Published:Updated:

`உலகக் கோப்பையில் பாகிஸ்தான் போட்டியை இந்திய அணி தவிர்க்கணும்!’ - சி.சி.ஐ கோரிக்கை #PulwamaAttack

`உலகக் கோப்பையில் பாகிஸ்தான் போட்டியை இந்திய அணி தவிர்க்கணும்!’ - சி.சி.ஐ கோரிக்கை #PulwamaAttack
`உலகக் கோப்பையில் பாகிஸ்தான் போட்டியை இந்திய அணி தவிர்க்கணும்!’ - சி.சி.ஐ கோரிக்கை #PulwamaAttack

புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக வரும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி தவிர்க்க வேண்டும் என கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அமைப்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்தியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. 

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக் கூடாது என மும்பையிலுள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (சி.சி.ஐ) அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து பேசிய சி.சி.ஐ-யின் செயலாளர் சுரேஷ் பஃப்னா, ``புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இதுவரை வாய் திறக்கவில்லை. இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், அதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் கருத்து தெரிவிக்காதது ஏன்?. புல்வாமா தாக்குதல் குறித்து வெளிப்படையாக அவர் கருத்து தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அவ்வாறு வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் பக்கம் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே பொருள்’’ என்று ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார். 

Photo Credit: ANI

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இருந்த இம்ரான் கானின் புகைப்படத்தை சி.சி.ஐ அமைப்பினர் மறைத்தனர். அந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்த முடிவு எடுக்கப்பட்டதாக பஃப்னா தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், `புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் சி.சி.ஐ-யின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினோம். அந்தக் கூட்டத்தில் பிரபோர்ன் மைதானத்தில் இருக்கும் இம்ரான் கானின் புகைப்படத்தை மறைக்க முடிவெடுத்தோம். விரைவில் அந்தப் புகைப்படத்தை எப்படி அகற்றுவது என்பது குறித்து முடிவு எடுப்போம்’’ என்று தெரிவித்தார். 


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் வரும் ஜூன் 16-ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.