Published:Updated:

மதுவை விட கொடியதான கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் - கி.வீரமணி

மதுவை விட கொடியதான கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் - கி.வீரமணி
மதுவை விட கொடியதான கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் - கி.வீரமணி

மதுவை விட கொடியதான கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் - கி.வீரமணி

மதுவை விட கொடியதான கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் - கி.வீரமணி

சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு அனுமதி கொடுத்த அரசை கண்டித்து வரும் 24 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.க. மாணவரணி, மகளிரணி மற்றும் இளைஞரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இது தொடர்பாக தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கை...

"விளையாட்டு என்பது உடலை நலத்தோடு வைத்துக் கொள்ளவும், உள்ளத்தைப் பக்குவப்படுத்தவும், வெற்றி, தோல்வி எதுவரினும் சமப் பார்வையுடன் ஏற்கும் மன நிலையைப் பெறவும் பயன்படும் அரிய ஒன்றாகும். இங்கிலாந்தில் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் குளிராக இருக்கும். கோடையில் சூரிய வெளிச்சம் வரும் போது அதை அனுபவிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட பொழுதுபோக்கான விளையாட்டு தான் கிரிக்கெட். இது கால்பந்து, கைப்பந்து, சடுகுடு என்ற கபடி, சிலம்பம், ஏன் ஆக்கி போன்றவை மூலம் வரும் வலிமை, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இந்த கிரிக்கெட்டில் கிடையாது. இது ஒரு மேனா மினுக்கி விளையாட்டு. அவ்வளவு தான்!

இன்று அந்தப் பைத்தியம் நமது இளைஞர்கள், மாணவர்கள் பலருக்கும் பிடித்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் எப்படி மது வியாபாரம் நடைபெறுகிறதோ அதுபோல, கிரிக்கெட் என்பது கொள்ளை லாப குபேரர்களின் போட்டிப் பந்தயக் குதிரையாகி விட்டது. உழைக்கும் மக்கள்கூட, இந்த விளையாட்டை பார்த்து நூற்றுக்கணக்கான ரூபாய் மதிப்பில் டிக்கெட் வாங்கி, கைப் பொருள் இழக்கின்றனர். சில நாடுகளின் அணிகளுக்கிடையே நடந்த இந்த கிரிக்கெட் பந்தயம்  இப்போது முற்றிலும் விசித்திரமாக IPL (Indian Premier League)  என்ற பெயரால், கிரிக்கெட் ஆட்டக்காரர்களை பல கம்பெனியாளர்கள் முதலீடு செய்து, விலைக்கே வாங்கி ஆட விட்டு, கொள்ளைப் பணம் அடிக்கின்றனர்.

மது போதையைவிட இந்த கிரிக்கெட் போதை மிக மிக ஆபத்தானது; அதைவிட மோசமானது. விடிந்தால் போகும் மதுப் போதை, இந்தக் கிரிக்கெட்(டு)ப் போதையோ ஒரு முறை பிடித்தால் எளிதில் போகாது; நீரிழிவு நோய் போல! மனித உரிமைகளுக்கும், சுயமரியாதைக்கும் விரோதமான தத்துவம் மனிதனை கொத்தடிமைகளாக விலைக்கு வாங்குவது என்ற நிலையில், விளையாடுபவர்களை விலை கொடுத்து, ஆடு மாடுகளை வாங்குவதுபோல வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களை ஆட வைத்து, பணம் கோடிக்கணக்கில் சுரண்டப்படுகிறது!

அதைவிடப் பெரிய அநியாயத்திற்கு அசிங்கப் பூண்போட்டதுபோல், மேல் பந்தயம் சூதாட்டமாக தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இதனால் கறுப்புப் பணப் பெருக்கமும் மற்றொருபுறம்' கொடிகட்டுகிறது. இந்த சூதாட்டங்கள் கொள்ளையில் மட்டுமல்ல கொலையிலும் முடிகிறது என்பது மும்பையில் நடைபெற்ற ஒரு 13 வயது சிறுவன் கொலையால் அறிய முடிகிறது. வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதல்லவா?

மும்பையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில், இழந்த பணத்தை மீட்பதற்காக, 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான்.மும்பையை சேர்ந்தவர், ஹிமான்சு ரன்கா. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், தற்போது நடைபெற்று வரும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டார். அதில், 30 லட்சம் ரூபாயை இழந்தார். மனமுடைந்த ரன்கா, இழந்த பணத்தை எப்படி மீட்பது என தீவிரமாக ஆலோசித்தார்.தன் சித்தப்பாவிடம், 30 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை அறிந்தார்.அந்தப் பணத்தை பறிக்க நினைத்த ரன்கா, தன் நண்பர், பிஜேஷ் சங்க்வியுடன் சேர்ந்து, சித்தப்பாவின் மகன் ஆதித்யாவை கடத்தினார்.பின், கடத்தல்காரன் போல, சித்தப்பாவின் வீட்டிற்கு போன் செய்து, "உங்கள் மகன் ஆதித்யாவை கடத்தி வைத்திருக்கிறோம். 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், விட்டு விடுகிறோம் என, மிரட்டினார்.

