Published:Updated:

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

ன்னும் 3 மாதங்களில், இங்கிலாந்து கலர்ஃபுல் ஆகிவிடும். உலகக் கோப்பை என்ற மாபெரும் திருவிழா, மொத்த கிரிக்கெட்டையும் ஆட்கொண்டுவிடும். சிக்ஸர், பௌண்டரி, ரன்கள், விக்கெட்டுகள் என ஒவ்வொன்றுமே கொண்டாட்டமாகப் போகிறது. கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் கேமாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற வாதம் ஏற்கவேண்டியதுதான். 300 ரன்கள் என்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. இருந்தாலும், சில பௌலர்கள் இன்னும் போட்டியின் முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மேட்ச் வின்னர்களாக வலம் வருகிறார்கள். அவர்களுள் இந்த உலகக் கோப்பையில் நாம் கவனிக்கவேண்டியவர்கள் டாப் 5 பௌலர்கள்.

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

* ஜஸ்ப்ரீத் பும்ரா

‘வித்யாசமான பௌலர்’ என்று அடையாளம் காட்டப்பட்டவர், இன்று உலகின் நம்பர் 1 பௌலர்!  எந்த ஃபார்மேட்டாக இருந்தாலும் சரி, எப்படியான ஆடுகளமாக இருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி... மின்னல் வேகம், மிரட்டல் யார்க்கர், துல்லிய பௌன்சர் என பேட்ஸ்மேன்களை கதறவிட்டுக்கொண்டிருக்கிறார் பும்ரா. முதல் ஸ்பெல்லில் புவனேஷ்வர் குமாரும் இவரும் ஒருவருக்கொருவர் அற்புதமாக ‘காம்ப்ளிமென்ட்’ செய்துகொள்வது, எதிரணி ஓப்பனர்களை திக்குமுக்காடச் செய்கிறது. ஆரம்ப ஓவர்களில் கொஞ்சம் அமைதி காட்டுபவர், டெத் ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்.

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்லாமல், எக்கானமி 6 என்பதே சாதாரணமாகிப் போன இந்தக் காலகட்டத்திலும், மிகச் சிக்கனமாகப் பந்துவீசுகிறார். மூன்றாவது உலகக் கோப்பை வெல்வதற்கு, இந்திய அணியின் மிகமுக்கிய ஆயுதம் பும்ரா. கடந்த 2 ஆண்டுகளில் இவர் காட்டியிருக்கும் முதிர்ச்சி அசாத்தியம். ஆஸ்திரேலிய மண்ணில், இவர் ஆடிய ஆட்டம், உலகக் கோப்பைக்கான ட்ரெய்லர்!

* டிரென்ட் போல்ட்

2015 உலகக் கோப்பையில், ஒருபுறம் மெக்கல்லம் எதிரணி பௌலர்களைப் பந்தாட, மறுபுறம் பேட்ஸ்மேன்களை வேட்டையாடிக்கொண்டிருந்தார் போல்ட். 22 விக்கெட்டுகள். நியூசிலாந்து கோப்பை வென்றிருந்தால், இவர்தான் தொடர் நாயகன். இந்த முறை, அதே போன்றதொரு பெர்ஃபாமன்ஸை இங்கிலாந்திலும் இவரிடம் எதிர்பார்க்கலாம். முன்பு இருந்த வேகம் இப்போது இல்லையென்றாலும், இன்னும் பந்தை லேட் ஸ்விங் ஆகச் செய்வதில் போல்ட் கில்லாடிதான். தன் அசத்தல் ஸ்விங்கால் ஒரே ஸ்பெல்லில் எதிரணியை சுருட்டி வீசுவார்.

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

அதற்கு உதாரணம், டிசம்பர் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி. 15 பந்துகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டியிருந்தார் போல்ட். அதுவும், ஸ்விங்கின் சொர்க்க பூமியான இங்கிலாந்து ஆடுகளங்களில்... ‘போல்ட் ஜாக்கிரதை' என போர்டே வைக்கலாம். குறிப்பாக, ஆரம்பத்திலேயே அதிரடி காட்ட நினைக்கும் தொடக்க ஜோடிகள் இவரிடம் உஷாராக இருக்கவேண்டும். முதல் ஸ்பெல்லில் ரோஹித் போல் ஆடாமல், தவான் போல் ஆடினால், பேட்ஸ்மேன் காலி!

* ரஷீத் கான்

இங்கிலாந்து ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் போகட்டும், ஆனால், ரஷீத் கான் பந்துவீசுவதைப் பார்ப்பது நிச்சயம் அற்புதமான அனுபவம்தான். ஒரு 20 வயது வீரனைப் பார்த்து உலகின் முன்னணி வீரர்கள் மிரள்வதைப் பார்ப்பதே அலாதி இன்பம். அதுவும் உலகக் கோப்பை என்ற மிகப்பெரிய அரங்கில், இந்த இளம் வீரன், தன் கத்துக்குட்டி அணியை எங்கே அழைத்துச் செல்கிறான் என்பதைக் கூர்ந்து கவனித்தே ஆகவேண்டும்.

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ரஷீத்தின் செயல்பாடுதான் புள்ளிப் பட்டியலில் அந்த அணி எங்கே இருக்கப்போகிறது என்பதை முடிவு செய்யப்போகிறது. ஆப்கானிஸ்தான் என்ற தேசத்தின் கிரிக்கெட் பயணம், பெரும் திருப்பத்தைச் சந்திக்கலாம். அது இந்த இளைஞனின் விரல்கள்தான் ஏற்படுத்தப்போகின்றன. ஒருநாள் போட்டி வரலாற்றில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை வேறு படைத்திருக்கிறார். நிச்சயம், இந்தத் தொடரில் இரண்டு ஆட்டநாயகன் விருதுகளையாவது வென்றுவிடுவார்.

* பேட் கம்மின்ஸ்

13 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியர் ஒருவர், டெஸ்ட் பௌலர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் அமர்ந்திருக்கிறார். பேட் கம்மின்ஸ் - நம்பிக்கையிழந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆக்சிஜனாய் மாறியிருக்கிறார். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கம்மின்ஸ் காட்டும் கன்சிஸ்டென்ஸி ஆச்சர்யமாக இருக்கிறது.

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

புஜாராவின் மகத்தான அரணை எளிதாக உடைத்தவருக்கு, ஒருநாள் போட்டிகளில் விக்கெட் எடுப்பது கடினமாக இருக்கப்போவதில்லை. இன்னும் ஒருநாள் போட்டிகளில் 33.6 என்ற மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். இப்போதிருக்கும் ஃபார்மில், குறைந்தபட்சம் 15-20 விக்கெட்டுகள் நிச்சயம் வீழ்த்தக்கூடும். இவரை ஃபிட்டாக வைத்திருப்பது மட்டும்தான் ஆஸ்திரேலிய அணி செய்யவேண்டிய ஒரே விஷயம். மிட்செல் ஸ்டார்க், தன் ஆயுதங்களை முற்றிலுமாக இழந்துவிட்ட நிலையில், கடந்த உலகக் கோப்பையில் அவர் செய்ததை, இந்த முறை கம்மின்ஸ் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

* மொயீன் அலி

ஆம், பௌலர்கள் பட்டியலில் மொயீன் அலி! இந்தத் தொடரின் எதிர்பாராத ஆச்சர்யமாக இருக்கப்போவது மொயீன் அலிதான்! இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது ஆண்டர்சன், பிராட் ஆகியோர் மீது இந்திய பேட்ஸ்மேன்கள் கவனம் செலுத்த, சைலன்ட்டாக வந்து அனைவரையும் காலி செய்தார் மொயீன். அவர் கொடுக்கும் அதிர்ச்சிகள் நிச்சயம் இந்த உலகக் கோப்பையிலும் தொடரும்.

உலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்!

பெரிதாக வேரியேஷன்கள் இல்லையென்றாலும், தன் துல்லியமான பௌலிங்கால் விக்கெட் வேட்டை நடத்துகிறார் மொயீன். அனைத்துமே ஆஃப் கட்டர்கள்தான். ஆனால், பந்தைச் சரியான ஏரியாவில் பிட்ச் செய்வதில்தான் டிஸ்டிங்ஷன் அடிக்கிறார் இவர். அணு அளவு பலவீனத்தை பேட்ஸ்மேன்கள் வெளிக்காட்டிவிட்டாலும், அதை அற்புதமாகப் பயன்படுத்திவிடுகிறார். கடந்த ஆண்டு, 24 போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார் ரெகுலர் ஸ்பின்னர் அதில் ரஷீத். ஆனால், எதிர்பாராததை எதிர்பார்ப்பதுதானே உலகக் கோப்பையின் சிறப்பு. அப்படி நாம் எதிர்பார்க்கக்கூடிய மிகப்பெரிய ஆச்சர்யமாக இருப்பார் மொயீன்!

- மு.பிரதீப் கிருஷ்ணா