Published:Updated:

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்
பிரீமியம் ஸ்டோரி
News
புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

நாடாளுமன்றத் தேர்தலோடு போட்டிபோட்டு, இம்மாதம் களமிறங்குகிறது ஐ.பி.எல். தென்னாப்பிரிக்கா, துபாய் எல்லாம் வேண்டாமென முடிவெடுத்து இம்முறை இந்தியாவிலேயே நடக்கிறது உலகின் டாப் டி20 தொடர். இந்த முடிவுக்குப் பின்னால் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் பெரிய அழுத்தம் இருக்கிறது. சில அணிகள், கடந்த சீசனில் இருந்ததுபோலவே இப்போதும் மாற்றம் இல்லாமல் இருக்கின்றன. ஒரு சில அணிகள் எக்கச்சக்க மாற்றங்களை செய்திருக்கின்றன. ஒரு அணி பெயரையே மாற்றியிருக்கிறது. இந்த 12-வது சீசனில் மோதும் அணிகள் எப்படி இருக்கின்றன. அவர்களின் பிளேயிங் லெவன் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அவர்கள் பலம், பலவீனம் என்ன?

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த ஆண்டு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. அணியின் சராசரி வயது மட்டும் ஒன்று கூடியிருக்கிறது. மோஹித் ஷர்மா அணியில் இணைந்திருக்கிறார். மற்றபடி, அதே அனுபவ, மிரட்டல் கூட்டணி கோப்பையைத் தக்கவைக்க களமிறங்கப்போகிறது.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, மிட்சல் சேன்ட்னர், ஷேன் வாட்சன் என நிறைய ஆல்ரவுண்டர்கள் இருப்பதால், பிளேயிங் லெவன் தேர்வு செய்வதற்கு சென்னைக்குப் பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. அதுதான் சென்னை அணியின் மிகப்பெரிய பலம். போக, கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னா என்று நிறைய பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதால், எல்லா ஏரியாவிலும் அணியின் டெப்த் சூப்பராக இருக்கிறது.

தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெஸ்ஸி அசத்தல் ஃபார்மில் இருக்கிறார். எந்த பொசிஷனில் களமிறங்கினாலும் ஆடக்கூடிய ஒருவர் மிரட்டல் ஃபார்மில் இருப்பது, அணியின் பேலன்ஸை சரிசெய்ய உதவும். போதாக்குறைக்கு கேப்டன் தோனியும் மிரட்டலான வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு திரும்பியிருக்கிறார். அதே ஃபார்மை அவர் தொடர்ந்தால் ஹெலிகாப்டர் மயம்தான்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

என்னதான் எல்லோரும் நட்சத்திர வீரர்களாக இருந்தாலும், அவர்களின் ஃபார்ம் கொஞ்சம் வருத்தமளிப்பதாகவே இருக்கிறது. ஷேப் வாட்சன், டுவைன் பிராவோ, டேவிட் வில்லி மூவரும் பிக் பேஷ் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிக் பேஷில் பட்டையைக் கிளப்பிய வீரர்களே, இங்கு தடுமாறியதாகத்தான் ஐ.பி.எல் வரலாறு இருக்கிறது (உதாரணம் : டார்சி ஷார்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர்).  பாகிஸ்தான் சூப்பர் லீகில் வாட்சன் ஃபார்முக்கு வந்துவிட்டதுபோல் தெரிகிறது. இருந்தாலும், சீனியர்கள் என்று யோசிக்காமல், பிளேயிங் லெவன் தேர்வில் தோனி சரியாகச் செயல்படுவது அவசியம்.

சீனியர் வீரர்களை வெளியேற்றுவதில் தயக்கம் காட்டும் தோனி, இளம் இந்திய வீரர்களைப் பற்றி யோசிப்பதில்லை. முதல் ஓவர் சொதப்பிவிட்டால், அதற்கு மேல் தீபக் சஹாருக்கு ஓவர் தருவதில்லை. ஒரு போட்டியில் சொதப்பினால் ஷர்துல் தாக்கூர் நீக்கப்படுகிறார். அவருக்குப் பதில் இன்னொரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பரவாயில்லை. ஹர்பஜனும், கரண் ஷர்மாவும்தான் களம் காண்கிறார்கள். உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத, தங்களின் கொள்கையை இந்த சீசனிலாவது சி.எஸ்.கே மாற்றிக்கொள்ளும் என நம்புவோம்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

ஒருவேளை தென்னாப்பிரிக்க வீரர்கள் பாதியில் கிளம்பினால், அது அணியை பாதிக்கக்கூடும். டுப்ளெஸ்ஸி, லுங்கி எங்கிடி இருவரும் இல்லாமல் களமிறங்குவது சென்னைக்கு கொஞ்சம் பலவீனம்தான்.

