Published:Updated:

13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை! - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை

13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை! - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை
13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை! - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடம் பிடித்திருக்கிறார். 

தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்டுக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடம்  பிடித்திருக்கிறார். இதன்மூலம், மெக்ராத்துக்குப் பின்னர் இந்த இடைத்தை எட்டிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மெக்ராத், கடந்த 2006-ல் இந்தப் பெருமையைப் பெற்றிருந்தார். இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 145 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றிய ரபாடா, தரவரிசையில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இரண்டாவது இடத்தை இங்கிலாந்தின் ஜிம்மி ஆண்டர்சன் பிடித்தார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 5வது இடத்தில் நீடிக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் மற்றும் இலங்கை அணியின் திமுத் கருணாரத்னே ஆகியோர் 10வது இடம் பிடித்திருக்கிறார்கள். அதேபோல், தென்னாப்பிரிக்க அணியின் டிகாக், 8வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை த்ரில் வெற்றிபெறச் செய்த குஷால் பெரேரா, 58 இடங்கள் முன்னேறி, 40வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் இருக்கும் அந்தப் பட்டியலில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3வது இடத்திலும் நீடிக்கிறார்கள். அணிகளுக்கான தரவரிசையைப் பொறுத்தவரை இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.