சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்
பிரீமியம் ஸ்டோரி
News
சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

சென்னாப்பட்டினம், மெட்ராஸ், தற்போது சென்னை என பரிணாமித்திருக்கும் தலைநகருக்கு வரலாறு முழுக்க ஏகப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. கோட்டைகள், கோயில்கள், கடற்கரைகள் என பரந்திருக்கும் சென்னையின் லேட்டஸ்ட் அடையாளம் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’. கடந்த பத்தாண்டுகளாக சென்னையைத் தாண்டி தமிழகத்தையும் பிடித்திருக்கும் மஞ்சள் ‘மதம்’. ஒரு சூப்பரான என்ட்ரி, அபார வளர்ச்சி, எதிர்பார்க்காத வீழ்ச்சி, மாஸான ரீ-என்ட்ரி என சூப்பர்ஸ்டார் படங்களுக்கு இணையான கதை சி.எஸ்.கேவுடையது. அப்பேர்ப்பட்ட அணி ஆடும்போது சேப்பாக்கம் எவ்வளவு பரபரப்பாக இருக்கும்? அனுபவிக்க மைதானத்திற்குப் பயணப்பட்டோம்.

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

சென்னை அணி ஆடும் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்குவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. கவுன்ட்டர் டிக்கெட்களை வாங்க முந்தினநாள் இரவிலிருந்தே கூட்டம் அணிவகுக்கும். விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் தொடங்கும் கூட்டம் அப்படியே நீண்டு வாலாஜாவில் வளைந்து சமயங்களில் முன்னாள் - சட்டப்பேரவை வளாகம் வரைகூட போகும். மணிக்கணக்கில் நின்று போராடி வாங்கி, ஆன்லைனில் வைத்தகண் வாங்காமல் செக் செய்து... இப்படி ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பின்னர்தான் ஸ்டேடியம் வருகிறான் ‘கிரிக்கெட் தமிழன்’.

மேட்ச் நடக்கும் நாள்களில் காலையிலிருந்தே சென்னையை ஒருவகையான பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. எல்லாச் சாலைகளும் சேப்பாக்கத்தை நோக்கியே நீள்கின்றன. சென்னை அணி தங்கியிருக்கும் ஆழ்வார்பேட்டை தொடங்கி சேப்பாக்கம் வரை ஆயிரக்கணக்கான கண்கள் நோட்டம்விட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்கள் பயணப்படும் பேருந்து ஹோட்டலை விட்டு வெளியேறும் அதே வினாடியில் நகரத்தைப் பற்றிக்கொள்ளும் ‘ஜிவ்’ மின்சாரம் சென்னை அணி அந்த நாளிறுதியில் வெற்றிக்கோட்டைத் தொடும்வரை அப்படியே இருக்கிறது.

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகளின் சிக்னல்கள் அனைத்திலும் கொடிகள், டிஷர்ட்கள் என நடமாடும் மஞ்சள் பூங்கொத்துகள் தென்படும். ஒருநாள் மட்டுமே கொழிக்கும் வியாபாரம் அது. இதை ஒட்டினாற்போல இன்னொரு குழு தங்கள் கைவண்ணத்தை வருபவர்களின் கன்னங்களில் காட்டுகிறது. சி.எஸ்.கே மீதான காதலைக் கன்னக்குழிகளில் தேக்கிவைத்து உள்ளே சென்று கொட்டுகிறார்கள் பேரழகுப் பெண்கள். 

மேட்ச் பார்க்க டிக்கெட் வாங்குவது ஒரு சாகசமென்றால் மைதானத்தைச் சுற்றி வண்டியை பார்க் செய்வது அதைவிடப் பெரிய சாகசம். ஆயிரக்கணக்கான பைக்குகள், நூற்றுக்கணக்கான கார்கள் அந்தத் தார்ச்சாலைகளை சிலமணி நேரங்களில் பதம்பார்க்கும். சேப்பாக்கம் ரயில் நிலையம், பிரஸ் கிளப், மெடிக்கல் காலேஜ், எம்.எல்.ஏ ஹாஸ்டல் என எங்கு பார்த்தாலும் மோட்டார்கள் மொய்த்திருக்கும். அவற்றுக்கு மத்தியில் நீந்தித்தான் வாசலை அடையமுடியும்.

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

ஐ.பி.எல்லின் ஷங்கர் படம் சி.எஸ்.கேதான். குடும்பங்கள் சாரிசாரியாக அணிவகுப்பதை ஸ்டேடியம் கேட்களில் காணமுடியும். அப்பாவின் தோள்மேல் பயணப்படும் சிறுவன், லைவ்வாக மேட்ச் பார்க்கப்போகும் ஆர்வத்தில் முண்டியடிக்கும் குட்டிப்பெண் என கலவையான காட்சிகளைக் காணமுடியும். சி.எஸ்.கேவின் பிளேயர்களே குடும்பம் குடும்பமாகத்தானே ஐ.பி.எல் முழுக்க பயணிக்கிறார்கள். அடுத்த படியாக அதிக எண்ணிக்கையில் இருப்பது இளைஞர்களும் இளைஞிகளும்!

சி.எஸ்.கே மேட்ச்களுக்கு கோடம்பாக்கத்து வி.ஐ.பிகளும் ரெகுலர் பார்வையாளர்கள். ஐ.பி.எல் தொடங்கிய காலத்தில் விஜய் வந்துகொண்டி ருந்தார். இந்த சீசனில் ஒரு ஆட்டத்திற்கு ரஜினி வந்திருந்தார். ஏற்கெனவே எகிறிப் போயிருக்கும் எனர்ஜி தமிழ்சினிமா ஸ்டார்களின் வருகையால் இன்னும் மைலேஜ் கூட்டும்.

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

உள்ளே நுழைந்தவுடன் அத்தனை கண்களும் தவறாமல் தேடுவது ஒற்றை உருவத்தைத்தான். சிலருக்கு அவர் தல, சிலருக்கு அவர் கேப்டன்.கூல், மொத்தமாக எம்.எஸ் தோனி! முதுகில் ஏழாம் எண்ணைத் தாங்கிய சிறுவன் முன்னாலிருக்கும் மொத்தக் கூட்டத்தையும் தோற்கடிக்கும் முனைப்போடு கம்பியைப் பற்றி எகிறிக் குதிக்கிறான். மேல் எழும்பி கீழே வரும் அந்த மைக்ரோவினாடியில் அவன் கண்ணில் பட்டு மறைகிறது தோனியின் உருவம். புருவம் விரிய ‘தோனீஈஈஈஈ’ என அலறுகிறான். மைதானத்தின் ஏதோ ஒரு மூலையில் பற்றிக்கொள்ளும் இந்த சிறு நெருப்பு அடுத்த நொடி மொத்த ஸ்டேடியத்தை நெருக்கி அணைக்கிறது.

டாஸின்போது தோனி உச்சரிக்கும் முதல் வார்த்தையான ‘குட் ஈவ்னிங்’-க்குத்தான் எவ்வளவு மதிப்பு! இந்த சீசன் முழுக்க பெளலிங் தேர்ந்தெடுப்பதுதான் தோனியின் ஸ்டைல். இதனாலேயே அவர் பேட்டிங்கை அடிக்கடி பார்க்கமுடியாமல்போகிறதுதான். ஆனால் அவர் கீப்பிங்கை, ஃபீல்ட் செட்டிங்கை, சிரிப்பை, அதட்டலை அணுஅணுவாக ரசிக்கிறது கூட்டம். தோனிக்குப் பின் கூட்டத்தின் ஏகோபித்த ஆதரவு சின்னத்தல ரெய்னாவிற்கு!

ஏகோபித்த ஆதரவு என்னமோ சென்னை அணிக்குத்தான். ஆனால் வந்தாரை வரவேற்கும் பண்பாட்டை சேப்பாக்கத்திலும் சிந்துகிறது கூட்டம். பெளண்டரி லைன் அருகே நிற்கும் பிளேயர்களைப் பெயர் சொல்லி அழைத்தபடியே இருப்பார்கள் ஒரு சிலர். அவர்களுக்காக அந்த வீரர் திரும்பி கூட்டத்தைப் பார்த்து கையசைத்து விட்டால் போதும், அந்த ஸ்டேண்டில் இருக்கும் மொத்தக் கூட்டமும் அவருக்கு ஹார்ட்டின்களை அள்ளிவிடும்.

