Published:Updated:

எதிரி நாட்டுடன் விளையாடத் தடை..! சரியான தீர்வா!? ஒரு விளையாட்டு ரசிகனின் கடிதம்!

எதிரி நாட்டுடன் விளையாடத் தடை..! சரியான தீர்வா!? ஒரு விளையாட்டு ரசிகனின் கடிதம்!
எதிரி நாட்டுடன் விளையாடத் தடை..! சரியான தீர்வா!? ஒரு விளையாட்டு ரசிகனின் கடிதம்!

ன்வின்சிபிள்ஸ் ஹாலிவுட் திரைப்படக் காட்சி : தென்னாப்பிரிக்க அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றவுடன், ஆப்ரிகானர்களின் (கறுப்பர் அல்லாதவர்கள்) அடையாளமாகக் கருதப்படும் `ஸ்பிரிங் போக்' ரக்பி அணியை, அதன் சின்னத்தை, அதன் பச்சை மற்றும் தங்க நிற உடையைத் தடை செய்யவேண்டும் என்று முடிவு செய்யும், கறுப்பர்கள் நிறைந்த விளையாட்டு அமைச்சகம். ஆனால், அதை மண்டேலா தடுத்துவிடுவார். ``உங்கள் மக்களின் எதிர்ப்பையே சம்பாதிக்கிறீர்கள்" என்று அவரது உதவியாளர் சொல்ல, ``எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு செங்கல்லையும் கொண்டு இந்த நாட்டைக் கட்டமைக்கப்போகிறேன். அந்தச் செங்கல், பச்சை மற்றும் தங்க நிற காகிதத்தால் சுற்றப்பட்டிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. அந்தக் கல்லும் எனக்கு முக்கியம் என்பார்." அவர் சொன்னதுபோலவே, அந்த ஸ்பிரிங் போக் அணியை மையமாக வைத்து தென்னாப்பிரிக்காவுக்குள் நிலவிய பிரிவினையை ஓரளவு வென்றும் காட்டினார்.

அயன் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி : காங்கோ வீதியில் சூர்யா, ஜெகன் இருவரும் சிறுவர்களோடு கால்பந்து விளையாடிக்கொண்டிருக்க, ஜீப்பில் வரும் ஒரு கும்பல் கண்மூடித்தனமாக சிலரைச் சுட்டுக்கொன்றுவிட்டுச் செல்வார்கள். ``10 வருஷத்துல 50 பேரக் கொன்றுருக்காங்க" என்பார் சூர்யா. சிரியா போன்ற பல நாடுகளில் அதுதான் நிலை. அவர்கள் சுடப்பட்டு கீழே கிடக்கும்போது, அந்தக் கால்பந்து அங்கேயே கிடக்கும். சில நிமிடங்களில் அந்த உடல்கள் அகற்றப்பட்டு, ஒரு சிறுவன் அதை மீண்டும் உதைத்துச் செல்வான். அவ்வளவு பதற்றமான நிலையிலும் அவன் கால்கள், பந்தை உதைக்கத் தொடங்கும். 

ஆப்பிரிக்கா

எதற்காக இந்த இரண்டு காட்சிகளைப் பற்றியும் பேசவேண்டும், விளையாட்டு என்பது என்ன என்ற புரிதல் இங்கு ஏற்படவேண்டுமே... வேறும் பொழுதுபோக்காகவும், வியாபாரமாகவும் மட்டுமே அணுகப்படும் ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை இங்கு உணர்த்தியாகவேண்டுமே... நீருக்காகவும், போருக்காகவும் நொடிப்பொழுதும் யோசிக்காமல் விளையாட்டை நிறுத்தச் சொல்லும் நமக்கு, அதன் அருமையைப் பறைசாற்றவேண்டுமே... அதற்காகத்தான்! 

விளையாட்டு - வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அசாதாரண சூழல்களிலிருந்து நம்மை விடுவித்துச்செல்ல, காலம் பயன்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம். போர்களால், துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் நடுவே வாழும்; வறட்சியால், பசியிலும் பட்டினியிலும் வாழும் பல லட்சம் ஆப்பிரிக்கச் சிறுவர்களின் இதயத்துடிப்பைச் சீராக்குவதும், அவர்களின் வாழ்வை நேராக்குவதும் கால்பந்து, தடகளம் போன்ற விளையாட்டுகள்தாம். ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் சுமார் 90 சதவிகிதம் பேர் அகதிகள். உணவு, உடை இல்லாமல் வந்த ஒருவனை உலகக் கோப்பை கொடுத்து அழகுபடுத்திப் பார்ப்பதுதான் விளையாட்டின் குணம். கருணையும், கண்ணீரும் மட்டுமே தரும் இந்த நல்லவர் சூழ் உலகில், அவனுக்கு வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுப்பது அதுதான்.

