Published:Updated:

ஜடேஜா, கௌல் இன்... ராகுல், சஹால் அவுட்... கோட்லாவில் இந்தியா செய்யவேண்டிய மாற்றங்கள்! #INDvAUS

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜடேஜா, கௌல் இன்... ராகுல், சஹால் அவுட்... கோட்லாவில் இந்தியா செய்யவேண்டிய மாற்றங்கள்! #INDvAUS
ஜடேஜா, கௌல் இன்... ராகுல், சஹால் அவுட்... கோட்லாவில் இந்தியா செய்யவேண்டிய மாற்றங்கள்! #INDvAUS

ஹர்டிக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆடும் லெவனில் விஜய் சங்கர் இருப்பது, அனைவர் மீதான நெருக்கடியையும் குறைக்கும். 7 பௌலிங் ஆப்ஷன்கள் இருக்கும்போது ஹர்டிக், ஜாதவ், விஜய் சங்கர் என அனைவர் மீதான நெருக்கடியும் வெகுவாகக் குறையும். அது கேப்டனுக்கு இருக்கும் நெருக்கடியையும் குறைக்கும்.

ஜாம்பவான்களின் குணமே எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராததைச் செய்வதுதான். எல்லாம் முடிந்துவிட்டதாக நினைக்கும் வேளையில், அனைத்தையும் மாற்றி எழுதுவார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தாங்கள் ஜாம்பவான் அணி என்பதைச் சரியான நேரத்தில் நிரூபித்துள்ளது. உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், தாங்கள் உலகக் சாம்பியன்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்தியிருக்கிறார்கள். தோனியின் சொந்த ஊரில் முடிவாகவேண்டிய தொடர், இப்போது கோலியின் மண்ணில் முடிவு காணப்போகிறது. #INDvAUS 

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்த போட்டியில் மாற்றங்கள் ஏதும் செய்யப்போவதில்லை. ஸ்டோய்னிஸ் அணிக்குத் திரும்புவது சந்தேகம்தான். அதனால் வெற்றிக் கூட்டணியைத் தொடரவே ஃபின்ச் விரும்புவார். ஆனால், ஸ்டோய்னிஸ் இல்லாதது பந்துவீச்சில் கொஞ்சம் பின்னடைவைத் தரலாம். ஆறாவது பௌலர் இல்லாததால், ஃபின்ச் 3 ஓவர்கள் வீசவேண்டிய நிலை ஏற்பட்டது. கோட்லா ஆடுகளம் 300 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம் இல்லை என்பதால், பௌலர்கள் மீது நெருக்கடி சற்று அதிகரிக்கும்.

கோலி, தவான், பன்ட் என மூன்று வீரர்கள் தங்கள் சொந்த ஊரில் களமிறங்குகின்றனர். ஏற்கெனவே இரண்டு சதம் அடித்திருப்பதால், கோலியிடம் டெல்லி மக்கள் மீண்டும் ஒரு சதத்தை எதிர்பார்ப்பார்கள். தவான், ஃபார்முக்குத் திரும்பியிருப்பது அவர் மீதான நெருக்கடியைக் குறைக்கும். ஆனால், இந்தப் போட்டியில், கோட்லாவின் உஷ்ணத்தை முழுமையாக உணரப்போவது டிசப் பன்ட்தான்! கடந்த போட்டியில் சில தருணங்களில் சொதப்ப, இந்திய ரசிகர்களாலேயே வசைபாடப்பட்டார் அந்த இளம் வீரர். 

