Published:Updated:

கோலியின் 40... பும்ராவின் 44... விஜய் சங்கரின் 2... ஆஸ்திரேலியாவை வெளுத்த இந்தியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோலியின் 40... பும்ராவின் 44... விஜய் சங்கரின் 2... ஆஸ்திரேலியாவை வெளுத்த இந்தியா!
கோலியின் 40... பும்ராவின் 44... விஜய் சங்கரின் 2... ஆஸ்திரேலியாவை வெளுத்த இந்தியா!

விஜய் சங்கர் வீழ்த்திய அந்த விக்கெட்டில், பும்ரா ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அவர் வீசிய 60 பந்துகளில் 44 டாட் பால்கள்!

​விராட் கோலியின் 40-வது சதம், இந்தியாவுக்கு 500-வது வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஐந்து விக்கெட்டுகளை கையில் வைத்துக் கொண்டு 34 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு இந்தத் தோல்வி தாங்கிக்கொள்ள முடியாததாகத்தான் இருக்கும்‌‌. அதிக ஈரப்பதம் இல்லாத, ஸ்லோவான, ​ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச்சில் இரண்டாவதாகப் பந்துவீசும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற ​அனைவரின் கணிப்புக்கும் மாறாக, ஃபீல்டிங் தேர்வு செய்த இடத்திலேயே பின்தங்கிவிட்டது ஆஸ்திரேலியா.

​251 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பிட்ச்சின் தன்மையை அறிந்து பொறுமையாக ரன் சேர்த்தது. ஆரோன் ஃபின்ச், கவாஜா இருவரும் தேவையில்லாத ஷாட் எதுவும் அடிக்காமல் பொறுப்பாக ஆடினர். இந்த ஜோடி 14.3 ஓவர்களுக்கு 83 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வீப் ஆட நினைத்த ஃபின்ச் முட்டியிட்டபோது எல்.பி.டபுள்யூ ஆனார்‌. அதன்பின் கவாஜா, மார்ஷ், மேக்ஸ்வெல் என மூவரும் இந்தியாவின் சுழலுக்கு விழ, பிறகு ஸ்டோய்னிஸ் மற்றும் ஹேண்டஸ்கோம்ப் ஜோடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. ஜாதவ் மற்றும் குல்தீப்பின் பந்துகளை டிஃபென்ஸ் செய்து ஆடினர். அதிரடியாக ஆடாவிட்டாலும் பெரும்பாலும் ஸ்வீப் ஷாட்கள் ஆடி பொறுமையாக ரன்சேர்த்தனர். 

ஹேண்ட்ஸ்கோம்ப் 48 ரன்கள் எடுத்தபோது ஜடேஜாவால் ரன் அவுட்டாக, மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல். ஆனால், இம்முறை ஸ்டோய்னிஸ் அலெக்ஸ் கேரியுடன் ஜோடி சேர்ந்தார். 16 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, குல்தீப்பின் ஓவரில் 15 ரன்கள் எடுக்க வெற்றிபெறும் நிலையில் இருந்தனர். குல்தீப்பின் அடுத்த ஓவரிலேயே கேரி நடையைக் கட்டினார். அதன்பின் பும்ராவின் வேகத்தில் கூல்டர் நைல், கம்மின்ஸ் வந்த வேகத்தில் கிளம்ப, ஆட்டம் இந்தியாவின் வசமானது. இருப்பினும் ஸ்டோய்னிஸ் மட்டுமே ஒருகட்டத்தில் போராட, கடைசி ஓவரில் விஜய் சங்கர் பந்தில் ஸ்டோய்னிஸ் மற்றும் ஸாம்பா அவுட்டாக, இந்தியா தன் இரண்டாவது வெற்றியை ருசித்தது.   

சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸி அணி, ஒரு நல்ல பார்டனர்ஷிப் அமைக்கத் தவறியதால், ஆட்டத்தை இழக்க வேண்டியதாயிற்று. ஃபின்ச், கவாஜா இருவரும் மிகவும் நிதானமாக ஆடிய நிலையில், ஸ்டாய்னிஸ் - ஹேண்ட்ஸ்கோம்ப் கூட்டணி மட்டுமே அவர்களுக்கு நிகராக ஆடியது. அதுவும் குறிப்பாக சுழலுக்குச் சாதகமான இந்த மைதானத்தில், சுழற்பந்துவீச்சாளர்களை இருவருமே சிறப்பாக எதிர்கொண்டனர். குல்தீப்பின் எதிர்பாராத சுழல்களையும், கேதர் ஜாதவ் முழங்காலுக்கு கீழே வீசிய பந்துகளையும் பெரும்பாலும் ஸ்வீப் ஆடியே ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கையில் ஜடேஜாவின் அசத்தல் ரன் அவுட், ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. 

