பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

“2019 உலகக்கோப்பை ஆல் ரவுண்டர்களின் உலகக்கோப்பையாகத்தான் இருக்கும். ஒவ்வொரு அணிக்குமே அவர்களின் ஆல்ரவுண்டர்கள்தாம் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள்” என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ். அப்படி ஒவ்வோர் அணியிலும் இருக்கும் மேட்ச் வின்னர் யார்...

இந்தியா - ஹர்திக்  பாண்டியா

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

இந்திய அணியின் வெற்றியில் பாண்டியாவின் பங்களிப்பு மிகமிக அவசியம். பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே இவரை அதிகமாக நம்பியிருக்கிறது இந்திய அணி. கேதர் ஜாதவுக்கு ஃபிட்னஸ் பிரச்னை இருப்பதால், பெரும்பாலான போட்டிகளில், இவர்தான் ஐந்தாவது பந்துவீச்சாளராக அதிக ஓவர்கள் போடவேண்டியிருக்கும். இவரின் செயல்பாடுகள் போட்டியின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் ரஸலுக்கு வீசியதுபோல் பந்துவீசினால் போதும், எல்லாம் நமக்கு சாதகமாக அமைந்திவிடும். ஆனால், அதிகமாக வைடு போடாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது இவருக்கு ஓய்வு கொடுப்பதும் அவசியம். இவரது பேட்டிங் ஃபார்ம் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கதாயுதத்தால் கதறகக் கதற அனைவரையும் அடிக்கும் பல்வாள்தேவனாய், ஒவ்வொரு பௌலரையும் வெளுத்துவாங்கிக்கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து - பென் ஸ்டோக்ஸ்

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து, ராஜஸ்தான் அணிகள் தேடிக்கொண்டிருந்த அந்த உலகத்தர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இப்போதுதான் ரேடாரில் சிக்கியிருக்கிறார். பேட்டிங், பௌலிங் இரண்டில் ஒன்றிலாவது செயல்பட்டிருந்தாலும் பரவாயில்லை. மொத்தமாக கிரிக்கெட்டையே மறந்தவர்போல்தான் ஆடிக்கொண்டிருந்தார் பென். ஒருவழியாக கடந்தவாரம் முடிந்த பாகிஸ்தான் தொடரில், தன் திறமைகளைக் கொஞ்சம் சாம்பிள் காட்டியிருக்கிறார். பந்துவீச்சிலும் பழைய வேரியேஷன்களைக் காட்டினால், ஒவ்வொரு போட்டியிலும் மேட்ச் வின்னர்தான்! இரண்டு ஆண்டுகள் முன்பிருந்த அந்தப் பழைய மாஸ் பர்ஃபாமர், எப்போது வேண்டுமானாலும் கம்பேக் கொடுக்கலாம். தன் முழு ஃபார்முக்கு வந்துவிட்டால், இங்கிலாந்து முதல் கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.


இலங்கை - திசாரா பெரேரா

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

பேட்டிங்குக்கு ஏஞ்சலோ மாத்யூஸ், பௌலிங்குக்கு லசித் மலிங்கா. இவ்வளவுதான் இலங்கை அணியில் இருக்கும் பவர் பர்ஃபாமர்களின் எண்ணிக்கை. இவர்கள் தவிர்த்து, இரண்டு யூனிட்டுக்கும் இருக்கும் ஒரே நம்பிக்கை பெரேரா மட்டுமே! முன்பு இருந்ததைவிட ஒரு பௌலராக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். தன் வேரியேஷன்களால் செட் பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றிவிடுகிறார். மலிங்கா தவிர்த்து, மிடில் ஓவர்களில் ஒரு பௌலராக கம்பெனி கொடுத்தால், எதிரணிகளுக்கு டஃப் கொடுக்கலாம். பேட்டிங்கைப் பொறுத்தவரை, இவரது அதிரடி இன்னும் காலாவதி ஆகாமல்தான் இருக்கிறது. டாப் ஆர்டர் ஓரளவு ஆடினாலும், இவர் மற்றதைப் பார்த்துக்கொள்வார். மாத்யூஸ் - பெரேரா கூட்டணியின் பேட்டிங்கே ஒருசில போட்டிகளில் அவர்களின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும்.

