Published:Updated:

`அவர்கள் படித்தவர்களா?!'- ரிலையன்ஸ் மீது அப்ரிடி பாய்ச்சல்

`அவர்கள் படித்தவர்களா?!'- ரிலையன்ஸ் மீது அப்ரிடி பாய்ச்சல்
`அவர்கள் படித்தவர்களா?!'- ரிலையன்ஸ் மீது அப்ரிடி பாய்ச்சல்

``படித்தவர்கள் இப்படி செய்யமாட்டார்கள்'' என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி பாய்ந்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. சில இந்திய கிரிக்கெட் ஸ்டேடியங்களிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.  வரும் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.பாகிஸ்தான் அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்க வேண்டுமென்றும், பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

புல்வாமா சம்பவத்தையடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கு ஸ்பான்ஷராக இருந்த இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் உடனடியாக ஒப்பந்தத்தை ரத்துசெய்தது. ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பி விலகியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கூறுகையில், '''கஷ்டமான சூழலில்தான் உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதன் மூலம் இந்த உலகுக்கு அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள்... படித்தவர்கள் இதுபோன்ற செயலில் நிச்சயம் ஈடுபட மாட்டார்கள் '' என்று தெரிவித்தார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், புல்வாமா தாக்குதல்குறித்து, பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்தியா முன் வைப்பதாகத் தெரிவித்திருந்தார். இம்ரான் கானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அப்ரிடி, 'இந்தியாவுடன் மட்டுமல்ல இரான், ஆப்கானிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன்கூட பாகிஸ்தான் நல்லுறவு பேணவே பாகிஸ்தான் விரும்புகிறது '' என்று கூறியுள்ளார்.