Published:Updated:

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

``பத்து நிமிஷம் பொறுங்க. சென்னை முன்னாள் மேயர் மா.சு, மினி மாரத்தான்ல சாதனை பண்ணியிருக்காராம். அந்த ஃபங்ஷன்ல பேசணுமாம். அதுக்காக, மாரத்தான் பத்தி  சில விவரங்கள் கேட்டிருக்கார் ஒரு நியூஸ் சேனல் எடிட்டர். அவருக்கு பாயின்ட்ஸ் மட்டும் அனுப்பிட்டு வந்துறேன்’’ என லேப்டாப்பில் மூழ்கினார். பத்து நிமிடம் கழிந்தது. `ஸாரி... இனி எவ்ளோ நேரம் வேணாலும் பேசலாம். என்ன வேணும்னாலும் கேளுங்க’ என பேட்டிக்குத் தயாரானார்.

டி.என்.ரகு... ஸ்போர்ட்ஸ் நிருபர்கள் வட்டாரத்தில் DC ரகு (Deccan Chronical). இப்போது கமென்டேட்டர் ரகு. சென்னை நேரு ஸ்டேடியத்துக்குள் ரகு நுழைகிறார் என்றால், அசோசியேஷன் ஊழல் பெருச்சாளிகள் `இவன் வந்துட்டானா’ என பம்முவார்கள். `மிஸ்டர் முருகன் நீங்கள் பதவியை விட்டு விலகும் நேரம் இது!’ என தடாலடியாக தலைப்பிட்டு, அசோஸியேஷன்களில் நடக்கும் தகிடுதத்தங்களை வெட்டவெளிச்சமாக்கியவர். பெரியமேடு, வியாசர்பாடி, புளியந்தோப்பு ஏரியாவில் கால்பந்தையே தொழிலாக பாவித்த பல வீரர்களின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சியவர்.

 ‘‘கிரிக்கெட்டைப் பத்தி எழுத எவ்வளவோ பேர் இருக்காங்க. இவங்களைப் பத்தி நம்மதானே எழுதணும்’’ என, கேட்பாரற்றுக் கிடந்த சீனியர் டிவிஷன் தொடரை, உலகக் கோப்பைக்கு நிகராக கவர் செய்தவர். உள்ளூர் வீரர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கச் செய்தவர். 15 ஆண்டுகள் ஸ்போர்ட்ஸ் நிருபராக இருந்தவர் இப்போது, `கார்னர் கிக்குக்கு ஆஃப் சைட் இல்லை’ என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வர்ணனையாளராக பிரித்து மேய்கிறார். நீண்ட நேரம் அவருடன் பேசியதன் சுருக்கம் இது.

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

‘‘ஸ்போர்ட்ஸ் நிருபரானது எப்படி?’’

‘‘சின்ன வயதில் இருந்தே ஸ்போர்ட்ஸ் நியூஸ் படிப்பதில் பயங்கர வெறி. நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு என் சொந்த ஊர். எங்கள் ஊருக்கு ஒரு பத்து `The Hindu’ பேப்பர் வரும். அதை பஸ்ஸில் இருந்து நான்தான் வாங்குவேன். ஸ்கோர்டு போர்டு பார்த்து, புரிந்ததை படித்துவிட்டு மீண்டும் அதைக் கட்டி வைத்துவிடுவேன். நன்றாகப் படித்ததால், மங்களூருவில் உள்ள கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்க வாய்ப்பு வந்தது.  ஆனால், ஓராண்டிலேயே இன்ஜினீயரிங்கில் சுத்தமாக ஆர்வம் இல்லை எனத் தெரிந்தது. படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டேன். இதற்கிடையே, போஸ்ட் மாஸ்டர் வேலை கிடைத்தது. ஒரு கட்டத்தில் `என்னடா வேலை இது’ என வெறுப்பு வந்துவிட்டது. அந்த சமயத்தில்தான் சென்னையில் `ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்’ புதிதாகத் தொடங்கி இருந்தார்கள். அடம்பிடித்து அங்கு சேர்ந்தேன். விளையாட்டு, அரசியல் இரண்டையும் பிரதான பாடமாகத் தேர்வு செய்திருந்தேன். கோர்ஸ் முடிக்கும் முன்பே, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஹைதராபாதில் உள்ள `டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வேலை கிடைத்தது.  அரசு வேலையா, மனதுக்குப் பிடித்த வேலையா என குழப்பமாக இருந்தது. போஸ்ட் மாஸ்ட்டர் வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு, ஸ்போர்ட்ஸ்  நிருபராகி விட்டேன். ஹைதராபாதில் மூன்று ஆண்டுகள். சென்னை `டெக்கான் கிரானிக்கிள்’ பத்திரிகையில் 13 ஆண்டுகள். அவ்வளவுதான்.’’

