Election bannerElection banner
Published:Updated:

``சச்சின் ஓவியங்கள்தான் பெஸ்ட் செல்லிங்!” - கிரிக்கெட் ஓவியர் கிறிஸ்டீனா பியர்ஸ்

``சச்சின் ஓவியங்கள்தான் பெஸ்ட் செல்லிங்!” - கிரிக்கெட் ஓவியர் கிறிஸ்டீனா பியர்ஸ்
``சச்சின் ஓவியங்கள்தான் பெஸ்ட் செல்லிங்!” - கிரிக்கெட் ஓவியர் கிறிஸ்டீனா பியர்ஸ்

``நான் வரைந்த முதல் இந்திய கிரிக்கெட்டரின் ஓவியம் சச்சின் டெண்டுல்கருடையதுதான். இதுவரை சச்சினின் ஓவியங்களையே நான் அதிகம் வரைந்துள்ளேன். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, சச்சினின் ஓவியங்கள்கூட அவரின் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடிக்கின்றன!”

செல்ஃபிக்கள் கோலோச்சும் டிஜிட்டல் காலத்திலும் கெத்து குறையாமல் அப்ளாஸ் அள்ளுவது ஓவியங்கள்தான். செஞ்சுரி அடித்த பிறகு ரசிகர்களைப் பார்த்து எம்.ஆர்.எஃப் பேட்டை நீட்டும் சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட்டின் ஹிட்டிங் ஸ்டில், கங்குலியின் வின்னிங் எமொஷன்... இதையெல்லாம் போட்டோக்களாகப் பார்ப்பதைவிட, ஓவியங்களாகப் பார்த்தால் எப்படி இருக்கும்?

இவற்றையெல்லாம் நிகழ்த்திக்காட்டும் ஓவியர்தான் கிறிஸ்டீனா பியர்ஸ். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அவரது ஓவியங்கள், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கொண்டாடப்படுபவை. அவரிடம் பேசினேன்!

இந்தியா கனெக்ட்

``நான் வரைந்த முதல் இந்திய கிரிக்கெட்டரின் ஓவியம் சச்சின் டெண்டுல்கருடையதுதான். இதுவரை சச்சினின் ஓவியங்களையே நான் அதிகம் வரைந்துள்ளேன். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, சச்சினின் ஓவியங்கள் அவரின் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடிக்கின்றன” என்றவர்,  ``விற்பனையின்போது, சச்சின் ஓவியங்கள்தான் பெஸ்ட் செல்லிங்'’ என்றார்.

2014-ம் ஆண்டு மும்பை டாவோ கேலரியில் இடம்பெற்றிருந்த கிறிஸ்டீனாவின் ஓவியங்களை, எளிதில் கடந்துவிட முடியாது. `ஐகான்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே, ஹர்பஜன், தோனி உட்பட ஸ்டார் கிரிக்கெட்டர்களின் `சிக்னேச்சர் போஸ்’ (signature pose) ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன. ஒருமுறை பார்த்தாலே, பல நாஸ்டால்ஜியா விஷயங்கள் நினைவுக்கு வருவது உறுதி.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு, பாகிஸ்தான் பிரஸ்டன் பல்கலை சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது, கிறிஸ்டீனா வரைந்த கங்குலியின் போர்ட்ரேட் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. 

``கோலியின் அதிரடி ஆட்டத்தை விரும்பிப் பார்ப்பேன். புது வரவான கோலியின் ஓவியங்களை மிகவும் ரசித்து வரைந்தேன். அப்போது சச்சின்... இப்போது கோலி...'' என்றவரின் கிரிக்கெட் ஓவியங்கள், சென்னை ராமச்சந்திரா சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் வளாகத்திலும் இடம்பெற்றுள்ளன.

கிரிக்கெட் என்ட்ரி

கிரிக்கெட் விளையாடும் தந்தை - மகன் என, குடும்பமே இந்த விளையாட்டைச் சார்ந்து உள்ளதால், கிறிஸ்டீனாவுக்கு கிரிக்கெட் புதிதல்ல. லண்டன் கலைக் கல்லூரியில் படிப்பை முடித்தவர், கிரிக்கெட் பெயின்டிங்கில் ஈடுபடத் தொடங்கினார். ``கிரிக்கெட் ஓவியங்களை வரைவதற்கு முன், ஸ்டில் ஓவியங்கள், இயற்கை, லண்டன் என மற்ற ஓவியங்களையும் வரைந்துவந்தேன். விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட் என்ட்ரிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால், தொடர்ந்து பயணித்துவருகிறேன்” என்றார். ஃபீல்டில் பேட்டிங் செய்துகொண்டிருந்த மகன் ஆஸ்கரின் ஓவியம்தான், கிறிஸ்டீனாவின் முதல் கிரிக்கெட் ஓவியம். 

டிஜிட்டல் டூல்ஸ்களுக்கு அப்டேட் ஆகாமல், டிராயிங் போர்டு, பென்சில், ஆயில் பெயின்டிங் எனப் பாரம்பர்ய முறையைக் கையாள்வதே கிறிஸ்டீனாவின் ஓவியங்களில் உள்ள சிறப்பு. போட்டியைக் காண மைதானத்துக்குச் சென்று முக்கிய மேட்ச் மொமன்ட்டுகளை லைவ் பெயின்டிங் செய்வதில் கிறிஸ்டீனா கில்லி. 

``கிரிக்கெட், உணர்ச்சி நிறைந்தது. போட்டி நடக்கும் மைதானத்தை ஓவியப்படுத்தும்போதும், அதில் உணர்ச்சிகள் நிறைந்திருக்கும். வெவ்வேறு நாடுகளில் உள்ள மைதானங்களுக்குச் செல்லும்போது, வித்தியாசமான அனுபவம் கிடைப்பதை மறுக்க முடியாது. ஐ லவ் டு பெயின்ட் கிரிக்கெட் கிரவுண்ட்ஸ்” என்றார். பிரபலமான ஆக்‌ஷன் போஸ்களை, புகைப்படங்கள் பார்த்து வரைகிறார். 

லைவ் பெயின்டிங் மட்டுமன்றி தன்னுடைய டிராயிங் ஸ்டூடியோவிலும் பெரிய போர்ட்ரேட் ஓவியங்களை வரைந்துவருகிறார். டிஜிட்டல் டூல்ஸ் பயன்படுத்துவதை விரும்பாதவர், காலத்தின் கட்டாயத்தால் டிராயிங் முறைகளை அப்டேட் செய்துகொள்வது அவசியம் என்பதை உறுதிசெய்கிறார்.  ஆனால்,  சர்ச்சைக்குரிய ஓவியங்களை வரைவதற்கு மட்டும் கண்டிப்பாக `நோ’ சொல்கிறார் கிறிஸ்டீனா!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு