பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அம்பயர்தான் அவுட்!

அம்பயர்தான் அவுட்!
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பயர்தான் அவுட்!

அம்பயர்தான் அவுட்!

சத்தல் கேட்சுகளும் அலட்சிய அம்பயரிங்குமாக நடந்துகொண்டிருக்கிறது உலகக் கோப்பைத் தொடர். களத்துக்கும் அதற்கு வெளியேவும் இந்த வாரம் நடந்த சில சுவாரஸ்யங்கள்...

அம்பயர்தான் அவுட்!

• ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரனை உருவாக்கியுள்ளது பிரிஸ்டல் நகரம். உலகக் கோப்பையை நடத்தும் ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு வகையில் அதை வரவேற்றுக்கொண்டிருக்கின்றன. பிரிஸ்டலில், 4 மீட்டர் உயர கிரிக்கெட் வீரன் சிலையை நிறுவியுள்ளனர். வெள்ளை நிறச் சிலையில், விளையாடும் 10 அணிகளின் கொடிகளும் இடம்பெற்றுள்ளன. பிரிஸ்டல் நகரின் சிறுவர்கள், கிரிக்கெட் ரசிகர்களெல்லாம் இணைந்துதான் அந்தச் சிலைக்கு வண்ணம் பூசியுள்ளனர்.


• இந்த ஐ.பி.எல் தொடரில் நடுவர்களின் செயல்பாடு மிகமிக மோசமாக இருந்தது. சரி, உள்ளூரில்தான் அப்படியிருக்கும் என நினைத்தால் உலகக் கோப்பையில் அதற்கு மேல் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின்போது, ஒரே ஓவரில் இரண்டு முறை இந்த அம்பயரிங் காமெடிகள் அரங்கேறின. மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு ஓவரில், கெய்ல் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். முதல் கீப்பர் கேட்சுக்கு அப்பீல் செய்ய, உடனடியாக அவுட் கொடுத்தார் அம்பயர் கிறிஸ் கேஃப்னி. கெய்ல் ரிவ்யூ கேட்க, பந்து பேட்டில் படாமல் ஸ்டம்பில் பட்டுச் சென்றது தெரிந்தது. முடிவை மாற்றிக்கொண்ட அம்பயர், இரண்டு பந்துகள் கழித்து மீண்டும் ஒரு தவறான அவுட் கொடுத்தார். இந்த முறை எல்.பி.டபிள்யூ அப்பீல். டி.வி-யில் பார்ப்பவர்களுக்கே, பந்து லெக் ஸ்டம்புக்கு வெகுதொலைவில் செல்வது தெரிந்தது. ஆனால், கொஞ்சமும் யோசிக்காமல் அவுட் கொடுத்தார் நடுவர். செம கடுப்பான கெய்ல், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே உடனடியாக ரிவ்யூ கேட்டார். பால் டிராக்கிங்கில் எல்லாம் பச்சையாக வர, கேஃப்னியின் முகம் சிவந்தது. “நீங்க அம்பயராண்ணே?” என நெட்டிசன்கள் கொடூரமாகக் கலாய்க்கத் தொடங்க, எல்லா ஏரியாவிலும் அடிவாங்கினார் கேஃப்னி.

அம்பயர்தான் அவுட்!

• சென்றவாரம் அட்டகாசமாக ஒரு கேட்ச் பிடித்து மெர்சல் காட்டினார் பென் ஸ்டோக்ஸ். இந்த வாரம், அதையும் மிஞ்சும்படி ஒரு கேட்ச் பிடித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரல். ஸ்டீவ் ஸ்மித் அடித்த பந்தை, பௌண்டரி லைனின் ஓரத்திலேயே ஓடி, ஒற்றைக் கையில் அட்டகாசமாகக் கேட்ச் பிடித்தார். மீண்டும் கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, பந்தைத் தூக்கிப்போட்டுப் பிடித்து கேட்சை முழுமையாக்கினார். ஏற்கெனவே அவரது சல்யூட் செலிபிரேஷன் செமையாக வைரலாகியிருக்க, இந்த கேட்சுக்குப் பிறகு அரங்கில் இருந்த மொத்தக் கூட்டமும் காட்ரலுக்கு அவரது பாணியிலேயே சல்யூட் செய்தது!

•   ‘இந்த உலகக் கோப்பையில் 350 ரன்னெல்லாம் சர்வசாதாரணமாக எடுக்கப்படும்’, ‘500 ரன் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என பேட்டிங்குக்குச் சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்கள் பற்றிப் பரவலான பேச்சு இருந்தது. நாம்கூட எழுதினோம். ஆனால், தொடக்க வாரத்தில் பேட்ஸ்மேன்களைவிட, பௌலர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீசி, வெஸ்ட் இண்டீஸ் ஏற்படுத்திய டிரெண்டை ஒவ்வொரு அணியும் அப்படியே பிடித்துக்கொண்டன. பல அணிகளும் கலர் உடையணிந்து, டெஸ்ட் மேட்ச்தான் விளையாடினார்கள். டெஸ்ட் மேட்ச் லைன், லென்த், ஷார்ட் பால், 3-4 ஸ்லிப் ஃபீல்டர்கள் என... பார்ப்பதற்கு டெஸ்ட் போலத்தான் இருந்தது. மேட் ஹென்றி, ஒஷேன் தாமஸ், முகமது ஆமிர், மிட்செல் ஸ்டார்க், சஹால் என ஒவ்வொருவரும் பட்டையைக் கிளப்ப, எதிர்பார்த்த அளவுக்கு பேட்ஸ்மேன்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்தியாதான் ஆஸ்திரேலியாவை அடித்து துவம்சம் பண்ணி ரன் குவித்தது.

அம்பயர்தான் அவுட்!

• வழக்கமாக அரையிறுதியில் சொதப்பும் தென்னாப்பிரிக்கா, ‘ஏன் அவ்வளவு தூரம் போவானேன்’ என இந்த உலகக் கோப்பையில் தொடக்கத்திலிருந்தே சொதப்பத் தொடங்கிவிட்டது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி. வங்கதேசத்திடமும் எதிர்பாராத தோல்வி. மோசமான பேட்டிங், படுமோசமான ஃபீல்டிங் எனக் களத்தில் சொதப்பிக்கொண்டிருக்க, ‘இன்னும் முடியல’ என விதி வழக்கம்போல் அவர்களோடு விளையாடத் தொடங்கியது. இரண்டாவது போட்டியின்போது முக்கியமான பந்துவீச்சாளர் எங்கிடி காயத்தால் ஆட்டத்திலிருந்து வெளியேற, இந்திய அணியுடனான போட்டிக்கு முன் டேல் ஸ்டெய்னும் உலகக் கோப்பையிலிருந்தே வெளியேறினார். ‘ஸ்டெய்ன் மட்டும் ஐ.பி.எல் ஆடாம இருந்திருந்தா இந்நேரம் இங்க இருந்திருப்பாரோ’ என கேப்டன் டுப்ளெஸ்ஸி ஃபீல் செய்துகொண்டிருக்க, புதிதாக டி வில்லியர்ஸ் பக்கமிருந்து ஒரு கதை வந்தது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஏ.பி, இந்த உலகக் கோப்பைக்கு முன் ‘மீண்டும் அணிக்கு வருகிறேன்’ என அணி நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார். ஆனால், ‘உங்க இஷ்டத்துக்கெல்லாம் ஆட முடியாது’ என அதை மறுத்தது தென்னாப்பிரிக்க அணி.

• பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்தப் போட்டி கைவிடப்படுவதற்கு முன் கமென்டரி பாக்ஸில் ஒரு ஜாலி மேட்சை நடத்தினார்கள் வர்ணனையாளர்கள். வாசிம் அக்ரம், கிரீம் ஸ்மித், குமார் சங்கக்காரா என கமென்டரி பாக்ஸில் இருந்தவர்கள், அங்கேயே பேட்டும் பாலுமாகக் களத்தில் இறங்க, அந்த வீடியோ செம ஹிட். அதற்கிடையே, வாசிம் அக்ரமைக் கண்ட பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் “இந்த பாகிஸ்தான் டீமுக்கு உங்க பங்களிப்பு தேவைப்படுது” என்று அவரிடம் சொல்ல, “என் பௌலிங் இப்போலாம் அந்த அளவுக்கு இருக்காதே” என்று சொல்லியிருக்கிறார் அக்ரம். “பரவாயில்ல, பேட்டிங் பண்ணுவீங்கல்ல” என்று கேட்டுள்ளார் அந்த ரசிகர். என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்துக்கொண்டே இருந்தாராம் ஸ்விங் கிங்!

- மு.பிரதீப்கிருஷ்ணா