Published:Updated:

`உலகக் கோப்பை அணியில் விஜய் சங்கர் இருக்க வேண்டும்!’ - கங்குலியின் லாஜிக்

`உலகக் கோப்பை அணியில் விஜய் சங்கர் இருக்க வேண்டும்!’ - கங்குலியின் லாஜிக்
`உலகக் கோப்பை அணியில் விஜய் சங்கர் இருக்க வேண்டும்!’ - கங்குலியின் லாஜிக்

உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெற வேண்டும் என முன்னாள் கேப்டன் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30-ம் தேதி தொடங்க இருக்கிறது. உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் வீரர்கள் தேர்வு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

``தற்போதைய இந்திய வேகப்பந்துவீச்சுக் கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பும்ராவாக இருந்தாலும் சரி, ஷமியாக இருந்தாலும் சரி தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இங்கிலாந்து ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள். புவனேஷ்வர் குமாருக்கு அடுத்தபடியாக நான்காவது வேகப்பந்துவீச்சாளராக உமேஷ் யாதவைத் தேர்வு செய்ய வேண்டும்’’ என்றார். 

பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரை தவானின் சமீபத்திய ஃபார்ம் கவலையளித்தாலும், இங்கிலாந்து போன்ற வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் ரோஹித் ஷர்மாவுடன் தவான் களமிறங்குவதே சிறப்பாக இருக்கும் என்றும் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார். கேப்டன் விராட் கோலி மூன்றாவது வீரராகக் களமிறங்குவதுடன் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ராயுடு, தோனி மற்றும் கேதர் ஜாதவ் என பேட்டிங் ஆர்டரை வலுவாகக் கட்டமைக்க வேண்டும் என்றும் கங்குலி கூறியிருக்கிறார். 

ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜாவா விஜய் சங்கரா என்ற விவாதம் நாக்பூர் ஒருநாள் போட்டிக்குப் பின்னர் கிரிக்கெட் விமர்சகளிடையே எழுந்துவருகிறது. இந்த விவாதம் குறித்து பேசிய கங்குலி, ``உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் நிச்சயம் இடம்பெற வேண்டும். ஜடேஜா உலகக் கோப்பைக்கான அணியில் இருக்கக் கூடாது. நாக்பூர் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய விஜய் சங்கர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார். 

உலகக் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் முதலிடம் இந்தியாவுக்கே என்று குறிப்பிடும் கங்குலி, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் போட்டியில் நிற்கும் என்றார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி நல்ல ஃபார்மில் இருப்பதாகக் கூறிய அவர், இதனால் வரும் உலகக் கோப்பைத் தொடர் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.