தோனியின் இடத்தை நிரப்பவேண்டிய பொறுப்பு ஒருபக்கம், உலகக் கோப்பை இடத்துக்கான போராட்டம் ஒருபக்கம், சொந்த ஊர் ரசிகர்களின் நெருக்கடி ஒருபக்கம்... இதை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதுதான் அவரின் வாய்ப்புகளை நிர்ணயிக்கும். என்ன இருந்தாலும் மொஹாலி ரசிகர்கள் செய்தது மிகப்பெரிய தவறு. உலகக் கோப்பைக்குத் தேர்வாக அந்த இளைஞனுக்குக் கொடுக்கப்பட்டது இரண்டே வாய்ப்புகள். 21 வயது இளைஞனுக்கு நிச்சயம் நெருக்கடியாகத்தான் இருக்கும். ஆனால், அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நட்சத்திரங்களை மட்டும் கொண்டாடும் இந்திய ரசிகர்களுக்கு இல்லாமல் போனது வருத்தம்தான். இந்தப் போட்டியில் கோட்லா ரசிகர்கள் மட்டுமல்ல, அணி வீரர்களும் அவருக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும். 

இந்தப் போட்டியின் முடிவு ஒருபக்கம் இருக்கட்டும். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தொடரை வெல்வது முக்கியம்தான். ஆனால், எது அவசியம் என்பதை இந்திய அணி நிர்வாகம் உணரவேண்டும். தேவை இந்தக் கோப்பையா, அல்லது உலகக் கோப்பையா என்பதைத் தெளிவாக அவர்கள் முடிவெடுக்கவேண்டும். இந்தப் போட்டியை வெல்ல முழு பலத்துடன் களமிறங்கினால், உலகக் கோப்பைக்கு எந்த பதிலும் கிடைக்காது. அதனால் நாளைய போட்டியில் இந்திய அணி, இந்த மாற்றங்களைச் செய்தால், சில வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம்! 

உலகக் கோப்பைக்கு முன் இந்தியா ஆடும் கடைசி ஒருநாள் போட்டி இது. ஆனால், இன்னும் இரண்டு, மூன்று இடங்கள் உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. குறிப்பாக நம்பர் 4 ஸ்லாட்! இந்த ஒரு போட்டியை வைத்து மட்டும் அந்த இடத்துக்கான வீரரை உறுதி செய்துவிட முடியாது. ஆனால், குறைந்தபட்சம் இந்தப் போட்டியிலாவது சரியான வீரருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். கடந்த போட்டியில் கே.எல்.ராகுல் களமிறங்கினாலும், அவர் நான்காவது வீரராக விளையாடவில்லை. உலகக் கோப்பையில் அந்த இடத்தில் விளையாட அவர் சரியான தேர்வும் இல்லை.

நெருக்கடியான சேஸிங்கில், மிடில் ஆர்டரில் ராகுல் எப்படி ஆடுவார் என்பது தெரியாது. கடந்த சில மாதங்களாகவே டெஸ்ட் போட்டியின் நெருக்கடிகளைச் சமாளிப்பதில் தடுமாறுகிறார். அதேசமயம் டி-20 போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார். இதிலிருந்தே அவர் பிரஷரை சமாளிக்க சரியான சாய்ஸ் இல்லை என்பது விளங்கும். அதேதான் அம்பாதி ராயுடு விஷயத்திலும். சேஸிங்கின்போது டாப் ஆர்டர் உடன் இருந்தால், சிறிது நேரம் தாக்குப்பிடிக்கிறார். இல்லையெனில் விரைவில் வெளியேறுகிறார். அவரை வைத்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாதது. 