​வழக்கம்போல், இதில் பும்ராவின் பங்களிப்பு அசாத்தியமானது. 48-வது ஓவரை தனக்கே உரிய ஸ்டைலில் அற்புதமாக வீசினார் பும்ரா. 8 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்ட நிலையில், பும்ராவின் பந்தில் சிங்கிள் எடுக்க, ஸ்டாய்னிஸுக்கு பயம், அதே நேரத்தில் இ​​ரண்டு ரன் அடிக்கும் வகையிலோ, பௌண்டரி அடிக்கும் வகையிலோ, எளிதான பந்துகளை உலகின் நம்பர் 1 பௌலர் வீசவில்லை. ஒவ்வொரு பந்தும் அற்புதமான, கடினமான லைனில் வீச, வேறு வழியே இல்லாமல், விக்கெட்டை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார் ஸ்டோய்னிஸ். விளைவு, ஆட்டத்தின் 48-வது ஓவரில் வெறும் ஒரே ரன்! 

அதுதான், அடுத்த இரண்டு ஓவர்களுக்கான ரன்ரேட்டை அதிகப்படுத்தியது. நெருக்கடியை அதிகரித்தது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விஜய் சங்கரின் ஸ்லோ பாலை, கணிப்பதற்கு முன்னாலேயே ஸ்டோய்னிஸை ஸ்லாக் ஷாட் ஆடவைத்தது. விஜய் சங்கர் வீழ்த்திய அந்த விக்கெட்டில், பும்ரா ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அவர் வீசிய 60 பந்துகளில் 44 டாட் பால்கள்! அதேபோல், கேதர் ஜாதவ் கொடுத்த பங்களிப்பையும் மறந்துவிட முடியாது. ​8 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஐந்தாவது பௌலர் மீது இருந்த பயத்தைப் போக்கினார். சரியான நேரத்தில் கவாஜாவின் விக்கெட்டையும் வீழ்த்தி, ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். 

இந்தியாவைப் பொறுத்தவரை​ கடினமான ஆடுகளங்களில் கோலியைத் தவிர நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த யாருமில்லை என்ற நிலைதான் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. ரோகித், தவான், ​தோனி என முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க கோலியின் நிதான ஆட்டம் மட்டுமே இந்தியாவை 250 ரன்கள் என ஓரளவு நல்ல ஸ்கோரை எடுக்க வைத்தது.

​சுழலுக்குச் சாதகமான பிட்ச்சில் அடித்து ஆடவில்லை. பந்தை டிஃபென்ஸ் செய்து பொறுமையாக ரன்சேர்த்தார். ல​யான் மற்றும் ​ஸாம்பாவின் ஓவர்களில் பந்துகளை கணித்து பொறுமையாக ஆடினார். 120 பந்துகளில் 116 ரன்கள்​.​ வெறும் பத்து பவுண்டரிகள் மட்டுமே. மிச்சம் 76 ரன்களை ஸ்டம்புகளுக்கு இடையே ஓடி ஓடி எடுத்திருக்கிறார் கோலி. ஒரு கட்டத்தில் ஜடேஜாவும் விஜய் சங்கரும் நன்றாக கம்பெனி கொடுத்தனர். விஜய் சங்கர் மட்டும் ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஸ்கோர் 280-ஐ தொட்டிருக்கும்.

​அதிக ஈரப்பதமில்லாத, நேரம் ஆக ஆக ஸ்பின்னுக்கு சாதகமாகும் இந்தப் பிட்ச்சில் முதலில் பவுலிங் தேர்வு செய்தது, 50 ஓவர் போட்டிகளில் வெறும் இரண்டே இரண்டு ஸ்பின்னர்கள் கொண்டு களமிறங்கியது என அதிக தவறுகளை ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் செய்தார்‌. இந்தத் தவறுகளை திருத்திக்கொண்டால் மட்டுமே அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு