Published:Updated:

கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரணடைந்தார்

கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரணடைந்தார்
கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரணடைந்தார்

சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சூதாட்ட கும்பல் தலைவன் பிரசாந்த் சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கிரிக்கெட் சூதாட்டம் இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் போலீசார் நடத்திய வேட்டையில் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள் மற்றும் 19 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையும் கிரிக்கெட் சூதாட்டம் விட்டு வைக்கவில்லை. சென்னையில் சூதாட்ட தரகர்கள் 6 பேரும், கோவையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு சி.ஐ.டி. போலீசார் சென்னை, சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் சூதாட்டம் குறித்து மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. நரேந்திரபால்சிங், ஐ.ஜி. மஞ்சுநாதா ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், சூப்பிரண்டு பெருமாள் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாசீனிவாஸ், ஜெயச்சந்திரன், அரவிந்தன் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் களத்தில் இறங்கி இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான, சென்னை

##~~##
அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் தலைமறைவாகி விட்டார். அவர் பிடிபட்டால்தான் இந்த வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் பிரசாந்த், வக்கீல்கள் உதவியுடன் சென்னை, கிண்டியில் உள்ள சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவரிடம் சூப்பிரண்டுகள் பெருமாள், ராஜேஸ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் அவரது தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இது ஒரு பக்கம் நடக்க, இன்னொரு பக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாசீனிவாசன், ஜெயச்சந்திரன், அரவிந்தன் ஆகியோர் தலைமையில் சென்னை அயனாவரம், மேடவாக்கம் டேங்க் ரோட்டில் உள்ள பிரசாந்தின் பங்களா வீட்டிலும் கோர்ட்டு அனுமதியுடன் நேற்று மாலை 3.30 மணி அளவில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த வீட்டை திறந்து சோதனை போட்டனர்.

சோதனை முடிந்த பிறகு, அது தொடர்பான தகவல்கள் முறையாக வெளியிடப்படும் என்றும், மேலும் விசாரணை முடிவடைந்த பிறகு பிரசாந்த் முறையாக கைது செய்யப்படுவார் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. மஞ்சுநாதா கூறினார்.

பிரசாந்த் வாக்குமூலம்:

''97-ம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் சூதாட்ட தொழிலை செய்து வருவதாகவும், சென்னை சவுகார்பேட்டைதான் சூதாட்ட தொழிலின் மையப்பகுதியாக பயன்படுத்தியதாகவும், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர். நாடு முழுவதும் உள்ள சூதாட்ட நெட் ஒர்க்கில், இவர் தமிழக நெட்ஒர்க்கின் தலைவராக செயல்பட்டேன்'' என தனது வாக்குமூலத்தில் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர்இவருக்கு வலது கரமாக உள்ளதாகவும், 3 முக்கிய புள்ளிகள் இவருக்கு பக்க துணையாக இருந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் சூதாட்டம் விஷச்செடிகளாக உலகம் முழுவதும் ஓங்கி செழித்து வளர்ந்து விட்டது, என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன் மூலம் அதை அழித்துவிட முடியாது என்று பிரசாந்த், போலீஸ் விசாரணையில் அடித்து சொல்லுகிறாராம். இவருக்கு சென்னையில் உள்ள சூதாட்ட கிளப்புகளிலும் தொடர்பு உள்ளதாம்.