Published:Updated:

தோனி கொடுத்த ஸ்பெஷல் விருந்து! - நெகிழ்ந்துபோன இந்திய வீரர்கள் #Dhoni

தோனி கொடுத்த ஸ்பெஷல் விருந்து! - நெகிழ்ந்துபோன இந்திய வீரர்கள் #Dhoni
தோனி கொடுத்த ஸ்பெஷல் விருந்து! - நெகிழ்ந்துபோன இந்திய வீரர்கள் #Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, சக வீரர்களுக்கு ராஞ்சியில் உள்ள தன் வீட்டில் நேற்று இரவு விருந்து அளித்தார். 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் முறையே 6 விக்கெட் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நடப்பு ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் ராஞ்சிக்கு நேற்று வந்தனர். 

37 வயதான தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்த இந்திய வீரர்களுக்கு நேற்று இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்தில், கேப்டன் விராட் கோலி, சஹால், பன்ட், தவான், கேதர் ஜாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து சஹால், பன்ட், தவான் மற்றும் கோலி ஆகியோர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருக்கிறார்கள். விருந்துக்காக தோனிக்கும் அவரது மனைவி சாக்‌ஷிக்கு சஹால் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதேபோல், `எங்களது ஃபிட்னெஸ்ஸை குலைத்துவிட்டார்’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டு தோனிக்கு தனது ஸ்டைலில் ரிஷப் பன்ட் நன்றி தெரிவித்திருக்கிறார்.   

ராஞ்சி மைதானத்தில் இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில், இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டு போட்டிகளில் பேட் செய்துள்ள தோனி, இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த 2013 அக்டோபர் 23ல் நடந்த போட்டியில் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல், நியூசிலாந்துக்கு எதிராகக் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 26 ல் நடைபெற்ற போட்டியில் தோனி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பிங்கைப் பொறுத்தவரை 3 கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டம்பிங் ஆகியவை தோனியின் கணக்கில் இருக்கிறது. சர்வதேசப் போட்டிகளிலிருந்து உலகக் கோப்பை தொடருடன் தோனி ஓய்வுபெறுவார் என்று கூறப்படும் நிலையில், சொந்த ஊரில் தோனி விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். அந்த நிகழ்வை சிறப்பிக்கவே சக வீரர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்திருக்கிறார் தோனி என்றும் கூறுகிறார்கள். முன்னதாக, ராஞ்சி மைதானத்தில் தனது பெயரில் அமைக்கப்பட்டுள்ள பெவிலியனைத் திறந்துவைக்க தோனி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.