Published:Updated:

`பேட்டிங்; 'பேபி சிட்டர்' ரெண்டுக்குமே நீங்கதான் ஹீரோ' - ஷேவாக் குறித்து நெகிழும் ரிஷப் பன்ட்!

`பேட்டிங்; 'பேபி சிட்டர்' ரெண்டுக்குமே நீங்கதான் ஹீரோ' - ஷேவாக் குறித்து நெகிழும் ரிஷப் பன்ட்!
`பேட்டிங்; 'பேபி சிட்டர்' ரெண்டுக்குமே நீங்கதான் ஹீரோ' - ஷேவாக் குறித்து நெகிழும் ரிஷப் பன்ட்!

சமீபத்தில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடரில் உருவான ஸ்லெட்ஜிங், உலக அளவில் அதிக கவனம் பெற்றது. குறிப்பாக, இந்திய வீரர்  ரிஷப் பன்ட்  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது, தோனி அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ``நீங்கள் என் குழந்தையை கவனித்துக்கொண்டால், நான் என் மனைவியுடன் சினிமாவுக்குச் சென்றுவருவேன்" என்று சீண்டினார்.

இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில் டிம் பெய்ன் கேட்டுக்கொண்டதுபோல, அவரது வீட்டுக்குச் சென்று குழந்தைகளைச் சந்தித்தார் ரிஷப். இதை, பெய்னின் மனைவி பாம் பெய்ன், குழந்தைகளுடன் ரிஷப் பன்ட் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ``சிறந்த பேபி சிட்டர் ரிஷப் பன்ட்” என்று குறிப்பிட்டிருந்தார். ரிஷப் பன்ட்டின் இந்தச் செயல், இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது, ஆரோக்கியமான பதிலடி எனப் பல விளையாட்டு வீரர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். 

இதற்கிடையில், முன்னதாக வைரலான ``பேபி சிட்டர்'' விஷயத்தை வைத்து விளம்பரப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். ஆஸ்திரேலிய அணி, வரும் 24-ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. அவர்களை வரவேற்கும் விதமாகவும் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாகவும் இது எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் நடித்துள்ளார்.

ஸ்டார் போர்ட்ஸ் நிறுவனம் எடுத்துள்ள பேபி சிட்டர் விளம்பரம், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த விளம்பரத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பேபி சிட்டர் விஷயம் வைரலாகக் காரணமாக இருந்த ரிஷப் பன்ட்,இந்த விளம்பரம் தொடர்பாகத் தன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ” சிறப்பாக எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் மற்றும் எப்படி சிறந்த பேபி சிட்டராக இருக்க வேண்டும் என்பதை வீரு பாஜி, நீங்கள்தான் எனக்கு கற்றுக்கொடுத்தீர்கள். நீங்கள் எப்போதுமே எனக்கு இன்ஸ்பிரேஷன்’ எனப் பதிவிட்டுள்ளார்.