Published:Updated:

`உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி நான்காவது வீரராகக் களமிறங்கலாம்!’ - கவாஸ்கர் சொல்லும் லாஜிக்

`உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி நான்காவது வீரராகக் களமிறங்கலாம்!’ - கவாஸ்கர் சொல்லும் லாஜிக்
`உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி நான்காவது வீரராகக் களமிறங்கலாம்!’ - கவாஸ்கர் சொல்லும் லாஜிக்

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நான்காவது வீரராகக் களமிறக்கலாம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். 

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வரும் மே மாதம் தொடங்க இருக்கிறது. இதற்காக கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன. உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு வீரர்கள் தேர்வு உள்ளிட்டவற்றில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. 
இதுகுறித்து க்ரிக்பஸ் இணையதளத்துக்குப் பேட்டியளித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, `இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை, அவர்களை வேறு இடங்களில் களமிறக்கவும் செய்யலாம். உதாரணமாக வேறு ஒருவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கி விட்டு, அவரை நான்காவது வீரராகக் களமிறக்கலாம். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாம் முடிவெடுக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம். ராயுடு அல்லது வேறு யாராவது மூன்றாவது வீரராக களமிறங்கும் சூழலில், விராட் கோலியை நான்காவது வீரராகக் களமிறக்கலாம். இதன்மூலம், பேட்டிங் ஆர்டர் வலுவாகும்’’ என்று கூறியிருந்தார். 

இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆஜ்தக் தொலைக்காட்சியில் பேசிய கவாஸ்கர், ``அணியின் நலன் கருதி பேட்டிங் ஆர்டரை மாற்றுவதில் தவறில்லை. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் நடந்த சம்பவங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவை, பாகிஸ்தானின் முகமது அமீர் விரைவில் வெளியேற்றினார். விராட் கோலி களமிறங்கியபோது, பந்தின் ஸ்விங் குறையவில்லை. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 300 ரன்களுக்கு மேல் குவித்திருந்தநிலையில், அது அந்த அணி வீரர்களுக்கு நம்பிக்கையை அளித்திருந்தது.

அதுபோன்ற சூழ்நிலைகளில், விராட் கோலி போன்ற முக்கியமான வீரர்களைப் பாதுகாப்பாகக் களமிறக்குவது அவசியம். அவரை நான்காவது வீரராகக் களமிறக்கலாம். நான்காவது வீரர் களமிறங்கும்போது, பந்து ஸ்விங் ஆவது குறைந்திருக்கும். இதுபோன்ற முடிவுகள் அணிக்கு நன்மை பயக்கும். வேகப்பந்து வீச்சு ஸ்விங் ஆகும் சூழ்நிலைகளில் விராட் கோலியை, நான்காவது வீரராகக் களமிறக்கும் முடிவை இந்திய அணி எடுக்கலாம்’’ என்று கவாஸ்கர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வரும் விராட் கோலி, 39 சதங்களை ஒருநாள் போட்டிகளில் பதிவு செய்திருக்கிறார். அவற்றில் 32 சதங்கள், மூன்றாவது வீரராகக் களமிறங்கி அவர் அடித்தவை. அதேநேரம், நான்காவது வீரராகக் களமிறங்கி ஒருநாள் போட்டிகளில் 7 சதங்கள் உள்பட 1929 ரன்கள் சேர்த்திருக்கிறார் கோலி.