Published:Updated:

கடைசி ஓவரில் அசத்திய விஜய் சங்கர்! - ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு 500வது வெற்றி #INDvAUS

கடைசி ஓவரில் அசத்திய விஜய் சங்கர்! - ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு 500வது வெற்றி #INDvAUS
கடைசி ஓவரில் அசத்திய விஜய் சங்கர்! - ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு 500வது வெற்றி #INDvAUS

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

Photo credit: BCCI

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஃபீல்டிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. ஆஷ்டன் டர்னர் மற்றும் பெஹ்ரெண்டாஃப் ஆகியோருக்குப் பதிலாக ஷான் மார்ஷ் மற்றும் நாதன் லயான் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் சதத்தின் உதவியால் 250 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, 120 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 48.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Photo credit: BCCI

251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச் - உஸ்மான் கவாஜா ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. அந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. பின்ச் 37 ரன்களிலும் கவாஜா 38 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் நீண்டநேரம் நிலைக்கவில்லை. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 48 ரன்களும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் ஹேரி 22 ரன்களும் எடுத்து கைகொடுக்க மறுமுனையில் ஸ்டாயினிக்ஸ் அதிரடி காட்டினார். 45 ஓவர்கள் முடிந்தநிலையில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி விளையாடிக்கொண்டிருந்தது. 

Photo credit: BCCI

46வது ஓவரை வீசிய பும்ரா, ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து கோல்டர் நைல் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்த, 4 ஓவர்களில் 28 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. 47வது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 7 ரன்கள் எடுக்கப்பட்டது. 48வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய பும்ரா ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குக் கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஷமி வீசிய 49வது ஓவரின் முதல் பந்து டாட் பாலாக, அடுத்த பந்தில் ஸ்டாயினிக்ஸ் 2 ரன்கள் சேர்த்தார். அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தை எதிர்க்கொண்ட நாதன் லியோன், ஷமி ஃபுல் டாஸாக வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 

பும்ரா, ஷமி ஆகியோர் தங்களது 10 ஓவர் கோட்டாவை முடித்துவிடவே பரபரப்பான கடைசி ஓவரை வீச, விஜய் சங்கரை அழைத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டாயிக்ஸ் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்ததாக கள நடுவரால் அறிவிக்கப்பட்டது. இதை ஆஸ்திரேலிய டி.ஆர்.எஸ் முறையில் ரிவ்யூ செய்யவே, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மூன்றாவது நடுவர் அவுட் என அறிவிக்க, அரங்கமே ரசிகர்களின் கரவொலியில் அதிர்ந்தது. 65 பந்துகளை எதிர்கொண்ட அவர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது. கடைசி ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 5 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்த ஆடம் ஜாம்பா, மூன்றாவது பந்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். 48.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு இது 500வது வெற்றியாகும். அதேபோல், இன்றைய போட்டியின் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஸ்டாயினிக்ஸை வீழ்த்தி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விக்கெட் வேட்டையை இந்திய வீரர் விஜய் சங்கர் தொடங்கினார்.