விளையாட்டு

`விளையாட்டுக்கு உலகை மாற்றும் ஆற்றல் உள்ளது. மக்களை இணைக்கவும், ஊக்குவிக்கவும் அதனால் முடியும். இளைஞர்களுக்குப் புரிந்த மொழியில் அது பேசும். நம்பிக்கையற்ற இடத்தில், நம்பிக்கையை விதைக்கும். இன முரண்பாடுகளை அரசாங்கங்களை விடவும் வேகமாக உடைத்தெறியும். அனைத்து வகையான வேறுபாடுகளின் முன்பும் நின்று சிரிக்கும். விளையாட்டு - அதை நேசிப்பவர்களுக்கானது' என்று கூறினார் மண்டேலா. (என் கட்டுரைகளில் மட்டும் இதை ஏழாவது முறையாகப் பயன்படுத்துகிறேன்! பயன்படுத்தவேண்டிய சூழல்)

அவருக்கு அது புரிந்தது ரக்பி ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது அல்ல. தான் சிறைபிடிக்கப்பட்டிருந்த ராபன் தீவுச் சிறையில், கைதிகளுக்குக் கால்பந்து தொடர் நடந்தபோது, அந்தத் தொடரின்போது... அப்போது ANC மற்றும் PNC அமைப்புகளுக்கிடையே இருந்த வேறுபாடுகள் உடைந்தபோது. தான் பார்க்க மறுக்கப்பட்ட ஒரு விளையாட்டு, அந்தச் சிறையில் ஏற்படுத்திய மாற்றங்களை மனிதர்களின் வழியாக உணர்ந்திருந்தார் மண்டேலா. 2010 உலகக் கோப்பை தொடரை நடத்த தென்னாப்பிரிக்கா தேர்வு செய்யப்பட்டபோது, ``இந்த விளையாட்டுதான், ராபன் தீவுச் சிறையில், அந்தக் கடினமான சூழலிலும் எங்களை உயிர்ப்போடு வைத்திருந்தது’’ என்றார். 

கொரியா

அரசியலால் செய்ய முடியாததை விளையாட்டு செய்யும் என்று அவர் சொல்ல, அந்த விளையாட்டுக்குள் அரசியலைப் புகுத்திக்கொண்டிருக்கிறோம் நாம். எல்லோரும் கோமாளியாய், சர்வாதிகாரியாய் சித்திரித்துக்கொண்டிருக்கும் கிம் ஜோங் உன், வடகொரியாவும், தென் கொரியாவும் ஒரே கொடியின்கீழ் ஆசியக் கோப்பையில் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்தார். ஆனால், நாம் பாகிஸ்தானுக்கு எதிராகக் கொடி பிடித்துக்கொண்டிருக்கிறோம். கிம், அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தவில்லை என்பது உண்மை. ஆனால், விளையாட்டின் மகத்துவத்தை உணர்ந்திருக்கிறார். அதை எப்படிப் பயன்படுத்தவேண்டுமோ அதைத் தெரிந்திருக்கிறார். 

ஆனால், நாம் அதைப் பழிவாங்கும் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் தீவிரவாதம் நடந்தால், அவர்களுடன் கிரிக்கெட் இல்லை... இலங்கை கடற்படை மீனவர்களைத் தாக்கினால், சென்னையில் இலங்கை வீரர்களுக்கு அனுமதி இல்லை. இதுதான் நாம் பழிவாங்கும் முறை. விளையாட்டை விட உயிர் முக்கியம்தான். ஆனால், அந்த விளையாட்டு, மேலே சொன்னதுபோல் பல இடங்களில் உயிர்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இன்று கேன்சரில் வாடுபவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த நடப்பதெல்லாம் மாரத்தான் ஓட்டங்கள்தானே! 

இம்ரான் கான் - பாகிஸ்தான்

இந்தியா இந்த விஷயத்தை எப்படிக் கையாண்டிருக்கவேண்டும், இப்போது எல்லையில் எத்தனை பிரச்னைகள் நடந்துகொண்டிருந்தாலும், `எதையும் சரிசெய்ய முடியும்' என்ற நம்பிக்கையை அந்தக் களத்தில் விதைத்திருக்கவேண்டும். 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றபிறகு, பரிசளிப்பு விழாவில் பேசிய அஃப்ரிடி, ``அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் வணக்கம்" என்பார். மொத்த மொஹாலி அரங்கமும் ஒரு நொடி, அந்தப் பாகிஸ்தான் வீரருக்காக ஆர்ப்பரிக்கும். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக. இன்று சோஷியல் மீடியாவில், ``போர் வேண்டும்" என்று ஸ்டேடஸ் போடும் அறியாதவர்கள் பலரையும், அப்படியான ஒரு தருணம் மாற்றியிருக்கும். கோலி, சர்ஃபராஸ் அஹமது இருவரும் கட்டிப் பிடித்திருந்தால், போரின் தாக்கம் புரியாமல் உளறும் பலரின் வாய்களும் அடைந்திருக்கும்.

44 வீரர்களை இழந்திருக்கிறோம். அந்தக் கோபம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதைக் காண்பிக்கும் முறை இதுவல்ல. இந்தக் கோபம் பாகிஸ்தான் அரசின் மீதானதாக இருக்கவேண்டுமே தவிர, கிரிக்கெட் அணியின் மீதானதாக இருக்கக் கூடாது. ஏனெனில், இந்த நிலை எத்தனை ஆண்டுகள் நீடிக்கப்போகிறதோ தெரியவில்லை. பின்னாளில் ஏற்படக்கூடிய சுமுக உறவுக்குப் பாலமாய் இருக்கப்போவது இந்த விளையாட்டுகள்தாம். தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இருந்ததைப் போல். அந்தப் பாலத்தின் தன்மை அறியாது அதை உடைப்பது சரியல்லவே!