கடந்த 30 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர் தக்க வைத்திருந்த ரெக்கார்டை தன்வசப்படுத்தியுள்ளார் 15 வயதேயான இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா. சர்வதேச கிரிக்கெட்டில், குறைந்த வயதில் அரை சதம் கடந்த வர்மா, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

2013 அக்டோபர் 30, ஹரியானா பன்சி லால் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டிதான் சச்சினுக்குக் கடைசி ரஞ்சி கோப்பை போட்டி. உள்ளூர் ரசிகர்கள் ஹரியானாவுக்கு ஆதரவு அளிக்க, அங்கிருந்த 9 வயதுச் சிறுமி மட்டும் 'சச்சின்...சச்சின்...' என கைதட்டிக் கொண்டிருந்தாள். அன்று, சச்சினைப் பார்த்து கிரிக்கெட்டை நேசிக்கத் தொடங்கிய வர்மா, இன்று சச்சினின் ரெக்கார்டையே முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. 2-1 என ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இதுவரை நடந்துள்ள முதல் இரண்டு டி-20 போட்டிகளையும் வென்றது.

டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் டி- 20 போட்டியில், ஸ்மிரிதி மந்தானாவுடன் ஓப்பனிங் களமிறங்கிய வர்மா, 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் வர்மாவுக்கு இது முதல் அரை சதம்.
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரை சதம் அடித்தபோது வர்மாவின் வயது - 15 ஆண்டு 285 நாள்கள்
1989-ம் ஆண்டு, ஃபைசலாபாத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதம் அடித்தார் சச்சின்.
அப்போது சச்சினின் வயது - 16 ஆண்டு 214 நாள்கள்

இத்தனை ஆண்டுகளாக சச்சின் வசம் இருந்த ரெக்கார்டை தன்வசப்படுத்தியுள்ளார் வர்மா. சர்வதேச கிரிக்கெட்டில், குறைந்த வயதில் அரை சதம் கடந்த இந்திய கிரிக்கெட்டரானார். அதுமட்டுமல்ல, ஓப்பனிங் களமிறங்கிய ஸ்மிரிதி - வர்மா ஜோடி 143 ரன்கள் குவித்தது. டி-20 கிரிக்கெட்டில் இந்திய மகளிரின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது. 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்திய அணி.
முதல் போட்டியில் இருந்த அதிரடி, அடுத்த போட்டியில் இரட்டிப்பானது! 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை விரட்டிய இந்திய மகளிருக்கு, ஓப்பனிங் பேட்ஸ்வுமன்கள் ஷஃபாலி, ஸ்மிரிதியின் அதிரடி ஆட்டம் கைகொடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஸ்மிரிதி 30 ரன்கள் எடுத்திருந்தார்.
10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் (ஸ்ட்ரைக் ரேட் - 197.14) விளாசிய ஷஃபாலி, 35 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 10.3 ஓவரிலேயே இலக்கைக் கடந்த இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கிரிக்கெட் காதலி
ஹரியானாவின் ரோடாக் கிராமத்தைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா, சிறு வயதிலேயே கிரிக்கெட்டால் ஈர்க்கப்பட்டவர். வர்மாவின் விருப்பத்துக்கு ஆதரவு அளித்த அவரது தந்தை சஞ்சய் வர்மா, முறைப்படி கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.
கிரிக்கெட் விளையாட்டு ஆண்களுக்கானது என்று சொல்லி வர்மாவைப் பயிற்சியில் சேர்க்க மறுக்கின்றனர் பயிற்சியாளர்கள். அதற்கெல்லாம் அசராத அவரது தந்தை, சொந்த மகளுக்கு ஆண் வேடமிட்டு பயிற்சிக்கு அனுப்பத் துணிந்தார்.
வர்மாவின் கூந்தலை வெட்டினார், பெயரை மாற்றி பேன்ட் - ஷர்ட் வாங்கிக் கொடுத்து பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். கிரிக்கெட்டுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்த அப்பாவால், கிரிக்கெட் பயிற்சியில் முழு கவனம் செலுத்தினார்.
கிரிக்கெட் பயிற்சியாளர்கள் உண்மையைக் கண்டறியும் வரை, வர்மாவின் பயிற்சி தொடர்ந்தது. ஊர் மக்களின் கண்டனத்துக்கு ஆளான போதும் வர்மாவின் தந்தை மனம் தளரவில்லை. பக்கத்து ஊரில் உள்ள பயிற்சி மையத்தில் வர்மாவைச் சேர்த்தார்.
தந்தையும் மகளுமாய் மாறி மாறி நடத்திய போராட்டத்துக்குக் கிடைத்த பலன்தான், இந்திய மகளிர் அணியில் வர்மாவுக்குக் கிடைத்த இடம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஷஃபாலி இந்திய அணியில் தனக்கென ஓர் இடத்தை உறுதி செய்துவிட்டார். ஏற்கெனவே, ஹர்மன் ப்ரீத் தலைமையிலான அணியில் ஸ்மிரிதி, ஜெமிமா என அதிரடி பேட்ஸ்வுமன்கள் இருக்கும் பட்டியலில் இப்போது புதிதாக இணைந்திருப்பது - ஷஃபாலி வர்மா!
இந்த ஆண்டு, டீன்-ஏஜ் வீராங்கனைகள் விளையாட்டுகளில் 'ஷாக் வெற்றிகள்' கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். டென்னிஸ் ஃபாலோ செய்பவர்கள் கோகோவை மறந்திருக்க வாய்ப்பில்லை. 2019 விம்பிள்டன் தொடரில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸை நேர் செட் கணக்கில் தோற்கடித்தார் 15 வயது கோகோ.

விளையாட்டுத் துறையில் பெண்கள் சாதித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆண்கள் விளையாட்டுக்கு இணையான நுணுக்கமும், சுவாரஸ்யமும் பெண்கள் விளையாட்டிலும் இருந்தபோதிலும், போராட்டங்களும் கோரிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஊதிய குறைவு, விளையாட்டு ஒளிபரப்பு சிக்கல் எனப் பெண்கள் விளையாட்டில் பிரச்னைகள் ஏராளம்.
பிரச்னைகளை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, விளையாட்டைத் தேர்ந்தெடுக்கும் கோகோவும், வர்மாவும் இன்னும் பல சாதனைகளைச் செய்யக் காத்திருக்கின்றனர்.