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

ஸ்போர்ட்ஸ் கிளப் கலாசாரத்தில் சில சுவாரஸ்யமான விஷயங்களுண்டு. எனவே அதற்கேற்றார்போல கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது பார்வையாளர் கூட்டம். ‘மெக்ஸிகன் வேவ்’ எனப்படும் ஸ்டேடியம் வேவ் உலகம் முழுக்க பிரபலம். குறிப்பிட்ட ஸ்டாண்டில் இருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கைகளைத் தூக்கி ஆரவாரம் செய்வார்கள். அதன்பின் அது அப்படியே பக்கத்து ஸ்டாண்டிற்குப் போகும். இப்படி ஒவ்வொரு ஸ்டாண்டாக நடக்கும் அதைப் பார்ப்பதற்கு பிரமாண்ட மனித அலைபோலவே இருக்கும். சி.எஸ்.கே மேட்ச்களில் அதைப் பார்ப்பது புல்லரிக்கும் அனுபவம். வயது பாரபட்சமில்லாமல் எல்லோரையும் ஆட்கொள்ளும் மஞ்சள் அலை அது!

கூட்டத்திற்கு இப்படிப் பொழுதுபோக்க நிறைய இருக்கிறது? மைதானத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு? பெளண்டரி லைன் அருகிலிருக்கும் ‘Ball boys’ மறக்காமல் தங்கள் அருகில் வரும் பிளேயர்களிடம் டிஷர்ட்டில் ஆட்டோகிராப் வாங்கிக்கொள்கிறார்கள்.

சென்னையில் நடக்கும் ஆட்டங்களில் பெரும்பாலும் சென்னை அணியே வெல்லுமென்பதால் நம்பி வருபவர்களுக்கு ஏமாற்றமில்லை. அதேசமயம் வெல்லும் அந்த நொடியை ஆயிரக்கணக்கான கேமராக்கண்கள் தங்களுக்குள் அடைத்துக்கொள்ளும். அதன்பின்னும் எதற்காகவோ காத்திருக்கிறது கூட்டம்! ஏன்?

சேப்பாக்கம் ஸ்டேடியம்! - இடம் பொருள் ஆவல்

ஒவ்வொரு பிரசன்டேஷனின்போதும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்வது தோனியின் வழக்கம். அதை நேரில் பார்க்கவும் அதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பரிக்கவுமே கலையாமல் காத்திருக்கிறது கூட்டம். அந்த ஆர்ப்பரிப்பு அப்படியே கடல்காற்றில் நிறைந்து அடுத்த ஆட்டத்திற்கான கூட்டத்தை ஈர்க்கிறது.

சி.எஸ்.கேவின் அதிதீவிர ரசிகர்கள் சிலர் ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பின்னும் மைதானத்தை ஊழியர்களோடு இணைந்து சுத்தப்படுத்திவிட்டே வீட்டிற்குச் செல்கிறார்கள். ‘இது டீமில்ல, விக்ரமன் சார் படம்’ என ஜாலியாகச் சொல்லப்படுவது இது போன்ற காரணங்களால்தான். மைதானத்தைப்  பழையபடி மாற்றிவிட்டு அவர்களும் அவர்களைத் தொடர்ந்து நாமும் வெளியே வரும்வேளையில் அணியின் குட்டிக் குட்டி ரசிகர்கள் வீடுபோய் சேர்ந்து படுக்கையில் விழுந்திருப்பார்கள். அவர்களின் கனவில் தோனி கோப்பையை வென்றிருக்கக் கூடும். அந்தச் சின்னஞ்சிறு கனவுதான் அடுத்த ஆட்டத்திற்கான வாழ்த்து அட்டை!

-நித்திஷ்
படங்கள்: குமரகுருபரன், க.பாலாஜி