‘‘கிரிக்கெட்டை தொடாமலேயே நீங்கள் ஸ்போர்ட்ஸ் நிருபராக ஜொலித்தது எப்படி?!’’

‘‘சின்ன வயதில் எனக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது. ஆனால், நிருபரான பின் கிரிக்கெட் மீது ஆர்வம் போய் விட்டது. இத்தனை ஆண்டுகளில் மூன்றே மூன்று கிரிக்கெட் ஸ்டோரி மட்டுமே எழுதியிருக்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்குள் நுழைந்ததே இல்லை. கிரிக்கெட்டை தவிர்த்தும் எழுத இங்கு பல விளையாட்டுகள் உள்ளன. கிரிக்கெட்டை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். சீனியர் டிவிஷன், வாலிபால், தடகளம் போன்ற விளையாட்டுகளை எழுதத்தான்  ஆளில்லை.  தவிர, கால்பந்து, வாலிபால் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம்.’’

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

‘‘ஒரு ஸ்போர்ட்ஸ் நிருபராக நீங்கள் பெருமையாக உணர்ந்த தருணம்?’’

‘‘DC-யில் இருந்தபோது, கோழிக்கோடுவில் உள்ள ஒரு கால்பந்து அகாடமியைப் பற்றி எழுதியிருந்தேன். அதை இந்தியன் ஃபுட்பால். காம் மறுபிரசுரம் செய்திருந்தது. அதைப் படித்த பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர், என்னை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டார். `நீங்கள் எழுதிய கட்டுரையில் பெல்ஜியம் பயிற்சியாளரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் யார் தெரியுமா? இங்கு அவர், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சட்டத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி’ எனச் சொன்னார். பகீரென இருந்தது. மீண்டும் கேரளா சென்று, போலீஸார் உதவியுடன் அவரைப் பிடித்து விசாரித்தோம். பெல்ஜியம்காரர் சொன்னது உண்மை எனத் தெரியவந்தது. நல்லவேளையாக, அந்த அகாடமியில் இருந்த சிறுவர்களிடம் அவர் தன் வேலையைக் காட்டவில்லை. அதற்கு முன்பாக அதைத் தடுத்து விட்டோம். இது நிறைவான விஷயம்.

அடுத்து, 2008-ல் தினேஷ் கார்த்திக்கு தமிழக அரசு சார்பில் பரிசு கொடுக்கப்பட்டது. ஆனால், 2006 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு எதுவுமே கொடுக்கவில்லை. இதை எழுதியிருந்தேன். அதற்குப் பிறகே சரத் கமலுக்கு சன்மானம் கிடைத்தது. அடுத்து, சீனியர் டிவிஷன் போட்டிகளை ஆத்மார்த்தமாக கவர் செய்தது என சில விஷயங்களைச் சொல்லலாம்.’’

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

‘‘தென் ஆப்ரிக்கா (2010), பிரேசில் (2014), ரஷ்யா (2018) என மூன்று FIFA  உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் பார்த்த அனுபவம்…’’

‘‘இந்துஸ்தான் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு `க்விஸ்’ போட்டி நடத்தினார்கள். அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் (2008) செல்ல விமான டிக்கெட் இலவசம் என அறிவித்தார்கள். அதில் நண்பர் ஒருவருடன் இணைந்து முதல் பரிசு வென்றோம். அப்படித்தான் ஒலிம்பிக்கை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஃபைனலில் உசைன் போல்ட் முக்கால்வாசி தூரத்திலேயே கைகளை அகல விரித்து கொண்டாடியதை நேரில் பார்த்ததெல்லாம் வேற லெவல் அனுபவம்.

ஃபுட்பால் எனக்கு உயிர். பொதுவாக உலகக் கோப்பையைப் பற்றி இப்படிச் சொல்வார்கள்... World cup is less about football, more about people! எனக்கு ஸ்போர்ட்ஸ் தவிர்த்து வரலாறு மீதும் ஆர்வம் உண்டு என்பதால், உலகக் கோப்பையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கொஞ்சம் பணம் சேர்த்து தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையை நேரில் பார்த்துவிட்டேன். அதன்பின், பிரேசில். கால்பந்தின் புண்ணிய பூமி. விட முடியுமா? இரண்டு உலகக் கோப்பை பார்த்துவிட்டோம் என திருப்தி அடையமுடியவில்லை. ரஷ்யாவுக்கும் டிரிப் அடித்துவிட்டேன். அடுத்த உலகக் கோப்பை கத்தாரில். அதற்கு அடுத்து அமெரிக்காவில்… காலம் அனுமதித்தால் அங்கும் செல்வேன். ஐந்து விதமான கண்டங்களில் நடக்கும் உலகக் கோப்பையையும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

ஒவ்வொரு உலகக் கோப்பையிலும்  எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனை எத்தனை கதைகள், அனுபவங்கள். தென்னாப்பிரிக்காவில் ரக்பிக்கும் – கால்பந்துக்குமான இடைவெளி, இனவெறி, நெல்சல் மண்டேலா ஸ்டேடியத்துக்குள் வந்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு என பல நினைவுகள். பிரேசில் உலகக் கோப்பையில் ஜேம்ஸ் ராட்ரிகஸ் அடித்த கோலைப் பார்த்தது, ஃபைனலில் பிரேசில் ரசிகர்கள் ஜெர்மனிக்கு ஆதரவு தந்தது  என பல விஷயங்கள் பிரமிக்க வைத்தன. ரஷ்யாவில் எல்லாமே பக்கா. மூன்று உலகக் கோப்பையிலும் பார்த்த மனிதர்களைப் பற்றி மட்டுமே ஒரு புத்தகம் வெளியிடலாம். அவ்வளவு கதைகள் இருக்கின்றன.’’

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

‘‘நிருபர் டு கமென்டேட்டர்... ஏன் இந்த திடீர் முடிவு?’’

‘‘கடந்த 6 மாதங்களாகவே பணியில் ஒரு தொய்வு இருந்தது. அந்த சமயத்தில்தான் ராமன் விஜயன் `ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கமென்ட்ரிக்கு உங்க பேரை ரெக்கமெண்ட் பண்ணிருக்கேன். ஆடிஷனுக்கு ஒத்துழைப்பு கொடுங்க’னு சொன்னார். கடந்த சீசனில் பெங்களூரு - சென்னை மோதிய ஃபைனல் பற்றி கமென்ட்ரி செய்து அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். அவர்களும் ஓகே சொல்லிவிட்டார்கள். `இந்த ஐ.எஸ்.எல் சீசனில் மினிமம் 25 போட்டிகளுக்கு தமிழில் வர்ணனை செய்யமுடியுமா?’ என கேட்டார்கள். அதுதான் முடிவெடுக்க வேண்டிய நேரம்.

`எத்தனைவாட்டிடா ரிஸ்க் எடுப்ப... இன்ஜினீயரிங் வேண்டாம்னு சொல்லிட்ட, கவர்மென்ட் வேலையை விட்டுட்ட, இப்ப இந்த வேலையையும் விடப் போறியா..? பொண்ணு இருக்கா... அவளைப் படிக்க வைக்கணும்’னு சொல்லி என் அம்மா கவலைப்பட்டாங்க. ஆனால், நான் யோசித்தேன். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் 25 மேட்ச் தருவதாகச் சொன்னார்கள். அதற்கு அடுத்து என்ன வரும், எது வரும் எனத் தெரியாது. இருந்தாலும் சவாலாக எடுத்துக்கொள்வோம் என நினைத்து, நிருபர் வேலையைவிட்டு, வர்ணனையாளராக மாறிவிட்டேன். இன்று வரை நான் எடுத்த எந்த முடிவுக்காகவும் ஒரு சதவிகிதம் கூட வருத்தமில்லை.’’

