
தாறுமாறு தர்பார்!

ஐ.பி.எல் முடிந்த கையோடு, இரண்டே வார இடைவெளியில் இங்கிலாந்தில் தொடங்கப் போகிறது உலகின் மாபெரும் கிரிக்கெட் திருவிழா. யெஸ்... 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையை நெருங்கிவிட்டோம். முன்புபோல் 14, 16 அணிகள் என்றில்லாமல் இந்த முறை 10 அணிகள் மட்டுமே பங்கேற்பு, புதிய ஃபார்மேட் என கவனம் ஈர்க்கிறது உலகக்கோப்பை. இந்தத் தொடரில், எந்தெந்த அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது, எந்த அணி ஆச்சர்யமளிக்கும், எந்த அணி அதிர்ச்சியளிக்கும்? பார்க்கலாமா...

கிரிக்கெட்டின் பிறப்பிடத்துக்கு, அந்த உலகக் கோப்பையைக் கையிலேந்தும் வாய்ப்புதான் இதுவரை வாய்க்கவில்லை. 44 ஆண்டுக்காலக் காத்திருப்புக்கு இந்த வருடம் பதிலாய் அமையக்கூடும். முதல் முறையாக, மற்ற அனைத்து அணிகளைவிடவும் பலமான அணியாய் உலகக் கோப்பைக்குள் நுழைகிறது இங்கிலாந்து. சொந்த மண்ணில் ஆடுவது ஒரு வகையில் சாதகம் என்றால், எந்த ஊர் மைதானத்திலும் ரன்வேட்டை நடத்தும் பேட்ஸ்மேன்கள் இருப்பது மிகப்பெரிய பலம். கடந்த ஆண்டு, ஒருநாள் போட்டி ஒன்றில் கிட்டத்தட்ட 500 ரன்களையே நெருங்கியவர்கள், இந்த உலகக் கோப்பையில் சிலபல 400-களை அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பெரிய அனுபவம் இல்லாத அவர்களின் பந்துவீச்சு மட்டும், கோப்பைக் கனவை காஞ்சனாவாய் வந்து கலைத்துவிடலாம்.

‘மஞ்சள் சட்டைக்காரர்கள் அவ்வளவுதான்’ என்று எல்லோரும் நினைத்திருக்க, ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று கபாலியாய் மாஸ் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறது ஆஸ்திரேலியா. தொடர் தோல்விகளுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகளை அவர்கள் பந்தாட, ஐ.பி.எல் தொடரில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் வேப்பிலை அடித்திருக்கிறார் டேவிட் வார்னர். தன் பங்குக்கு, கேப்டன் ஆனவுடனேயே அரை சதம் அடித்து, சைலன்ட்டாக கம்பேக் கொடுத்திருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். கடந்த உலகக் கோப்பைக்குப் பின் எப்படிப் போனதோ, அப்படியே திரும்ப வந்திருக்கிறது ஆஸி அணி... சாம்பியன்களாக! ஹேண்ட்ஸ்கோம்ப் போன்ற ஃபார்மில் இருக்கும் வீரருக்கே வாய்ப்பில்லாத அளவுக்குப் பலமாக இருக்கிறது கங்காரு குரூப். எல்லாம் கூடிவந்தால் மறுபடியும் மஞ்சளின் ஆதிக்கம்தான்!

குரூப் சுற்றில் அதிரடி காட்டி, அனைத்து அணிகளையும் அலறவிட்டு, ஒட்டுமொத்த உலகின் ஆதரவையும் பெற்று, அரையிறுதியில் தோற்று வெளியேறும் ஃபார்முலாவுக்கு முட்டுக்கட்டை போடக் காத்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. ஆனால், இம்முறை அரையிறுதிக்கே போகாமல் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. டி வில்லியர்ஸ் ஓய்வுக்குப் பிறகு, அணியின் பேட்டிங் ஆர்டர் ராயல் சேலஞ்சர்ஸ் போல் நிலையற்றதாக மாறிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கான ரசிகர்களின் ஆதரவுமே இந்தமுறை குறைந்திருப்பதாகத் தெரிகிறது. ஸ்டெய்ன், ரபாடா, எங்கிடி, தாஹிர், ஃபெலுக்வாயோ அடங்கிய பௌலிங் யூனிட்டும், கேப்டன் டுப்ளெஸ்ஸியின் பேட்டிங்குமே இந்த அணியின் நம்பிக்கை.