ஆஸ்திரேலியா - மார்கஸ்  ஸ்டோய்னிஸ்

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

மேக்ஸ்வெல் தவிர சரியான ஆல்ரவுண்டர் இல்லாமல் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் தவித்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டோய்னிஸ் மார்கஸ் ஒரு சிறப்பான வரவு. டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். ஒரே வகையான பௌலிங் ஸ்டைல் அவருக்கு இல்லை. ஒரே ஓவரில் ஏகப்பட்ட வெரைட்டி காட்டுவார். பேட்டிங்கைப் பொறுத்தவரை எந்த மாதிரியான பந்துகள் வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சுற்றாமல், டெக்னிக்கல் ஷாட்ஸ் அடிப்பதில் கைதேர்ந்தவர். ஆனால், எப்போதுமே களமிறங்கியவுடன் அடித்து ஆடமாட்டார். கிறிஸ் கெய்ல்போல், செட்டில் ஆவதற்குச் சில பந்துகள் எடுத்துக்கொள்வார். களத்தில் நன்றாகச் செட்டிலாகிவிட்டால், அந்த டாட் பால்களுக்கும் சேர்த்து மொத்தமாக அடித்துவிடுவார். சொல்லப்போனால் இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஃபினிஷிங் குமார் ஸ்டோய்னிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் - முகமது நபி

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருக்கும் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் பொன்ற அணிகளுக்கு இந்த உலகக்கோப்பையில் ‘பிவேர் ஆஃப் நபி’ போர்டு மாட்டிவிடுவது நல்லது. ஒரே ஸ்பெல்லில் ஒரு அணியை என்னவெல்லாம் செய்வார் என்பதை, இந்த ஐ.பி.எல் தொடரில் தெளிவாக டெமோ காட்டிவிட்டார் நபி. இவரது அக்யூரேட் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சு, நிச்சயம் அனைத்து இடது கை பேட்ஸ்மேன்களையும் பந்தாடும். மிடில் ஓவர்களில் எதிரணிகளின் ரன் ரேட்டையும் ஒருகை பார்த்துவிடுவார். பந்துவீச்சு மட்டுமல்லாமல், தன் அதிரடியால் பேட்டிங்கிலும் கைகொடுப்பார். டாப் ஆர்டர் ஓரளவு தாக்குப்பிடித்து ரன் அடித்தால், அதை அடுத்த லெவலுக்கு பூஸ்ட் செய்வதில் இவர் கில்லி. ஆப்கானிஸ்தான் கொடுக்கப்போகும் சில அதிர்ச்சிகளின் முக்கியப் புள்ளியாக நபி இருப்பார்.

நியூசிலாந்து - ஜேம்ஸ் நீஷம்

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய ஆல் ரவுண்டர்களையே, ஒன்றுக்கு மூன்றாக வைத்திருக்கிறது பிளாக் கேப்ஸ். ஆனால், மூவருமே முழுமையான ஆல்ரவுண்டர்கள் இல்லை என்பதுதான் சோகம். காலின் டி கிராந்தோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சேன்ட்னர் ஆகியோரால் கிறிஸ் கெயின்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ் போல் இரண்டு ஏரியாவிலும் பர்ஃபார்ம் செய்ய முடியாது. ஆனால், அவர்களுள் ஜேம்ஸ் நீஷம் மேட்ச் வின்னராக ஜொலிக்கக்கூடியவர். நல்ல மூடில் இருந்தால் ரஸல், கெய்ல் ஆகியோரையே மிஞ்சும் அளவுக்கு அதிரடி காட்டக்கூடியவர். பார்ட்னர்ஷிப்களை உடைப்பதில் கைதேர்ந்தவர். 32.8 என்ற நல்ல பௌலிங் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். நிச்சயமாக ஓரிரு போட்டிகளில் தனியாளாக மெர்சல் காட்டுவார்.

