Published:Updated:

ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத 9 பேர்! - 45 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் #WIvENG

ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத 9 பேர்! - 45 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் #WIvENG
ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத 9 பேர்! - 45 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் #WIvENG

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன்களில் ஆட்டமிழந்தது. சர்வதேச டி20 வரலாற்றில் இது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஒருநாள் தொடர் சமநிலையில் முடிந்த நிலையில், முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி பாஸட்டர் மைதானத்தில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், 5-வது விக்கெட்டுக்கு கைகோத்த ஜோ ரூட் - சாம் பில்லிங்ஸ் ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடி, 82 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய சாம் பில்லிங்ஸ், 47 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், 5 ரன்களுடன் மூன்றாவது ஓவரிலேயே நடையைக் கட்டினார். அதே ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹோப்பும் வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 11.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹெட்மெயர் மற்றும் பிராத்வொய்ட் ஆகியோர் தலா 10 ரன்கள் எடுத்தனர். அதேபோல, இரட்டை இலக்க ரன்களை எடுத்த இரண்டு பேர், அவர்கள் மட்டுமே. மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. இங்கிலாந்து அணி தரப்பில் 2 ஓவர்கள் வீசிய கிறிஸ் ஜோர்டார், 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரன்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். 

அதேபோல, அந்தப் போட்டியில் 45 ரன்களில் ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது மிகக்குறைவான ஸ்கோரைப் பதிவுசெய்தது. இலங்கை அணிக்கெதிராக கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில், 39 ரன்கள் எடுத்த நெதர்லாந்து அணியைவிட வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டிக்குப் பின்னர் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், `இது எங்களின் மோசமான பேட்டிங் ஃபெர்பாமன்ஸ். மற்ற போட்டிகளைப் போலவே இதுவும் ஒரு போட்டிதான். இந்தத் தொடரைப் பொறுத்தவரை நாங்கள் பெரும்பாலும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம்’ என்றார். இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேசுகையில், `சூழலை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்றார்போல விளையாடியது எங்களின் மிகப்பெரிய முன்னேற்றம் என்று நினைக்கிறேன். 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தபோது, ஜோ ரூட் மற்றும் சாம் பில்லிங்ஸ் கைகோத்து, மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி அழைத்துச்சென்றது முக்கியமான நிகழ்வு. அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறோம்’ என்றார்.

இந்த வெற்றிமூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 3-வது டி20 போட்டி, இதே மைதானத்தில் நாளை (10.3.2019) நடைபெறும்.