அதிர்ச்சி அடைந்த, ஆதித்யாவின் தந்தை ஜிதேந்திரா, போலீசில் புகார் செய்தார். அவர் போலீசில் புகார் செய்ய சென்றபோது, ஒன்றும் தெரி யாதவர் போல ரன்காவும் உடன் சென்றார். இதற் கிடையே, போலீசார் தன்னைக் கண்டுபிடித்து விடு வார்களோ என, பயந்த ரன்கா, நண்பர் சங்க்வியுடன் சேர்ந்து அவனை கொல்ல திட்டமிட்டார். இருவரும் சேர்ந்து, கடத்தி வைத்திருந்த ஆதித்யாவை மும்பை புறநகர் பகுதிக்கு காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, ஆதித்யாவின் கை நரம்புகளை நறுக்கினர். இதில், அதிக ரத்தம் வெளியேறி, அவன் மயக்கமடைந்ததும், பன்வெல் என்ற இடத்தருகே, காரிலிருந்து தூக்கி வீசினர். இதில், ஆதித்யா உயிரிழந்தான்.இதற்கிடையில், ரன்காவின் காரில், ஆதித்யாவின் செருப்பு இருந்ததைக் கண்டு, சந்தேகமடைந்த ஜிதேந்திரா, போலீசுக்கு தகவல் தெரிவித் தார். காரைப் பறிமுதல் செய்து, காவல் துறையினர் சோதனை நடத்தியதில், காரில் ரத்தக் கறைகள் காணப்பட்டன.இதையடுத்து, ரன்காவிடம் விசாரணை நடத்தியதில், அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். அவரும், அவரின் நண்பர் சங்க்வியும் கைது செய்யப்பட்டனர்.

##~~##
விளையாட்டுத் தத்துவத்தின் பொது ஒழுக்கத்தையே சிதைத்த வண்ணம், பேசி வைத்துக் கொண்டு திட்டமிட்டு நன்கு ஆடாமல் தோற்று விடுவதற்கு, பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றது சர்வதேச அவமானம் அல்லவா! இந்தப் போதையில் ஈடுபட்ட இளைஞர்கள் பலரும் படிப்பைக் கோட்டை விடுகின்றனர்! பணத்தை நாசம் செய்கின்றனர்; இதனால் உடல் வளமும்கூட பெருகிடவில்லை! கிராமப்புறங்களில்கூட மாணவர்கள் வயல்வெளிகளில் கொளுத்தும் கத்திரி வெயிலில் ஆடி தங்கள் உடலுக்குக் கேடு சேர்த்துக் கொள்கின்றனர்.
பாபநாசம், ராஜகிரி பகுதியில் கிரிக்கெட் பற்றி எழுந்த பிரச்சினையில் வாதத்தில் தொடங்கி மகன் தந்தையை கொன்ற செய்தி மறந்து விட்டதா? பான்பராக், குட்கா, மது, இந்த வரிசையில் இந்த கிரிக்கெட் சூதாட்ட மோகம் மிகக் கேடானது ஆகும்! இதை அரசு தடை செய்ய வேண்டும் அல்லது 90 விழுக்காடு வரிவிதித்து. அதன் மூலம் அதை சிறுகச் சிறுக ஒழிக்க வேண்டும். சூதாட்டம் கிரிமினல் குற்றம் என்கிறபோது இதை மட்டும் மத்திய, மாநில அரசுகள் அனுமதித்து இப்படி கொலையும், கொள்ளையும் பெருகி, பொது ஒழுக்கக் கேட்டிற்கு சட்ட அனுமதி தரலாமா?
இந்த அவலத்தைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணியினர் இணைந்து மாவட்டத் தலைநகர்களில் வருகின்ற 24.5.2013 வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவர். இந்தப் பிரசாரத்தை நன்கு விளக்கி தெருமுனைக் கூட்டங்கள் போட்டுப் பேசுவதை இதன் இரண்டாவது கட்ட செயல் திட்டமாகக் கழகம் மேற்கொள்ளவிருக்கிறது! நமது வீர விளையாட்டுகளைப் புதுப்பிக்க இந்த கண்டனங்களும், பிரசாரமும் நிச்சயம் பயன்படும் என்றும் நாம் நம்புகிறோம். ஒத்த கருத்துள் ளவர்களும் இதில் கலந்துகொண்டு, இளைஞர்கள், மாணவர்களின் எதிர்கால வாழ்வைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் வீரமணி.
 
அடுத்த கட்டுரைக்கு