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

‘‘வர்ணனையில் ஆரம்ப கட்ட தடுமாற்றம் ஏதாவது?’’

‘‘ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. சுத்தத் தமிழ்ல பேசிட்டிருந்தேன். `பந்தைக் கடத்திச் செல்கிறார். கோல் அடித்துவிட்டார்’னு இழுத்து இழுத்து பேசிட்டிருந்தேன். நண்பர்கள் கவனித்து சொன்ன விஷயங்களை வைத்து திருத்திக் கொண்டேன். குறிப்பாக, என் மகள்தான் என் முதல் விமர்சகர். முதல் மேட்ச் முடிஞ்சதும்... `என்னப்பா ராகம் பாடிட்டிருக்க. நார்மலா பேசுப்பா. சுத்தத் தமிழ்ல பேசாதப்பா... கடுப்பாகுது’ என ஒவ்வொருமுறையும் என்னைத் திருத்தினாள். நண்பர்களும்,  `யெல்லோ கார்டுனே சொல்லலாமே. கலோக்கியலா பேசுனாதான் நல்லா இருக்கும்’ என்றார்கள். எல்லோருடைய ரசனையும் இப்படித்தான் இருக்கிறது. `உங்கள் நண்பர்களுடன் எப்படி ஃபுட்பாலைப் பற்றி பேசுவீர்களோ அப்படியே பேசுங்கள்’ என்றுதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும் சொல்கிறார்கள்.

 ஐ.எஸ்.எல்-லில் நன்றாக வர்ணனை செய்வதைப் பார்த்து `கேலோ இந்தியா’ தொடரிலும் வாய்ப்பு கொடுத்தார்கள். பொதுவாக, எல்லா போட்டிகளும் தெரிந்த நிபுணர்கள் குறைவுதானே. அதனால், `கேலோ இந்தியா’வில் கலக்கி விட்டோம்.’’

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

‘‘கமென்ட்ரியில் இருக்கும் பிரச்னைகள், சவால்கள் என்ன?’’

‘‘வாய்க்கு வந்ததை பேச முடியாது. அசோஸியேஷனை விமர்சிக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால், பத்திரிகையில் இருக்கும் சுதந்திரம் இதில் இருக்காது. அங்கு நினைத்ததை எழுதலாம். விமர்சிக்கலாம். குறிப்பாக, விமர்சித்து எழுதினால்தான் படிப்பார்கள். ஆனால், அதை இங்கு பேசமுடியாது. `டிவி ஆடியன்ஸ் வேற, பத்திரிகை ஆடியன்ஸ் வேற என்பதால், நீங்கள் அசோஸியேஷனை விமர்சிப்பதை எல்லாம் ரசிகர்கள் விரும்புவார்களா எனத் தெரியாது’ என சேனலில் சொல்லிவிட்டார்கள். இதுதான் நான் வர்ணனையில் எதிர்கொள்கிற சவால். முழுக்க முழுக்க இது எனக்கு புது மீடியம். பாஷை, என் சாதி, குலம், கோத்திரம் எதுவும் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

இதுதவிர, போரடிக்காமல் பேசுவது, புதிதாகப் பேசுவது எனப் பேசுவதே கூட ஒரு சிரமமான விஷயம்தான். இதையெல்லாம் பழகி வருகிறேன். அவர்கள் `சூப்பர் சார்’ என புகழ்ந்தாலும், எனக்கு நானே சுய ஆய்வு செய்துவருகிறேன். நலம் விரும்பிகள் சொல்ற விஷயத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

`கேலோ இந்தியா’ தொடரில் வர்ணனை மட்டுமல்லாது, 34 லைவ் ஷோ பண்ணியதும் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. கேமராவைப் பார்க்காமல் பேசுவது, ஏற்ற இறக்கத்துடன் பேசுவது, மாடுலேஷன் கூட்டி குறைப்பது என பல விஷயங்களில் இன்னும் முன்னேற்றம் தேவை எனப் புரிந்தது. இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால், புதுவிதமான மீடியம். பல ஆயிரம் ரசிகர்களைச் சென்றடைய முடியும் என்பது ப்ளஸ். மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது ஐ.எஸ்.எல் தமிழ் வர்ணனை நன்றாக இருப்பதாக கமென்ட் வந்தது. நானும் விஷ்ணுவும் இணைந்து வர்ணனை செய்வது பலருக்குப் பிடித்திருக்கிறது. இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனை மீது விமர்சனம் இருந்தாலும், கிரிக்கெட் என்றால் ரீச் அதிகம் இருக்கும். கால்பந்தில் அதிக ரசிகர்களைச் சென்றடைய முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?’’

‘‘நிச்சயம் கிடையாது. பிடித்ததைச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு. `கிரிக்கெட்டை எழுதினால் ஸ்டார் ஆகலாம்’  என ரிப்போர்ட்டராக இருந்தபோதே பலரும் சொல்வார்கள்... ஆனால், ஸ்டார் ஆக வேண்டும் என்பதைவிட மனதுக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். கிரிக்கெட்டை எழுதாததால், பேசாததால் வருமான ரீதியாக கொஞ்சம் இழப்புதான். கமென்ட்ரியில் கூட கிரிக்கெட் பேசுவீர்களா எனக் கேட்டார்கள். முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன்.

‘‘வர்ணனை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது ரூல்புக் இருக்கிறதா?’’

‘‘அப்படி கட்டுப்பாடு எதுவும் இல்லை. கமென்ட்ரியில் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஒருவரின் ஸ்டைல் மற்றவருக்கு பொருந்தாது. ரொனால்டோ கோல் அடித்தபோது கத்தி பிரபலமானாரே ஒரு மலையாள கமென்டேட்டர்… ஷைஜு. மும்பையில் அவர் ஸ்டார். அவர் பேசுவது எல்லாமே சரியா என்றால், இல்லை. அவர் கோல்லெஸ் டிரா மேட்ச்சைக் கூட வெறித்தனமாக கமென்ட்ரி செய்வார். `ஏன் இப்படி’ எனக் கேட்டால், `ஆமா... மொக்கை மேட்ச்தான். என்ன செய்ய சொல்ற, தூங்க சொல்றியா... நானே இன்ட்ரஸ்ட்டா இல்லைனா, பார்க்கிறவன் எப்படி இன்ட்ரஸ்டிங்கா பார்ப்பான்’ என பதில் சொல்வார். இதனால் ஒவ்வொரு வர்ணனையாளரிடமும்,  `யாரையும் காப்பி அடிக்காதே. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் பேசுங்கள்’  என்றுதான் ப்ரொடியூசர் சொல்கிறார். பல விஷயங்களை புதிதாக முயற்சிக்க சொல்கிறார்கள். `ஒருநாள் ஒரு மேட்டர்’ என்ற பெயரில் தினமும், ஒரு புதுப்புது விதிமுறையைச் சொல்கிறேன்.’’

“மதம், செக்ஸ், அரசியல் பற்றிப் பேசக்கூடாது!”

‘‘போட்டிக்கு முன் தயாராவது எப்படி?’’

ஒன்றரை மணி நேரம் மேட்ச் எனில், நீங்கள் அதற்கு முன் கூட்டியே தயாராக வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட வீரர்கள், யாருக்கு காயம், யாருக்கு பிறந்தநாள், யாருடைய லேண்ட் மார்க், 100-வது கோல், 100-வது மேட்ச் இதுபோன்ற புள்ளி விவரங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இரண்டு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் இருக்கின்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி எந்த இடத்துக்குப்போகும் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும்.