கடந்த முறை கடைசி வாய்ப்பில் விட்டதை, இப்போது பிடித்துவிடும் மும்முரத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது கறுப்புப் படை. ‘ஆல் ஏரியா கில்லி’ வில்லியம்சன், ராஸ் டெய்லர், லாதம், ஹென்றி நிகோலஸ் என பேட்டிங் அல்லு கிளப்புகிறது. நமத்துப்போன லெட்சுமி வெடியாய் ஆடிக்கொண்டிருக்கும் மார்ட்டின் கப்தில், எப்போது வெடித்தாலும், அது பேரடியாக இருக்கும். ஜிம்மி நீஷம், கிராந்தோம், சேன்ட்னர் என அதிரடி ஆல் ரவுண்டர்கள் இருப்பது பெரிய பலம். ட்ரென்ட் போல்ட் செய்யும் மின்னல் தாக்குதல்கள் எதிரணிகளை நிலைகுலையச் செய்யும். அரையிறுதியைத் தாண்டிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், கோப்பை கிடைக்குமா என்பதுதான் கிவிக்கள் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி.

2017 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு, கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் மீண்டும் எழுச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று இருந்ததைவிட இன்னும் சுமாரான அணியாகவே இருக்கிறது. அடுத்த அக்ரம் என்று பாராட்டப்பட்ட முகமது அமீர், மோசமான ஃபார்ம் காரணமாக உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்படவே இல்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாயகன் ஹசன் அலியும் கடந்த சில மாதங்களாக விக்கெட் வீழ்த்தத் தடுமாறுகிறார். ஒரு போட்டியில் சதமடித்துவிட்டால், அடுத்த 5 போட்டிகளில் தடுமாறுகிறார் ஓப்பனர் ஃபகர் ஜமான். இப்படி முழு அணியுமே ‘கன்சிஸ்டென்சி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறது. பாபர் ஆஸம், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக் ஆகியோரின் ஆட்டமே, அவர்கள் எதுவரை செல்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும்.

இந்த உலகக் கோப்பையில் அதிர்ச்சிகளுக்கும், ஆச்சர்யங்களுக்கும் வெஸ்ட் இண்டீஸ் கியாரன்ட்டி. ஃபைனல் வரை சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை, 9 லீக் போட்டிகளில் தோற்றாலும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஏனெனில், இது வெஸ்ட் இண்டீஸ். கிறிஸ் கெய்ல் ஆடப்போகும் கடைசி சர்வதேசத் தொடர் என்பதால், கிரிக்கெட்டின் தானோஸ் ஆடும் வெறித்தன ஆட்டங்களுக்காக உலகமே வெயிட்டிங். ஹிட்மேயர், பூரன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில், அணியின் மீட்பராகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறார் ஷாய் ஹோப். இளம் பௌலிங் படையின் உத்வேகமும், கேப்டன் ஜேசன் ஹோல்டரின் அனுபவமும் ஒன்று சேர்ந்தால், நிச்சயம் எந்த அணியையும் இவர்களால் வீழ்த்த முடியும். வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 500 ரன்களை நெருங்கினாலும் ஆச்சர்யம் இல்லை.

மோரிஸ் நடனம், கிளாக் நடனம் போன்றவை இங்கிலாந்தின் பிரசித்தி பெற்ற நடனங்கள். இந்த ஜூன், ஜூலை மாதங்களில் பாம்பு டான்ஸும் இங்கிலாந்தில் பிரபலமடையக்கூடும். 2015 உலகக் கோப்பையில் காலிறுதி, 2017 சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதி என கடந்த சில ஐ.சி.சி தொடர்களில் அதிர்ச்சிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது வங்கதேச அணி. அது இம்முறையும் தொடரலாம். ஆனால், ஷகிப், முஷ்ஃபிகுர், முஸ்தாஃபிசுர் போன்ற முன்னணி வீரர்களின் சமீபத்திய ஃபார்ம் சுமாராக இருப்பதுதான் பிரச்னை. டாப் ஆர்டரில் தமீம் இக்பால் தவிர்த்து யாரும் சீராக ஆடுவதில்லை. மிடில் ஆர்டர் கொஞ்சம் சொதப்பினாலும், வங்கதேசம் மொத்தமாகச் சுருண்டுவிடும். உலகக் கோப்பைக்குள் முன்னணி வீரர்கள் ஃபார்முக்கு வந்தால் நாகினி ஆட்டம் ஆடமுடியும்.

