Published:Updated:

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்! - வெற்றியுடன் இங்கிலாந்து தொடரைத் தொடங்கிய இந்திய மகளிர் அணி #INDvENG

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்! - வெற்றியுடன் இங்கிலாந்து தொடரைத் தொடங்கிய இந்திய மகளிர் அணி #INDvENG
ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்! - வெற்றியுடன் இங்கிலாந்து தொடரைத் தொடங்கிய இந்திய மகளிர் அணி #INDvENG

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரில் விளையாடிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, 1-0 என்று தொடரில் முன்னிலைபெற்றுள்ளது. காயம் காரணமாக இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார்.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, இன்றைய போட்டியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் களமிறங்க, ஸ்மிரிதி மந்தானா, ஜெமிமா ராட்ரிக்ஸ் ஜோடி அதிரடி ஓப்பனிங் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த போது, எல்விஸ் பந்துவீச்சில் ஸ்மிரிதி ஆட்டமிழந்தார். கேப்டன் மிதாலி ராஜ், 44 ரன்கள் சேர்க்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 49.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 202 ரன்கள் சேர்த்தது.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. இந்திய வீராங்கனைகளின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹிதர் நைட், நடாலி ஷிவர் கூட்டணி  83 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து மகளிரின் கூட்டணியை உடைத்த ஏக்தா பிஷ்ட், ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

ஒரே ஓவரில், இங்கிலாந்தின் லோயர் ஆர்டரை பதம்பார்த்த ஏக்தா, மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தார். 136 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது இங்கிலாந்து அணி. இதுகுறித்து பேசிய கேப்டன் மிதாலி ராஜ், ``முதல் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர். உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அடுத்த போட்டியில் இன்னும் கவனமாக விளையாடுவோம்’’ என்றார். இரண்டாவது ஒரு நாள் போட்டி இதே மும்பை வான்கடே மைதானத்தில் பிப்ரவரி 25-ம் தேதி நடக்க உள்ளது