மேட்ச் தொடங்குவதற்கு முன் மலை போல் புள்ளி விவரங்கள் கொடுப்பார்கள். அதில் எது தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே நம்பராக சொல்லி வெறுப்பேற்றக் கூடாது. 24-வது கோல்... 32-வது நிமிஷம் என மந்திரம் போல ஓதக் கூடாது.  ஆனால், முக்கியமான நம்பரை மிஸ் செய்யவும் கூடாது. போட்டியின்போது சில சர்வதேச நிகழ்வுகளையும் சொல்ல வேண்டும்.  அதேநேரம், போட்டிக்குத் தேவையில்லாத விஷயங்களைப் பேசினால்... `போதும் போதும்... மேட்ச்சுக்கு வாங்க’ என ப்ரொடியூசர் அலெர்ட் செய்துவிடுவார். 
 
 இதில் ப்ரொடியூசர் பங்கு ரொம்ப முக்கியம். அவர்கள்தான்... `போன மேட்ச்சைப் பத்தி பேசுங்க. அடுத்த மேட்ச்சைப் பத்தி அப்டேட் பண்ணுங்க’ என அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆரம்பத்தில், அவர் காதுக்குள்ளேயே நசநசவென பேசுவது ஒரு மாதிரி இருந்தது. பின்னர் அது பழகி விட்டது. அவர்கள்தான், அரசியல் ரீதியாக எதாவது பேசினால்... `சார், சார்... நோ நோ... அதெல்லாம் வேண்டாம். கம்பேக் டு தி மேட்ச்’ என உஷார்படுத்துவார்.

 கமென்ட்ரியில் சில வார்த்தைகளுக்கு சென்சார் உண்டு. காண்டு என சொல்லக்கூடாது. ஹிந்தியில் அது கெட்ட வார்த்தை. அதுபோல, மதம், செக்ஸ், அரசியல் சார்ந்து நேரடியாகப் பேசக் கூடாது. டெல்லி நேரு ஸ்டேடியத்தில் கூட்டமே வராது. ஆனால், அம்பேத்ர் ஸ்டேடியத்தில் கூட்டம் பிச்சிக்கும். காரணம், ஓல்டு சிட்டியில் முஸ்லிம்கள் அவ்வளவு பேர் இருந்தனர்.  முஸ்லிம்கள் இருந்த இடத்தில் எல்லாம் கால்பந்து கோலோச்சியது என்பதே உண்மை.  அதேபோலத்தான் ஹாக்கி. அவர்கள் ஹாக்கியை கைவிட்டதுதான் இந்திய அணியின் இன்றைய பின்னடைவுக்கு காரணம். தூத்தூர், மிஸோரோம் போன்ற இடங்களில் சில என்.ஜி.ஓ-க்களின் முயற்சியால்தான் கால்பந்து வளர்கிறது. இதையெல்லாம் வர்ணனையில் சொல்ல முடியாது. ஆனால், பத்திரிகையில் எழுதலாம்.

கூர்கா ரெஜிமென்ட் என்ற கிளப் இருந்தது. பூட்டியா அந்த கிளப்புக்காக விளையாடியவர்தான். ஆனால், அதைச் சொல்லும்போது கூட யோசிக்க வேண்டும். அதுபோல, சென்சிட்டிவான விஷயங்களில் பார்த்து பேச வேண்டும். சில சமயம் பேசாமல் இருக்க வேண்டும். மேட்ச்சின் தன்மைக்கேற்ப அமைதியாக இருப்பதும் நல்லது. டிவியில் ரசிகர்கள் பார்க்கும் விஷயத்தை அப்படியே சொல்வதை விட, சந்தோஷ் டிராபி, சர்வதேசப் போட்டிகள், தமிழ்நாட்டு வீரர்களின் கதைகளைப் பற்றிச் சொல்லும்போது அதை ரசிக்கிறார்கள்.

வர்ணனையின் தாரக மந்திரம் பற்றி, ஜான் ஹெல்ம் இப்படிச் சொல்வார்…

Entertain… Inform… Enjoy Yourself… அந்த கடைசி வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

-  தா.ரமேஷ்