Published:Updated:

தடுமாறும் தவான் - உலகக்கோப்பையில் இருக்குமா இடது - வலது ஓப்பனிங் காம்பினேஷன்?

தடுமாறும் தவான் - உலகக்கோப்பையில் இருக்குமா இடது - வலது ஓப்பனிங் காம்பினேஷன்?
தடுமாறும் தவான் - உலகக்கோப்பையில் இருக்குமா இடது - வலது ஓப்பனிங் காம்பினேஷன்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் ஆஸ்திரேலியாவை எளிதில் சாய்த்த இந்தியா, இந்தப் போட்டியில் சற்று தடுமாறியது. 313 ரன்கள் என்பது மிகப்பெரிய டார்கெட். ஆனால், அதனை எடுக்கக்கூடிய அளவுக்கு விக்கெட்டுகளை ஸ்டாண்ட் பண்ணாமல் பேட்டிங்கில் வீரர்கள் சொதப்பினர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களைவிட ஓப்பனிங் பேட்டிங் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கத் தவறினர். குறிப்பாக, தவான் தொடர்ந்து சொதப்பிவருகிறார். இந்தத் தொடரில், மூன்று போட்டிகளிலும் சேர்த்து அவர் எடுத்துள்ள ரன்கள் 22 மட்டுமே.

இதிலும், முதல் போட்டியில் டக் அவுட் ஆகவும், நேற்றைய போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். அதுவும், 10 பந்துகளை எதிர்கொண்டு இந்த ஒரு ரன்னை எடுத்திருந்தார். கடைசியாக நடந்த ஐந்து ஒருநாள் போட்டிகளில், தவான் எடுக்கும் மூன்றாவது சிங்கிள் டிஜிட் ஸ்கோர் இதுவாகும்.ஆனால், கடைசியாக தவான் பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளை எடுத்துக்கொண்டால், அதில் அவர் இரண்டு இன்னிங்ஸில் மட்டுமே 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆறு தடவை ஒற்றை இலக்க எண்களிலும், இரண்டு முறை டக் அவுட்டும் ஆகியுள்ளார்.

2019-ம் ஆண்டில், இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள தவான், அதில் சேர்த்த ரன்கள் 261 மட்டுமே. அவரின் சராசரி 26.50. ஓப்பனிங்கில் களமிறங்கிவரும் ரோஹித்தும் தவானும், கடந்த ஆறு போட்டிகளாக 50 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப்பைக் கொண்டு செல்லவில்லை என்பது கூடுதல் சோகம். உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் இது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்கிற ரீதியில், அணிக்கு நல்ல தொடக்கம் கொடுப்பதற்கு தவானின் ஃபார்ம் என்பது தேவையான ஒன்று.

ஆனால், சமீபகாலமாக அவர் ஃபார்ம் இல்லாமல் தவித்துவருகிறார். இவர் விரைவில் அவுட் ஆவதால், மொத்த பிரஷரும் கோலி மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது விழுகிறது. நிலைமை இப்படி இருக்க, தவானின் ஃபார்ம் குறித்து பேசிய பேட்டிங் கோச் சஞ்சய் பங்கார், ``தவான், தனது ஷாட் செலெக்‌ஷனில் தோல்வி அடைந்துவருகிறார். இரண்டாவது போட்டியில், தவானின் ஆட்டம் நன்றாக இருந்தது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களுக்கு ஒரு முக்கிய வீரர்.

ஓப்பனிங்கில் இடது - வலது கூட்டணி எப்படி ஒர்க்அவுட் ஆகிறது என்பதை அவர் பலமுறை உணர்த்தியிருக்கிறார். அவர் அதிக வேல்யூ உள்ள ஒரு வீரர். விரைவில் அவர் நல்ல ஃபார்முக்கு வருவார்" என்றார்.