Published:Updated:

மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS

கோலி - இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த வீரர். ரன் மெஷின். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இவையெல்லாம் கோலி தன் ஆஸ்தான இடத்தில் களமிறங்கும்போதுதான்.

மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS
மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS

மொஹாலி போட்டியில் இந்தியா தோற்றதற்குப் பலரும் பல காரணங்கள் வகுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஷமி ஆடியிருக்க வேண்டும், இரண்டு ஸ்பின்னர்கள் ஆடியிருக்க வேண்டாம், விஜய் சங்கர் இன்னும் சில ஓவர்கள் பந்து வீசியிருக்கலாம், பன்ட் இடத்தில் தினேஷ் கார்த்திக் ஆடியிருக்கலாம் என்று பல கருத்துகள் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. அணித் தேர்வு, பௌலிங் ஆப்ஷன்களைக் கையாண்டது எனக் கோலி சில தவறுகள் செய்திருக்கிறார். அந்தத் தவறுகள் ஒரு வெற்றியை அபகரித்துவிட்டன. ஆனால், இவை அடுத்தடுத்த போட்டிகளில் தொடராது, தாக்கம் ஏற்படுத்தாது. ஆனால், அவற்றைவிட, மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு - ராகுலை மூன்றாவதாக இறக்கிவிட்டு, தான் நான்காவது வீரராகக் களமிறங்கியது. 

மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS

உலகக் கோப்பைக்கு முன் இன்னும் ஒரேயொரு ஒருநாள் போட்டியில்தான் இந்தியா விளையாடவிருக்கிறது. ஆனால், இன்னும் நான்காவது வீரராக யாரைக் களமிறக்குவது என்ற கேள்விக்கு இந்திய அணியிடம் பதில் இல்லை. கடந்த சில மாதங்களாக அந்த இடத்தைத் தக்கவைத்திருந்த அம்பாதி ராயுடு, கடைசி கட்டத்தில் சொதப்பிக்கொண்டிருக்கிறார். பன்ட் இன்னும் முழுமையான வீரராக மாறவில்லை. தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்புகளை இழந்துவிட்டார். லோயர் மிடில் ஆர்டர் பலவீனமடையும் என, தோனியை நான்காவதாகக் களமிறக்கத் தயங்குகிறார் கோலி. 

மொஹாலி ஆட்டம் ராகுலுக்கான தேர்வு என்று நினைத்தால், அவரை புரொமோட் செய்துவிட்டு, அந்த இடத்தில் களமிறங்குகிறார் கோலி. `இப்போது இருப்பதில் அதுதான் பெட்டர் ஆப்ஷன்’ என்கிறார்கள் பலர். ஆனால், அந்த முடிவு இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதத்தை மழுங்கச் செய்கிறது என்பதுதான் உண்மை. அந்த பொசிஷனில் ராயுடு, ராகுல், விஜய் சங்கர் என யார் வேண்டுமானாலும் களமிறங்கட்டும். ஆனால், கோலி வேண்டாம்! 

மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS

கோலி - இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த வீரர். ரன் மெஷின். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இவையெல்லாம் கோலி தன் ஆஸ்தான இடத்தில் களமிறங்கும்போதுதான். ஒருநாள் போட்டிகளில், கடந்த சில ஆண்டுகளில், பல விதமான ஆடுகளங்களை, கடினமான சூழ்நிலைகளை, பலமான எதிரணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் கோலி. ஆனால், அவையெல்லாம் மூன்றாவது வீரராகக் களமிறங்கியபோதுதான். நான்காவது வீரராகக் களமிறங்கிய போட்டிகளில், கோலி தன் முழு வீரியத்தோடு ஆடவில்லை என்பதுதான் உண்மை. 

மூன்றாவது வீரராகக் களமிறங்குவதிலும், நான்காவது வீரராகக் களமிறங்குவதிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. போட்டியின் சூழ்நிலை, அணியின் தேவை மாறியிருக்கும். அதுபோன்ற சூழ்நிலையில், கோலியால் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியாமல் போகலாம். நம்பர்கள் அதைத்தான் சொல்கின்றன. 

மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS

2015-ம் ஆண்டுக்குப் பிறகு, 73 ஒருநாள் போட்டிகளில் (நம்பர் 3 பொசிஷனில்)  4,565 ரன்கள் குவித்திருக்கிறார் கோலி. சராசரி 80.08! 20 சதங்கள், 16 அரைசதங்கள். அதாவது சுமார் ஒவ்வொரு 2 போட்டிக்கும் ஒருமுறை 50+ ஸ்கோர் அடித்துள்ளார். இப்படி மிரட்டல் ஃபார்மில் இருக்கும் அவர், நான்காவது வீரராகக் களமிறங்கிய போட்டிகளின் எண்கள் மிகவும் மோசமாகவே இருக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் 7 முறை மிடில் ஆர்டரில் (நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில்) களமிறங்கியிருக்கிறார் கோலி. அந்த 7 போட்டிகளிலும் சேர்த்து அவர் அடித்த ஒட்டுமொத்த ரன்கள் - 50! சராசரி 8.33. ஒரு அரைசதம் கூட இல்லை. அதிகபட்சமே 12 தான். அதைவிட உறுத்தலான விஷயம், அதில் எந்தப் போட்டியிலும் அவர் 18 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை என்பதுதான். 

மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS

ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டி-20 போட்டிகளிலும் கோலியின் எண்கள் இதைத்தான் சொல்கின்றன. சர்வதேச டி-20 போட்டிகளில் அவரது சராசரி 50.28. டாப் ஆர்டரில் 54.77. ஆனால், நான்காவது பொசிஷனில் அவரது சராசரி 33.12 தான். அதேபோல், சுமார் ஒவ்வொரு 3 டி-20 போட்டிக்கும் ஒரு அரைசதம் எடுத்துள்ள அவர், நான்காவது இடத்தில் ஆடிய 10 இன்னிங்ஸ்களில், ஒன்றில் மட்டுமே அரைசதம் கடந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 தொடர் முதல் மொஹாலி ஒருநாள் போட்டிவரை அனைத்துமே இந்த எண்களை தெளிவாகக் காட்டும்.

மூன்றாவது வீரராக, வேறொரு லெவலில் ஆடும் கோலி, மற்ற வீரர்களின் வாய்ப்புகளுக்காக மாற்றிக் களமிறங்குகிறார். 2015 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணித்தின்போது ரஹானே, ராயுடு நம்பர் 3 பொசிஷனில் ஆட நான்காவது வீரராக ஆடினார் கோலி. சமீபத்திய டி-20 போட்டிகளிலும், இந்த ஒருநாள் போட்டியிலும் கே.எல்.ராகுலுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சரி, இந்தப் போட்டிகளில் கோலிதான் சொதப்புகிறார். அவர் இடத்தில் ஆடிய அந்த வீரர்களாவது சரியாக விளையாடினார்களா என்றால் இல்லை! 

மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS

நேற்று, உலகக் கோப்பை வாய்ப்பு மிக அருகில் இருந்த நிலையில், ராகுல் அடித்தது 26 ரன்கள்தான்! இதற்கு முன் அவர் மூன்றாவது வீரராகக் களமிறங்கிய மற்றொரு ஒருநாள் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். அந்தப் போட்டியில் 5-வது வீரராகக் களமிறங்கிய கோலியும் 4 ரன்களே எடுத்தார். புவனேஷ்வர் அரைசதம் அடித்து அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தரவேண்டியிருந்தது. அந்த ஆஸ்திரேலிய முத்தரப்பு தொடரின் 3 இன்னிங்ஸ்களில் ரஹானே, ராயுடு சேர்ந்து அடித்தது 58 ரன்களே! இப்படி ஒவ்வொரு முறையும், அவர்களும் சொதப்ப, புது இடத்தில் கோலியும் சொதப்புகிறார். 

உலகக் கோப்பை போன்றதொரு மிகப்பெரிய தொடருக்குச் செல்வதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதம், முழு நம்பிக்கையுடன் இருப்பது அவசியம். மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக, அவர் தன் இடத்தை விட்டுக்கொடுப்பது நிச்சயம் பின்னடைவுதான். அதுவும், மிடில் ஆர்டரில் கன்சிஸ்டென்ட்டாக விளையாடும் வீரர்கள் இல்லாத நிலையில் அவர்களுக்காக அவர் தன் இடத்தை மாற்றிக்கொள்வது நல்லதல்ல. 

மொஹாலியில் கோலி செய்த மிகப்பெரிய தவறு... ஏன் இந்த சோதனை முயற்சி? #INDvAUS

'இந்தியாவின் மிகச்சிறந்த வீரர் மிடில் ஆர்டரில் ஆடுவது, அணிக்கு இன்னும் பலத்தை கூட்டும்' என்று பலரும் சொல்லலாம். ஒருவேளை, ஐந்தாவது போட்டியில் மூன்றாவது வீரராகக் களமிறங்கி ராகுல் அரைசதமோ, சதமோ கூட அடிக்கலாம். ஆனால், அதற்காக, கோலி இந்த முடிவை எடுத்தால் அது நிச்சயம் இந்திய அணிக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். நான்காவது இடத்தில், கோலி விளையாடவேண்டும் என்பதற்கு எண்கள் சாதகமாக இல்லை. அதேபோல் ராகுலுக்காக அந்த இடத்தை விடவேண்டுமா என்பதையும் யோசிக்கவேண்டும். 

பிர்மிங்ஹம் டெஸ்ட் போட்டியில், ராகுலை களமிறக்க புஜாராவைக் காவு வாங்கினார் கோலி. விளைவு, தோல்வி, விமர்சனங்கள் மட்டுமே. டெஸ்ட் போட்டியில் அந்த இடத்தில் புஜாரா எவ்வளவு முக்கியமோ, ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இடத்துக்கு கோலி அவ்வளவு முக்கியம். அந்த நெருக்கடியைச் சமாளிக்கும் திறன் ராகுலுக்கு இல்லை. அவருக்காக அந்த இடத்தை விடுவது சரியும் இல்லை. அடுத்த போட்டியிலேயே, கோலி தன்னுடைய இந்த பரிசோதனைகளை நிறுத்திக்கொள்வது நல்லது. இப்போது அதைச் செய்தாலும், உலகக் கோப்பையில் செய்யாமல் இருக்கவேண்டும். இல்லையெனில் இந்தியாவின் கோப்பை கனவுக்கு அதுதான் முதல் முட்டுக்கட்டையாக இருக்கும்.