கத்துக்குட்டிதான். ஆனால், எதிர்பாராத நேரத்தில் எந்த அணிக்கும் கண்கட்டி வித்தை காட்டிவிடும் வல்லமை படைத்த அணி. மற்ற அணிகளைப்போல் 300, 350 ரன்களுக்கெல்லாம் இவர்கள் ஆசைப்படுவதேயில்லை. முதலில் பேட்டிங் செய்து, 250 ரன்கள் எடுத்துவிட்டு, எதிரணியை பௌலிங்கால் திணறடிப்பதுதான் இவர்கள் ஃபார்முலா. முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் என சுழல் கூட்டணி அவர்களின் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது. பவர் ப்ளே, மிடில் ஓவர், டெத் என அனைத்து சூழ்நிலைகளிலும் சுழலே அவர்களுக்குக் கைகொடுத்துக்கொண்டிருக்கிறது. தன் முதல் உலகக் கோப்பை தொடரில், ரஷீத் நிச்சயம் பல மாயங்கள் நிகழ்த்துவார். ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கே தண்ணி காட்டியவர்கள், நிச்சயம் இந்தத் தொடரில் சில சபாஷ் வெற்றிகளைப் பதிவு செய்வார்கள்.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளெல்லாம் முன்னேறிக்கொண்டிருப்பதால், ‘கத்துக்குட்டி’ இடத்தை நிரப்ப, பாதாளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது இலங்கை. இந்தத் தொடரில் ஆடும் 15 இலங்கை வீரர்களின் பெயர்களை உங்களால் நினைவுகூர முடிந்தால், நிச்சயம் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு முயற்சி செய்யலாம். சந்திமல், டிக்வெல்லா, தரங்கா, அகிலா தனஞ்செயா என முன்னணி வீரர்களையெல்லாம் கழற்றி விட்டதோடு, கடைசியாக 2015 உலகக் கோப்பையின்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய கருணரத்னேவை கேப்டனாக்கியிருக்கிறார்கள். கேட்டால், ‘ஃபார்ம்’ என்பதைக் காரணமாகச் சொல்கிறது தேர்வுக் குழு. ஏஞ்சலோ மாத்யூஸ், திசாரா பெரேரா, மலிங்கா ஆகியோர் ஒன் மேன் ஷோக்கள் நடத்தினால், கடைசி இடத்துக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம்.

பல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சிலபல சோதனை முயற்சிகளுக்குப் பிறகு, பலமான ஒரு அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். வழக்கம்போல் இந்திய பேட்டிங் ‘டாப் 3’ வீரர்களைச் சுற்றியே சுழலும் என்றாலும், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ஃபார்ம் அணிக்குக் கூடுதல் நம்பிக்கை. நம்பர் 4 சிக்கலுக்கு விஜய் சங்கரை நம்பலாம். கோலி - சாஸ்திரி கூட்டணியின் முடிவுகள் எல்லாமே முக்கியத்துவம் கொண்டவை. எந்தப் போட்டியில் 3 வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்குவது, எந்தப் போட்டியில் குல்தீப்புக்குப் பதில் ஜடேஜாவை இறக்குவது போன்றவற்றைச் சரியாகக் கையாளவேண்டும். ஹர்திக், பும்ரா, ஜாதவ் போன்றவர்களுக்குச் சரியான ஓய்வு கொடுப்பதும் அவசியம். இந்த ‘மேன் மேனேஜ்மென்ட்’ மட்டும் சரியாக இருந்தால் லார்ட்ஸ் பால்கனியில், இந்திய கேப்டன் கோலிக்குக் காத்திருக்கிறது மெகாபரிசு!
- மு.பிரதீப் கிருஷ்ணா