இந்நிலையில் இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் - விஜய் சங்கர். இதுவரை பேட்டிங் செய்த 4 இன்னிங்ஸிலுமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நிலைத்து நின்று ஆடவேண்டிய இடத்தில் அதைச் செய்திருக்கிறார். ரன்ரேட்டை அதிகரிக்கவேண்டிய நேரத்தில் அடித்து ஆடியிருக்கிறார். சற்று யோசித்தால், ராகுல், ராயுடு இருவரிடமும் இதில் ஒரு குணம்தான் இருக்கிறது. ராகுலிடம் நிலைத்து நிற்பதை எதிர்பார்க்க முடியாது. ராயுடுவால் 120 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியாது. விஜய் சங்கர் - இவை இரண்டுமே கலந்த பேக்கேஜாக இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல், ஹர்டிக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆடும் லெவனில் விஜய் சங்கர் இருப்பது, அனைவர் மீதான நெருக்கடியையும் குறைக்கும். 7 பௌலிங் ஆப்ஷன்கள் இருக்கும்போது அது அந்த மூவர் மீதான நெருக்கடியும் வெகுவாகக் குறையும். தவிர, கேப்டனுக்கு இருக்கும் நெருக்கடியையும் குறைக்கும். 2003 உலகக் கோப்பையில் 4 ஸ்பெஷலிஸ்ட் பௌலர்கள் போக, சச்சின், சேவாக், கங்குலி, யுவ்ராஜ் சிங், தினேஷ் மோங்கியா என 8 பௌலிங் ஆப்ஷன்கள் (அனைவருமே குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்) இருந்தன. எந்தச் சிக்கலும் இல்லாமல் விளையாடியது அந்த அணி. அப்படியொரு பலம் இந்த அணிக்கும் இருப்பது நல்லது. நாளைய போட்டியில் விஜய் சங்கருக்கு நம்பர் 4-ல் ஒரு வாய்ப்பு கொடுப்பது உலகக் கோப்பைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அவர் நான்காவது வீரராகக் களமிறங்கினால், ஏழாவது இடம் காலியாகும். அங்கு யாரை இறக்குவது? ஜடேஜா! விஜய் சங்கர் ஹர்டிக் பாண்டியாவுக்கு இணையான மாற்று இல்லை. சங்கரையோ, ஜாதவையோ ஐந்தாவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்த முடியாது. இருவரும் இணைந்து 10 ஓவர்கள் வீசுவதும் இந்தியாவுக்குப் பலவீனம்தான். ஹர்ஷா போக்ளே சொன்னதுபோல் `2 Sixth bowlers won't make a fifth'. அதனால், ஜடேஜாவை பௌலராகக் களமிறக்காமல், ஆல்ரவுண்டராகக் களமிறக்கி, அவரின் பேட்டிங்கை சோதிப்பது அவசியம். தொடர்ந்து காயங்களால் அவதிப்படும் பாண்டியாவுக்கு உலகக் கோப்பைக்கு இடையிலும் ஓய்வு தேவைப்படலாம். அப்போது அந்த இடத்தை நிரப்ப ஜடேஜா தயாராக இருக்கவேண்டும். 

ஜடேஜா ஆடினால், 3 பௌலர்களோடு களமிறங்குவதா? இல்லை. இந்தியா இப்போதுவரை 3 வேகப்பந்துவீச்சாளர்களைத்தான் உறுதி செய்திருக்கிறது. 10 லீக் போட்டிகள் கொண்ட ஒரு உலகக் கோப்பை தொடருக்கு 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் மட்டும் செல்வது ஆபத்தானது. நான்காவது பௌலர் இடத்தை கலீல் அஹமது, உமேஷ் யாதவ் யாரும் உறுதி செய்யாத நிலையில், இந்தத் தொடருக்கான அணியில் இருக்கும் சித்தார்த் கௌல், இந்தப் போட்டியில் ஆடுவது நல்லது. நிர்வாகத்தின் உலகக் கோப்பை திட்டங்களில் அவர் இல்லை என்றாலும், நிராகரிப்பதற்கு முன் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும். இடது கை 'ஃபிங்கர்' ஸ்பின்னர் ஆடுவதால், லெக் ஸ்பின்னர் சஹாலுக்கு ஓய்வு கொடுக்கலாம். 

இந்த மாற்றங்களில் ஒன்றாவது நாளை பலன்கொடுத்தாலும், உலகக் கோப்பை அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும். ஐ.பி.எல் தொடரில் ஒவ்வோர் அணியிலுமே இந்தியாவின் முக்கிய வீரர்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அந்த அணிகள், பும்ரா, புவி, ஹர்டிக் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்குமா தெரியவில்லை. இந்நிலையில், உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்படும் 15 பேருமே எந்த நேரத்திலும், தேவையான இடத்தை நிரப்பக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அதற்கு இந்த முயற்சிகள் செய்து பார்ப்பது அவசியம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு