Published:Updated:

மகேந்திர சிங் தோனி... இந்தப் பேரு போதாதா கட்டுரையைப் படிக்க! #15YearsOfDhoni

தோனி
தோனி

''தோற்றால் அதற்கு நான்தான் பொறுப்பாவேன். உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அதனால் ரிலாக்ஸாக பந்தை லைன் அண்ட் லென்த்தில் போடு''

தோனி இந்தியக் கிரிக்கெட்டுக்குள் வந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ''உனக்குப் பின்னாடி 1,000 பேர் இருக்காங்க என்கிற தைரியம் இருந்தா உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும். அதே 1,000 பேருக்கு முன்னாடி நீ இருக்கேன்ற தைரியம் வந்துச்சுனா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்'' என்று சொல்வார்கள். அப்படி முன்னாடி நின்று இந்திய கிரிக்கெட்டை பல உயரங்களைத் தொடவைத்தவர்தான் மகேந்திர சிங் தோனி!

Born to Lead... தலைவனாகவே பிறந்தவன் என்பார்கள். அப்படித் தலைவனாகவே பிறந்தவர்தான் தோனி. கால்பந்து, பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் எனப் பிற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருந்தவரை கிரிக்கெட் பக்கம் திசைமாற்றியவர், தோனி படித்த பள்ளியின் பயிற்சியாளர். கால்பந்து ஆர்வம் கொண்ட தோனிக்குக் கிரிக்கெட் மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால், பயிற்சியாளர் சொல்கிறாரே எனக் கிரிக்கெட் பக்கம் வந்தார். கால்பந்து ஆர்வம் அவரை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பதை நோக்கி சிந்திக்க வைத்தது. கிளவுஸை அவர் காதலித்தாரா அல்லது கிளவுஸ் அவரைக் காதலிக்கிறதா என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக உயர்ந்தார் தோனி.

தோனி
தோனி

இன்னொருபக்கம் தோனியின் பேட்டில் இருந்து ஹெலிகாப்டர் ஷாட்கள் தெறிக்க ஆரம்பித்தன. 100, 200 என மிடில் ஆர்டரில் இறங்கி ரன்வேட்டையை நிகழ்த்திக்காட்டினார்.

2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அடித்த 148 ரன்கள், இலங்கையுடன் அடித்த 183 ரன்கள் என்றுமே மறக்க முடியாதவை. தோனியின் ரன் வேட்டை காரணமாக 2006-ம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம் தேடி வந்தது. 2007-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தோல்வி ஒட்டுமொத்த இந்திய அணியையும் ரசிகர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால், ஐந்தே மாதங்களில் இந்தியாவுக்கு உலகக்கோப்பையைக் கொண்டுவந்தார் தோனி.

தலைவன் இருக்கின்றான்!

2007 டி20 உலகக் கோப்பையின் கடைசி ஓவர் இவர்தான் தலைவன் என்பதை இந்தியாவுக்குக் காட்டியது. இறுதி ஓவரை யார் போடப்போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நீடித்துக்கொண்டேபோனபோது பந்தை இளம் வீரரான ஜோகிந்தர் சிங்கிடம் கொடுத்தார் தோனி. ''தோற்றால் அதற்கு நான்தான் பொறுப்பாவேன். உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அதனால் ரிலாக்ஸாக பந்தை லைன் அண்ட் லென்த்தில் போடு'' என ஜோகிந்திரிடம் சொல்லிவிட்டு ஃபீல்டை செட் செய்கிறார் தோனி. முதல் 2 பந்துகளில் 7 ரன் வந்துவிட வெற்றிக்குத் தேவை 6 ரன்கள்... ஜோகிந்தரிடம் ஆஃப்ஸ்டம்புக்கு வெளியே பந்தைப் போடும்படி சொல்கிறார் தோனி. அந்த அதிசயம் நிகந்தது. ''The perfect trap delivery laid in last over'' என்று இன்றுவரை கிரிக்கெட் பண்டிட்களால் அழைக்கப்படுகிறது அந்தப் பந்து.

தோனி
தோனி

2008 சிபி சீரிஸ்!

"The process is more important than the result. A result is a byproduct of your process'' என்று அடிக்கடி சொல்வார் தோனி. அந்த process ஆரம்பித்த இடம் 2008 ஆஸ்திரேலியா சீரிஸ். இந்தியா ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதே கிடையாது. அதை மாற்றி எழுத இளம்படையை அழைத்துச் சென்றார் தோனி.

அந்தத் தொடரில் ஏகப்பட்ட வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கினார். வீரர்களை பேட்டிங் பொசிஷனில் மாற்றி மாற்றி இறக்கியும், பெளலர்களை சுழற்சி முறையில் மாற்றியும் 2011 உலகக் கோப்பைக்கு முன்னோட்டம் பார்த்தார். அந்த முயற்சி இந்தியாவுக்குக் கைமேல் பலன் தந்தது.

அந்த சீரிஸில் தோனி ஆடிய விதத்தைப் பார்த்து இந்தியாவுக்கு ஒரு மைக்கேல் பெவன் கிடைத்துவிட்டார் என ஆஸி பத்திரிகைகள் புகழ்ந்தன.

2011 உலகக் கோப்பை வெற்றி!

முயற்சி என்பது முடிந்தவரை செய்வது அல்ல... எடுத்த காரியம் முடியும் வரை செய்வது. அதை 2011 இறுதிப் போட்டியில் சரியாகச் செய்தார் தோனி. 114 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போய்விட அடுத்து யுவராஜ் வருவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்க யாரும் எதிர்பாராவிதமாக மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார். ஸ்பின்னர்கள் பெளலிங் போட்டுக்கொண்டிருக்கும்போது Left /Right hand காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று யுவிக்கு முன்னால் களம் கண்டார் தோனி. எடுத்த காரியத்தை காம்பீர் உடன் சேர்ந்து கச்சிதமாகச் செய்தார். அவர் அடித்த வின்னிங் சிக்ஸ்தான் இந்திய கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் இளம் சமூகத்துக்கு ஒரு driving force. சாகும் தருவாயில்கூட நான் கடைசியாகப் பார்க்க ஆசைப்படுவது தோனி அடித்த சிக்ஸ்தான் என்று கவாஸ்கரையே சொல்ல வைத்தது.

“Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years!”... இப்போதுகூட இந்த கமென்ட்ரியோட அந்தப் வீடீயோவை பாத்தால் ஒவ்வொரு இந்தியனும் தான் சாதித்தது போன்ற சந்தோஷத்தை உணர முடியும்.

தோனி
தோனி

2013 சாம்பியன்ஸ் டிராபி!

மழையின் காரணமாக 50 ஓவர் போட்டி 20/20 போட்டியாக மாறியது. டாஸில் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை. சேஸிங்குக்கு சாதகமான பிட்ச்சில் இந்தியா முதல் பேட்டிங். 20 ஓவர்களில் இந்தியா அடித்த ரன்கள் வெறும் 129. பெளலிங் போட இந்தியன் டீம் ஃபீல்டுக்குள் இறங்கும்போது தோனி சொன்னது ''God is not coming to save us... நாம போராடிதான் ஜெயிக்கணும்''. தோனி தலைமையில் போராட ஆரம்பித்தது இந்திய அணி. 2007-ல் ஜோகிந்தர் ஷர்மா என்றால் 2013-ல் இஷாந்த் ஷர்மா. இஷாந்த் ஷர்மா வீசிய 15-வது ஓவரில் 11 ரன்கள் அடித்தது இங்கிலாந்து. ஆனால், மீண்டும் 18வது ஓவரை இஷாந்திடம் கொடுத்தார் தோனி. 18 பந்துகளில் 28 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட். இயான் மோர்கன் களத்தில் கனன்று கொண்டிருந்தார். இரண்டாவது பந்தே சிக்ஸருக்குப் போனது. ஆனால், 5வது பந்தில் மார்கனை வீழ்த்தியவர், அடுத்த பந்தில் ரவி போப்பராவையும் வீழ்த்தி இரண்டு இன் ஃபார்ம் பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பினார். இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தோனியின் கடைசி ஓவர் ஃபினிஷிங் திரில்லர் படத்தைவிட திகில் கூட்டக்கூடியவை. "If 15 runs are needed off the last over, pressure is on the bowler… not on MSDhoni." என்று இயான் பிஷப் சொல்வார். DRS சிஸ்டத்தை DHONI REVIEW SYSTEM என்று சொல்ல வைக்கும் அளவுக்கு அவரின் கணிப்புகளில் அவ்வளவு துல்லியம். தோனியின் மின்னல் வேக ஸ்டம்ப்பிங் சாதனைகளை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.

ரிவர்ஸில் த்ரோ அடித்து ரன் அவுட் ஆக்குவது, பேட்ஸ்மேனின் மனதைக் கணித்து அடுத்து அவர் என்ன ஷாட் ஆடுவார், அவருக்கு எப்படிப் பந்தைப் போட வேண்டும் என பெளலருக்கு சொல்வது எனத் தோனிக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

ரோஹித் ஷர்மாவை ஓப்பனிங் இறங்க வைத்தது, புவி, அஷ்வின், ஜடேஜா, ரெய்னா, தவான், பாண்டியா, சமி எனப் பல உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கியது எனத் தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த கொடைகள் ஏராளம்.

தோனி
தோனி

வெற்றியை பகிர்வதும், தோல்வியைத் தன் தோளில் மட்டும் சுமப்பதும்தான் ஒரு தலைவனின் சிறந்த தகுதி. அதைத்தான் கேப்டனாக இருந்த காலம் முழுவதும் செய்தவர் தோனி.

2020 ஐபிஎல்லில் தோனி நிகழ்த்தப்போகும் மேஜிக்குக்காகத் தோனி ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங். கமான் கேப்டன்!

`அந்த 30 நிமிடங்கள் தவிர்த்து, இது மிகச் சிறப்பான ஆண்டு!’ - `ஆட்டநாயகன்’ கோலியின் 2019 ஷேரிங்ஸ்
அடுத்த கட்டுரைக்கு