Published:Updated:

`கிறிஸ் கெய்ல் அடிச்சாலே ரெக்கார்ட் தான்!’- யூனிவர்சல் பாஸ் ஆல்வேஸ் மாஸ்

`கிறிஸ் கெய்ல் அடிச்சாலே ரெக்கார்ட் தான்!’- யூனிவர்சல் பாஸ் ஆல்வேஸ் மாஸ்
`கிறிஸ் கெய்ல் அடிச்சாலே ரெக்கார்ட் தான்!’- யூனிவர்சல் பாஸ் ஆல்வேஸ் மாஸ்


இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இயான் மோர்கன் - ஜாஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. ஜாஸ் பட்லர் 77 பந்துகளில் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 12 சிக்ஸர்கள் 13 பவுண்டர்கள் என விளாசினார். இயான் மோர்கன் 88 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். 

பெரிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் மிரட்டலான தொடக்கத்தைக் கொடுத்தார். மற்ற வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் கெய்ல் தனது வழக்கமான பாணியில் மிரட்டினார். அவர் 97 பந்துகளில் 162 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் 16 சிக்ஸர்கள்,11 பவுண்டரிகளை விளாசினார். 48 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 389 ரன்களுக்குஆல்-அவுட் ஆனது. இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டமானது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்தப்போட்டியில் இரு அணிகளும் மொத்தமாக 807 ரன்களை எடுத்தனர்.  ஒரு நாள் கிரிக்கெட்டில் இது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். இதில் மொத்தமாக 46 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் இது மிகப்பெரிய சாதனை. இதற்கு முன்பாக 2013-ம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான போட்டியில் 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் இது தகர்க்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 24 சிக்ஸர்கள் விளாசியுள்ளது. ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுதான். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் இங்கிலாந்து எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 23 சிக்ஸர்கள் அடித்தது சாதனையாக பார்க்கப்பட்டது. இதை தற்போது இங்கிலாந்து அணி முறியடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 22 சிக்ஸர்களை அடித்துள்ளது. அதில் கெய்ல் மட்டும் 16 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.

மேலும், இந்தப்போட்டியில் மட்டும் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மூலம் 532 ரன்கள் திரட்டியுள்ளனர். இதற்கு முன்பாக 2006-ல் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான போட்டியில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மூலம் 504 ரன்கள் திரட்டியதே சாதனையாக இருந்தது. 

இந்தத் தொடரில் மட்டும் கிறிஸ் கெய்ல் இதுவரை 26 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஒரு தொடரில் பேட்ஸ்மேன்கள் எடுக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுதான். மேலும் 55 பந்துகளில் சதம் என அசத்தினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் லாராவுக்கு அடுத்து 10,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.