Published:Updated:

"மூக்கு மேல ராஜான்னா இதுதான் அர்த்தம்!" - கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து

முத்து, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் சொத்து! தமிழ் வர்ணனையாளராக, காணொளி நிருபராக அசத்திக்கொண்டிருப்பவரை தேநீர் சகிதம் சந்தித்துப் பேசினோம்.

"மூக்கு மேல ராஜான்னா இதுதான் அர்த்தம்!" - கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து
"மூக்கு மேல ராஜான்னா இதுதான் அர்த்தம்!" - கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து

முத்து, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் சொத்து! தமிழ் வர்ணனையாளராக, காணொளி நிருபராக அசத்திக்கொண்டிருப்பவரைத் தேநீர் சகிதம் சந்தித்துப் பேசினோம்.


முத்துவை ஆர்.ஜேவா தெரியும், வி.ஜேவா தெரியும். எப்போ கமன்டேட்டர் ஆனார்?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல தமிழ்ல கமென்ட்ரி பண்றதுக்கு ஆள் தேவைன்னு, அங்க வேலை பார்க்குற என் ஃப்ரெண்ட் மூலமா தெரிய வந்தது. இங்கிலீஷ், இந்தி போல கபடியை நம்ம தமிழ்லேயும் கமென்ட்ரி பண்ணணும்னு சொன்னாங்க. என் ஃப்ரெண்ட் என்னைப் பத்தி சொன்னபோதே, `மெட்ராஸ் சென்ட்ரல்' சேனல்ல நான் பண்ண வீடியோஸ்லாம் பார்த்திருக்காங்க. எங்கிட்ட ஒரு வீடியோ க்ளிப் கொடுத்து, `சாம்பிள்' கமென்ட்ரி கேட்டாங்க. கபடி ஸ்கூல் டைம்ல இருந்தே விளையாடிட்டு வர்ற ஸ்போர்ட். நம்பிக்கையா பண்ணி அனுப்பினேன். அடுத்து இன்னும் மூணு வீடியோ க்ளிப் கொடுத்து, மறுபடியும் சாம்பிள் கேட்டாங்க. மறுபடியும் பண்ணி அனுப்பினேன்.

ஒருநாள், ஃப்ளைட் டிக்கெட் போட்டுக் கொடுத்து மும்பைக்கு கூப்பிட்டாங்க. அங்க போனப்போதான், தமிழ் மாதிரியே தெலுங்கு, கன்னடம்னு மற்ற மொழிகளுக்கும் கமன்டேட்டர் ஆடிஷன் நடந்துட்டு இருக்குன்னு தெரிஞ்சுது. அந்த நேரத்துலதான், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் ஆரம்பிக்கிறது பற்றியும் முடிவு பண்ணியிருந்தாங்க போல. என்கிட்டே கிரிக்கெட்டுக்கு கமென்ட்ரி பண்ணுவீங்களான்னு கேட்டாங்க. கபடியை விட, கிரிக்கெட் இன்னும் நல்லா தெரியும். இன்னும் நம்பிக்கையா தலையை ஆட்டினேன். சேனல் ஆரம்பமாச்சு. கூடவே, கமன்டேட்டர் பயணமும்ஆரம்பமாகிடுச்சு!


மொட்டைமாடி கிரிக்கெட்டர் முத்து, சர்வதேச லெவல் கமென்ட்ரிக்கு எப்படி தயாராகுறார்?

ஒவ்வொரு மேட்சுக்கும் தனித்தனியா படிப்போம். கமன்டேட்டர்களுக்கு மேட்சுக்கு முன்னாடி டாக்கெட் ஒண்ணு கொடுப்பாங்க. அதுல நடக்கபோற மேட்ச் சம்பந்தமான எல்லா தகவல்களும் புள்ளி விவரங்களாக இருக்கும். எந்த பேட்ஸ்மேன் எந்த எரியாவுல ஸ்ட்ராங்ன்றதுல ஆரம்பிச்சு, எந்த பேட்ஸ்மேன் புவனேஷ்வர் குமார் பவுலிங்ல அதிகமா அவுட் ஆகியிருக்கார்ங்கிறது வரைக்கும் எல்லாமே அதில் இருக்கும். இது தவிர்த்து கடைசியா இரு அணிகளுக்கும் நடந்த மேட்சுகளையும் பார்ப்போம். மேட்சுக்கு முன்னாடி 1 அல்லது 2 மணிநேரத்தில் மைக்கை பிடிக்க முழுசா தயார் ஆகிடலாம்.

புரொஃபஷனல் கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில் கமென்ட்ரி செய்வதென்பது எவ்வளவு சவாலானாது?

ரொம்பவே! ஆக்சுவலா லீட் அண்ட் எக்ஸ்பெர்ட்னு ரெண்டு வகையான கமென்ட்ரி. பும்ரா வேகமா ஓடி வர்றாரு, ஷார்ட் பிட்ச் பால், அற்புதமான ஒரு புல் ஷாட், மிட் விக்கெட்டில் பவுண்டரின்னு களத்துல நடக்கிற காட்சிகளை விவரிப்பவர் லீட் கமன்டேட்டர். அந்த ஷாட் ரிப்ளை போடும்போது, அதுல இருக்குற நுணுக்கங்களை ஆய்வு செஞ்சு விளக்குறவர் எக்ஸ்பெர்ட். நாம லீட் வகையறா. பெருசா ப்ராப்ளம் இல்ல...

பெயர்தான் தமிழ் வர்ணனை. ஆனால், ஆங்கில வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் எனும் விமர்சனம் பற்றி...

கமென்ட்ரின்னு இல்லை. டெலிவிஷன்ல எந்த ஷோவை எடுத்தாலும் இதுதான் நிலைமை. என்னுடைய வேலை, அங்கே என்ன நடக்குதுன்னு மக்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும். அகலப்பந்து, அரைக்குழிபந்துனு பேசினா பார்க்குறவங்களுக்கு எப்படி புரியும். எரியாவுல விளையாடும்போது வொயிட், நோ பால்னுதானே சொல்றோம். ஓவர் பிட்ச் பந்தை நம்ம பசங்க சுறுக்கி ஓ.பி பால் ஆக்கிட்டங்க. அவங்களுக்கு புரியனும்னா அப்படிதானே சொல்லணும்.


ஸ்ரீகாந்த், வீரர்களை எல்லோரையும் ஒருமையில் குறிப்பிடுகிறாரே! அது பற்றி உங்கள் கருத்து...

நான் அவர் கிட்டேயே இதைப்பத்தி பேசியிருக்கேன். பேசும்போது ஒன்னு தெரிஞ்சது. அவர் தன் வீட்டு ஹால்ல உட்கார்ந்து மேட்ச் பார்க்குற மாதிரிதான் பார்ப்பார். நாம வீட்டுக்குள்ளே பார்க்கும்போது பிராட்மேனே ஆடினாலும், 'அவர்', 'இவர்'னா சொல்லமாட்டோம் இல்லையா. அவர் அப்படித்தான்!

'மூக்கு மேல ராஜா'வுக்கு அர்த்தம்தான் என்ன?

இதுக்கு என்ன அர்த்தம்னு நானும் குழம்பிப்போய் திரிஞ்சுட்டு இருக்கும்போது, அபினவ் முகுந்த்தான் தெய்வமா வந்து அர்த்தம் சொன்னார். டாப் எட்ஜைதான் அப்படி சொல்வாங்களாம். பந்து பேட்ல பட்டு எங்கப்போச்சுன்னு பேட்ஸ்மேன் தேடும்போது 'மூக்கு மேல போயிடுச்சு ராஜா'னு சொல்வங்களாம். இது ஸ்ரீகா காலத்துல யூஸ் பண்ண கலாய்.

சக கமன்டேட்டர்கள்...

ஹேமங், தங்கமான மனுஷன். டீம் மேன். உழைக்க சலிச்சுக்கவே மாட்டார். பத்ரி, செம ஸ்டைலிஷ். அவர் கூட ஒர்க் பண்ண ஜாலியா இருக்கும். லட்சுமண் சிவராமகிருஷ்ணன், அவர் லெஜண்ட். 18 வருஷம் ரெகுலரா இங்கிலிஷ் கமென்ட்ரி பண்ணவர். அவர் கிட்டதான் கத்துக்கணும். அவர் ஒரு என்சைக்ளோபீடியா. ஶ்ரீதரன் ஶ்ரீராம், ரொம்ப புத்திசாலி. பாலாஜி, பொறுமை, மற்றும் கேம் ரீடிங்க் அவர் பலம். ஆர்ஜே பாலாஜி என் குருநாதர். ஃபன் அண்ட் ஃபன் ஒன்லி!


மொட்டைமாடி கிரிக்கெட்டர் முத்துவுக்கு, சர்வதேச கிரிக்கெட்ர்களுடன் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இருக்கிறதா?

மொட்டைமாடியில் விளையாண்டது கிடையாது. ஆனால், TNPL டைம்ல கார்டன்ல ஒன் பிட்ச் கேட்ச் கிரிக்கெட் விளையாடிருக்கோம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் குழு, ரெண்டு குழுவா பிரிஞ்சு விளையாடினோம். பதானி ஒரு டீமுக்கும், பாலாஜி ஒரு டீமுக்கும் கேப்டன். மேட்ச் செம காமெடியா போச்சு. பதானி வேகமா பந்து போடுறாருன்னு பாலாஜி க்ளைம் பண்ணார். இந்த கூத்தெல்லாம் நடக்கும்.

நிறைய கிரிக்கெட்டர்களை பேட்டி கண்டிருக்கிறீர்கள். மறக்கமுடியாது பேட்டி எது, யாருடையது?

சச்சின் டெண்டுல்கரை நான் பேட்டி எடுத்தது என் வாழ்க்கையிலேய மறக்கமுடியாதது. அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட். ஆனால், கொஞ்சம் கூட ஆட்டிட்யூட் காட்ட மாட்டார். அந்த இன்டர்வ்யூக்கு இரண்டு கேமராதான் கொண்டு போயிருந்தோம். இரண்டுமே அவருக்குதான் வெச்சோம். இன்டர்வியூ முடிச்சப்புறம், நான் கேள்வி கேட்கிறதை மட்டும் இன்னொரு முறை தனியா எடுக்க ப்ளான் பண்னோம். ஹோட்டல் வெளிய அவர் ரசிகர்கள் கூடியிருந்தால, அவரால் வெளியே போக முடியலை. அந்த ரூம்லேயே இருந்து ஷூட்டிங்கை கவனிச்சிட்டு இருந்தார். சச்சின் உட்கார்ந்த இடத்துல ஒரு லைட் பாயை உட்கார வெச்சி, "சொல்லுங்க சச்சின், எப்படி சச்சின்"னு பேசிட்டிருந்தோம். உடனே, அவர் பக்கத்துல வந்து, "சச்சின்னா நல்லா நிமிர்ந்து உட்காரணும், உட்காரு"னு அந்த லைட் பாயை உட்கார வெச்சிட்டுப் போனார். ரொம்ப கூலான ஆள் அவர். 

ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் பேட்டிகளும் மறக்கமுடியாதது. பேட்டியா இல்லாம கேஷுவலா பேசினதுல மறக்கமுடியாத தருணம், கபில்தேவுடன் பேசினது. அவரை கபில் பாஜின்னுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க. பாஜின்னா பஞ்சாபில அண்ணானு அர்த்தம். நான் பாஜியோட ஒரு சார் சேர்த்து, பாஜிசார்னு கூப்பிடுவேன். ஒருநாள் "பாஜிசார் ஒரு செல்ஃபி ப்ளீஸ்" கேட்டேன். "எதுக்கு"னு கேட்டார். "கபில்தேவோட போட்டோ எடுத்திருக்கேன்னு என் பேரன், பேத்தி வரைக்கும் சொல்வேன்ல"னு சொன்னேன். "அப்படியா, சரி நார்மலா செல்ஃபி எடுக்குறதுல என்ன விசேஷம் இருக்கு. என் மடியில உட்கார்ந்து எடு"னு சொல்லி, மடியில் உட்கார வெச்சி எடுத்தார். அவர் கெத்து, அவர் சொத்து!