபோது, கிரீஸுக்கு முன்னால் நின்று அவரைத் தடுப்பதுபோல் பாவனை செய்தார். சிரிக்காமல் இதையெல்லாம் செய்ய, மனிதன் விளையாடுகிறாரா இல்லை சீரியஸாக வம்பிழுக்கிறாரா என்று முதலில் புரியாமல்தான் இருந்தது. ஜோ ரூட் இதற்கெல்லாம் சிரித்துக்கொண்டே இருந்ததால், எல்லோரும் அதை ஜாலியாகவே எடுத்துக்கொண்டனர்.

ஸ்டம்ப் அடித்த சிக்ஸர்!

• களத்துக்குள் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கலகலவென இருக்க, கமென்டரி பாக்ஸில் கலகம் செய்துள்ளார் ஒரு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான். நடுவர்களின் தீர்ப்புகள் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதை கமென்டரியில் இருக்கும்போது அப்படியே சொல்லிவிட்டார் மைக்கேல் ஹோல்டிங். அதற்கு ஐ.சி.சி, ‘இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாக வர்ணனையில் சொல்ல வேண்டாம்’ என அவருக்கு மெயில் அனுப்பியிருக்கிறது. அதையெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஹோல்டிங், “இதுவே ஃபிஃபாவாக இருந்திருந்தால், அந்த நடுவர் இந்நேரம் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு ஊருக்குக் கிளம்பியிருப்பார். இன்னொரு உலகக் கோப்பைப் போட்டியில் அவரால் நடுவராக நின்றிருக்கவே முடியாது. ஆனால், இங்குதான் எதுவும் சரியாக இல்லை” என்று நெத்தியடியாக பதிலளித்திருக்கிறார். நடுவரைக் குறைசொல்லக் கூடாது என்றுதானே மெயில் வந்தது. இப்போ மெயில் அனுப்பியவர்களையே போட்டுத்தள்ளிவிட்டார் ஹோல்டிங்!

• இந்த வாரத்தின் ஆச்சர்யம், போல்டாகி சிக்ஸருக்குப் பறந்த பந்து. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்துதான் செம ஹைலைட். மணிக்கு 143 கி.மீ வேகத்தில் ஆஃப் ஸ்டம்புக்குச் சற்று வெளியே பிட்சான பந்து, ஸ்விங்காகி உள்ளே வந்து ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. அற்புதமான பந்து. அதைவிட அற்புதம் என்னவென்றால், ஸ்டம்ப்பில் பட்ட பந்து, எங்கேயும் பிட்சாகாமல் நேரே சிக்ஸ் லைனில் விழுந்ததுதான். ஸ்டம்ப்பில் பட்ட வேகத்தில், 54 மீட்டர் பயணம் செய்திருக்கிறது அந்தப் பந்து. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஸ்டம்ப் சிக்ஸரடித்திருப்பது இதுவே முதல் முறை. ஆர்ச்சரும் வெஸ்ட் இண்டீஸில் பிறந்தவர் என்பதை நோட் பண்ணிக்கங்க மக்கா!

• நான்கு போட்டிகளில் 7 புள்ளிகள் பெற்று செம கெத்தாக வலம் வந்துகொண்டிருக்கிறது இந்திய அணி. ஒரே பிரச்னை, வீரர்களின் காயம்தான். ஏற்கெனவே தவான் காயத்தால் ஓய்வில் இருக்க, இப்போது புவனேஷ்வர் குமார் காயமடைந்திருக்கிறார். அவர்கள் விரைவில் குணமடையாவிட்டால் கொஞ்சம் சிக்கல்தான். ஆனாலும், ராகுல் இருக்காக, ஷமி இருக்காக எனக் கொஞ்சமும் கெத்து குறையாமல்தான் வலம் வருகிறது இந்திய அணி!

-மு.பிரதீப் கிருஷ்ணா, பொ.மாரியப்பன்