Published:Updated:

ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசிப்போட்டி?! தொடரை வெல்லுமா இந்தியா? #IndVsAus #Preview

உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது உண்மை எனில், அவரது சொந்த மண்ணான ராஞ்சியில் இதுதான் அவரின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கும்.

ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசிப்போட்டி?! தொடரை வெல்லுமா இந்தியா? #IndVsAus #Preview
ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசிப்போட்டி?! தொடரை வெல்லுமா இந்தியா? #IndVsAus #Preview

டைசி ஓவர் பரபரப்பு வெற்றியால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கிறது இந்திய அணி. ராஞ்சியில் நடக்கவிருக்கும் மூன்றாவது போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமானது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், அதைத் தடுக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன. #INDvsAUS

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி ``கடைசி நிமிடப் பரபரப்பில் வெற்றிபெறுவது, இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. உலகக்கோப்பையிலும் இதுபோன்ற சுமாரான ஸ்கோர்கள் எடுத்தால், சுதாரித்துக்கொண்டு வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது” என்றார். வெற்றியா, தோல்வியா என்ற கடைசி நிமிடப் போராட்டத்தில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் வென்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே எளிதாக வெற்றி பெற முடியும். 

ஹைதராபாத், நாக்பூர் போட்டிகளில் ஒரே அணியுடன் களமிறங்கிய இந்திய அணி, இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்க்கவுள்ளது. 250 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டிய இந்தியப் பந்துவீச்சாளர்கள்தான் கோலி அண்ட் கோவுக்கு பலம். நாக்பூர் போட்டியில், உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் பும்ராவின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம். பும்ரா, புவனேஷ்வர் கூட்டணி, எப்போதுமே  இந்தியப் பந்துவீச்சுக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இப்போது அணியில் இணைந்துள்ள புவனேஷ்வர் குமார் ``ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. பும்ரா விக்கெட் எடுக்கும்போது, நான் ரன் குவிப்பைக் கட்டுக்குள் வைக்க முயற்சிசெய்வேன். நான் விக்கெட் எடுக்கும்போது, பும்ரா ரன்களைக் கட்டுக்குள் வைப்பார். இந்தக் கூட்டணி வொர்க்-அவுட்டாகியுள்ளது. மேலும்,  ஐ.பி.எல் தொடரில் கவனமாக விளையாடி காயங்கள் ஏதுமின்றி உலகக்கோப்பைக்குத் தயாராக வேண்டும். உலகக்கோப்பையில் விளையாடுவதிலேயே வீரர்களின் முழு கவனமும் உள்ளது” என்றார்.

ராஞ்சி போட்டியில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்பின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தவேண்டியது அவசியம்.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 46 ரன்கள், கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் எனத் தமிழக வீரர் விஜய் சங்கரின் சிறப்பான ஆல்-ரவுண்டர் ஆட்டம், ஹர்திக் பாண்டியாவின் வெற்றிடத்தைக் கச்சிதமாக நிரப்பியுள்ளது. இந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டம் தொடர்ந்தால், உலகக்கோப்பைத் தொடரில் விஜய் சங்கருக்கான இடம் உறுதியாகிவிடும். போட்டி கைவிட்டு போகும்போதும், வெற்றிப் பாதையில் மாற்றி அழைத்துச் செல்லும் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் ஆட்டம் தொடர்ந்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றும். 

நாக்பூர் ஒரு நாள் போட்டியில் 3.22 எகானமி, 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், ராஞ்சி போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார். கம்மின்ஸ், ஜம்பா பந்துவீச்சை சமாளித்து விளையாடவேண்டிய கட்டாயம் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு உள்ளது. 

ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா கூட்டணி பெரிதாக சோபிக்கவில்லை. முதல் போட்டியில் கைகொடுத்த கேதர் ஜாதவ், தோனி அடுத்த போட்டியில் ஏமாற்றினர். அணியில் இடம்பெறுவாரா மாட்டாரா என்ற குழப்பத்துக்கு விடை சொல்லாமலேயே விளையாடிவரும் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக அடுத்த போட்டிகளில் ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இந்திய அணியின் பேட்டிங் சிறிது தடுமாறியுள்ள நிலையில், ஒரு நாள் போட்டிகளில் 40-வது சதத்தை நிறைவுசெய்த கேப்டன் கோலி, ஒன் மேன் ஆர்மியாய் இந்திய அணியைக் காப்பாற்றிவருவது தொடர்கதையாகிவிட்டது. மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடும்பட்சத்தில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். 

உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது உண்மை எனில், அவரது சொந்த மண்ணான ராஞ்சியில் இதுதான் அவரின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கும். ராஞ்சியில் தோனியின் அட்டகாசத்தை இன்று எதிர்பார்க்கலாம்!