பாகிஸ்தான் - சதாப் கான்

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

பாகிஸ்தான் அணியின் முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்கப்போவது சதாப் கான். இந்த 20 வயது இளம் வீரரின் லெக் ஸ்பின், பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவலாக இருக்கும். விக்கெட் எடுப்பதோடு மட்டுமல்லாமல், எகானமியையும் குறைவாகவே வைத்திருப்பார். அவரின் 10 ஓவர்கள்தான், மிடில் ஓவர்களில் பாகிஸ்தானின் மிகப்பெரிய நம்பிக்கை. பந்துவீச்சில் மட்டுமல்லாமல், லோயர் ஆர்டரில் களமிறங்கி பேட்டிங்குக்கும் கைகொடுப்பார். நிதானமாகத்தான் ஆடுவார். ஆனால், டாப் ஆர்டர் சொதப்பும் போட்டிகளில், இவரை நிச்சயமாக நம்பலாம். பெரிதாக பௌண்டரி, சிக்ஸரெல்லாம் அடிக்கமாட்டார். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடியே ரன் சேர்த்துவிடுவார். உடல்நலக்குறைவிலிருந்து மீண்டுள்ளவர், நிச்சயம் இங்கிலாந்தில் முத்திரை பதிப்பார்.

தென்னாப்பிரிக்கா - அண்டைல் ஃபெலுக்வாயோ

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

அண்டைல் ஃபெலுக்வாயோ, மிகவும் நம்பிக்கையான இளம் வீரர். தென்னாப்பிரிக்க அணியின் மிஸ்டர் கூல்! எதிரில் இருப்பது எப்படிப்பட்ட பேட்ஸ்மேனோ, பெளலரோ கவலைப்படமாட்டார். யாராக இருப்பினும் இவரின் ஆட்டிட்யூட் எப்போதுமே ‘கீப் காம்’ தான். அதிகம் ஸ்லோ பாலாக வீசக் கூடியவர். முக்கியமாக, டெத் ஓவர்களில் சிக்ஸர், பௌண்டரி எனப் பறக்கவிடாமல் எதிரணியின் ரன்களைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். அதிக ரன்களை சேஸ் செய்யும்போதும்கூட எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து, ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதில் கைதேர்ந்தவர். கிறிஸ் மோரிஸ் போன்ற சீனியர் ஃபார்ம் இல்லாமல் தவிக்கும்போது, பேட்டிங், பௌலிங் இரண்டையும் பேலன்ஸ் செய்ய, அந்த அணியிலிருக்கும் ஒரே நம்பிக்கை இவர்தான்.

வங்கதேசம் - ஷகிப் அல் ஹசன்

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே உலக அளவில் டாப் ஆல்ரவுண்டராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் ஷகிப். வங்கதேச அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனும் இவர்தான், ஸ்டார் பௌலரும் இவர்தான். எப்படியும் ஆட்டத்துக்கு ஆட்டம் விக்கெட் எடுத்துவிடுவார். பந்துவீச்சில் மிடில் ஓவர்களில் நிச்சயம், இவரது தாக்கத்தை எதிரணிகள் உணரும். இப்போது பேட்டிங்கிலும் வெளுத்துவாங்கிக்கொண்டிருக்கிறார். முன்பு, லோயர் மிடில் ஆர்டரில் ஆடும்போது, அவரது முழுத்திறனும் வெளிவராமல் இருந்தது. இப்போது நம்பர் 3 பொசிஷனில் அட்டகாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார். ஷகிப் இல்லாத வங்கதேசம், கோலியும் பும்ராவும் இல்லாத இந்தியா போலத்தான்!

வெஸ்ட்  இண்டீஸ் - ஆண்ட்ரே ரஸல்

ஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு!

பேட்டிங் கிரீஸுக்குள் கால் வைத்துவிட்டாலே, ‘எவனா இருந்தாலும் வெட்டுவேன்’ மோடுக்குச் சென்றுவிடுகிறது இந்தக் கரீபியப் புயல். நைட் ரைடர்ஸுக்கு ஆடிய ஆட்டத்தை, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காகவும் ஆடினால், எந்த அணியையுமே பந்தாடலாம். ஏற்கெனவே இங்கிலாந்து ஆடுகளங்கள் அநியாயத்துக்கும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கின்றன. போதாக்குறைக்கு பௌண்டரிகளும் சிறிதாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நாட்டிங்ஹாம் ஆடுகளத்தில், போட்டிக்குப் போட்டி 350 ரன்களை ஜஸ்ட் லைக் தட் எல்லா அணிகளும் அடித்துக்கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் 2 போட்டிகளுமே அங்குதான். இவர் பாய்சன் கிடைத்தாலே பாயாசம்போல் குடிப்பார். அங்கு என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ...

- மு.பிரதீப்கிருஷ்ணா