Published:Updated:

தோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்! யார் இவர்?

`தோனி வந்த உடனே 'ஹாய் மச்சி... ஹௌ ஆர் யு?'னு கேப்பாரு. நானும் 'ஃபைன்'னு சொல்லி சிரிச்சிட்டு வேலையைப் பார்ப்பேன். தோனி பக்கத்துலதான் மேக்ஸிமம் உட்கார்ந்து இருப்பேன். எனக்கு ஹிந்தி தெரியும்.’

தோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்! யார் இவர்?
தோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்! யார் இவர்?

சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் ஓரத்தில் இருக்கும் நடைபாதையில் வாகன இரைச்சல்களுக்கிடையிலும், வரிசையாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளின் நிழலிலும் அமைதியாக உட்கார்ந்து கை கிளவுஸ், ஷூ தைத்துக் கொண்டிருக்கிறார் பாஸ்கரன். இவர்தான் 28 ஆண்டுகளாக சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் அதிகாரபூர்வ 'காப்லர்'. சொந்த ஊர் தேவக்கோட்டை. பிறந்தது, ஏழாம் வகுப்புவரை படித்தது எல்லாம் சென்னையில்தான். கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இல்லாத இவர், ஆரம்பத்தில் அப்பா செய்த பழ வியாபாரத்தைப் பார்த்து வந்துள்ளார். பின்னர், மாமா செய்த காப்லர் தொழிலை எடுத்துச் செய்து வருகிறார்.

“இந்த இடத்துலதான் 28 வருஷத்துக்கு முன்னால சின்னதா கடை போட்டேன்; 28 வருஷமும் ஓடி போச்சு. வாழ்க்கையும் ஓடிபோச்சு” என்று அமர்ந்திருக்கும் அந்த நடைபாதையைத் தொட்டு சிரிக்கிறார் பாஸ்கரன். 

மாமாவிடம் தொழிலைக்கற்று கடைபோட்ட பின், தன்னுடைய தொழில் இனி இதுதான் என்று முடிவு செய்திருக்கிறார் பாஸ்கரன். ஷூ, கிளவுஸ் தைப்பது, பேட் ஸ்டிக்கர் ரிமூவ் செய்வது, ஹெல்மட் சரி செய்வது என எல்லாவற்றிலும் கலக்கும் பாஸ்கரனுக்கு, அவருடைய நண்பர் மூலம் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் காப்லராக பணி கிடைத்தது. 1993-ம் ஆண்டு நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் தொடங்கி இன்று வரை ஸ்டேடியத்தின் அஃபீஸியல் காப்லர் இவர்தான். 

அசாருதீன் தொடங்கி தோனி வரை அனைத்து கேப்டன்களுடனும் வேலை செய்திருக்கும் பாஸ்கரன், “நான் மிகவும் அடிமட்டத்துல இருந்து மேல வந்துருக்கேன்னா அதுக்கு காரணம் இந்த கிரிக்கெட்தான். என்னுடைய மகன்கள், மகள்கள் எல்லாரையும் படிக்கவச்சதுக்கு முக்கியமான காரணமும் இதுதான். கிரிக்கெட் நடக்கும்போது எனக்கு வி.ஐ.பி பாஸ் குடுப்பாங்க. நான் பிளேயர்ஸ் இருக்குற இடத்துக்கு பக்கத்துல உட்கார்ந்திருப்பேன். பிளேயர்ஸுக்கு அவசரமா ஷூ தைக்கனும்னா தைச்சு கொடுப்பேன். கிறிஸ் கெய்ல், ஏ.பி.டி வில்லியர்ஸ், வார்னே, வாட்சன் என இன்டர்நேஷனல்ல இருந்து உள்ளூர் பிளேயர்ஸ் வரை எல்லாருக்கும் தைச்சு கொடுத்திருக்கேன். அவங்களும் நல்லா இருக்குனு பாராட்டி இருக்காங்க. நான் வரலேனாக்கூட கேப்பாங்க" என்றவர், பிரபல வீரர்களுடனான நெருக்கத்தை பூரிப்புடன் பகிர்ந்தார். 

"தோனி வந்த உடனே 'ஹாய் மச்சி... ஹௌ ஆர் யு?'னு கேப்பாரு. நானும் 'ஃபைன்'னு சொல்லி சிரிச்சிட்டு வேலையைப் பார்ப்பேன். தோனி பக்கத்துலதான் மேக்ஸிமம் உட்கார்ந்து இருப்பேன். எனக்கு ஹிந்தி தெரியும். அவங்களுக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் மொழிப் பிரச்னை வராது" என்று சிரிக்கிறார்.

"உங்களுக்கு பிடிச்ச கிரிக்கெட் பிளேயர் யார்?" என்று கேட்டபோது,  "தோனி, ரெய்னா, சச்சின், விராட் கோலி எல்லாம் நல்ல க்ளோஸ். எல்லாரும் நல்ல ஜாலி டைப். வார்னர், வாட்சன்லாம் நல்ல டைப். டோனிலாம் செம கூலான ஆளு. எவ்வளவு பெரிய போட்டியா இருந்தாலும் டென்ஷனாக மாட்டாரு. தோத்துட்டாரா... கூலா வந்து உட்கார்ந்து சகஜமா பேச ஆரம்பிச்சிருவாரு. எனக்கு தோனியைத்தான் ரொம்பப் பிடிக்கும். சச்சின் அதிகமா பேசமாட்டாரு. வேலை செய்யும்போது அட்வைஸ் பண்ணுவாரு. கங்குலியும் அப்படிதான் அநாவசியமா பேச மாட்டாரு. ஆனா, எல்லாரும் செம ஜாலியா இருப்பாங்க. மரியாதையா பேசுவாங்க" என்கிறார்.

'இவ்வளவு தொடர்புகள் வைத்திருந்தாலும், வெளியே அமர்ந்திருக்கிறீர்களே?' என்று கேட்டதற்கு, ``அதான் தம்பி கடவுள்! பணத்துக்காகலாம் இப்போ வேலை செய்யுறது இல்ல. பிளேயர்ஸ் என் கூட அன்பா இருப்பாங்க. அவங்களுக்காகத்தான் வேலை செய்றேன். இதுவரைக்கும் என் வேலையில யாரும் குறை சொன்னதில்லை. புதுசா வந்த ப்ளேயர் வரைக்கும் எங்கிட்டதான் வேலையெல்லாம் கொடுப்பாங்க. ஸ்டேடியம் முன்னாடியே இருக்குறதால ரெகுலர் கஸ்டமர்ஸ் இருக்காங்க. மழை அன்னிக்கி மட்டும்தான் லீவ் போடுவேன். மத்த நாள் இங்க வந்துருவேன்” என்றவர், “எப்படி என் கதை... நல்லா இருக்கா?” என சிரித்தார்.

பாஸ்கரன் தாத்தாவைப் புகைப்படம்  எடுத்துவிட்டு சற்று தூரம் வந்து திரும்பி பார்த்தால், யாருக்கோ கிளவுஸ் தைக்கத் தொடங்கியிருந்தார். அவரின் பின்னால் 'கனா' படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.