டெல்லி கேபிடல்ஸ்

பெயரை மாற்றினால் தலையெழுத்து மாறும் என்ற நம்பிக்கையில் இந்த முறை களமிறங்குகிறது டெல்லி அணி. ஏலத்துக்கு முன்பாகவே ஷிகர் தவானை வாங்கி, தங்கள் பேட்டிங்கை பலப்படுத்தினர். தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என இவர்களின் டாப் ஆர்டர், இந்திய அணியின் டாப் ஆர்டர் போல் பலமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகவே அந்த அணி, இம்முறை பலமான அணியாகவேத் தெரிகிறது.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

கிறிஸ் மோரிஸ், காலின் இங்ரம், டிரென்ட் போல்ட், ககிசோ ரபாடா அடங்கிய வெளிநாட்டு கூட்டணி மிரட்டலாக இருக்கிறது. இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலை வாங்கியிருப்பது, அவர்களின் பௌலிங் ஆப்ஷனுக்குப் பலம் சேர்க்கிறது. இடது கை ஸ்பின்னர், ஆஃப் ஸ்பின்னர், லெக் ஸ்பின்னர், வலது கை வேகப்பந்துவீச்சாளர், இடது கை வேகப்பந்துவீச்சாளர் என சைனாமேன் தவிர்த்து, அத்தனை வெரைட்டியிலும் பௌலர்கள்  டெல்லி அணியில் இருக்கிறார்கள். அதுவும் தரமான பௌலர்களாக இருக்கிறார்கள்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க, தங்களின் இருப்பை நிலைநாட்டவேண்டியிருப்பதால் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் இருவர் மீதும் அதிக நெருக்கடி இருக்கும். குறிப்பாக ரிஷப் பன்ட். 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடிக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இந்த ஐ.பி.எல் செயல்பாடு, பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என்பதால், கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் பன்ட் பட்டாசாய் ஆடவேண்டும்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

‘‘இஷாந்த் ஷர்மாவின் அனுபவம் எங்களின் இளம் பௌலர்களுக்கு உதவும்’’ என்று ஏலத்தின்போது அணியின் உரிமையாளர்கள் சொன்னார்கள். நது சிங், அவேஷ் கான் போன்ற இளம் பந்துவீச்சாளர்கள், இந்த தொடர் மூலம் வெளிச்சத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். அமித் மிஷ்ரா, ஹனுமா விஹாரி, சந்தீப் லாமிசேன், காலின் முன்றோ போன்ற வீரர்களே இந்த அணியில் பேக் அப் தான். பிளேயிங் லெவன் அவ்வளவு பலமாக இருக்கப்போகிறது. இந்த முறையும் அதைப் பயன்படுத்தத் தவறினால் டெல்லி எப்போதும் கோப்பையை வெல்ல முடியாது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

போன சீசன் அணியாவது கொஞ்சம் சுமாராக இருந்தது. இந்த முறை கிங்ஸ் லெவன் அணியைப் பார்த்தால்... அய்யோ பாவம்! ஏற்கெனவே கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், முஜீப் உர் ரஹ்மான் என இரண்டு டாப் ஸ்பின்னர்கள் இருக்க, 8.4 கோடி ரூபாய் கொடுத்து வருண் சக்ரவத்தியை வாங்கியுள்ளனர். இப்படி ஸ்பின்னர்கள் ஒருபக்கம் என்றால், சாம் கரன், விலியான், முகமது ஷமி என இவர்கள் மூவருக்கும் 12.75 கோடி ரூபாய்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

சரி, எல்லாம் போக, உள்ளூர் வீரர்களிலாவது நான்கு பேட்ஸ்மேன் எடுப்பார்கள் எனப் பார்த்தால் ஹர்ப்ரீத் பிரார், ஆர்ஷ்தீப் நாத், தர்ஷன் நல்கண்டே என ‘பெயரளவில்’ ஆல்ரவுண்டர்களை எடுத்துள்ளனர். இந்தியாவின் முதல் தர, லிஸ்ட் ஏ போட்டிகளில் இவர்கள் சந்தித்துள்ளது மொத்தமே 87 பந்துகள்தான்! போன சீசனில் செய்ததுபோல், ஒரு விக்கெட் போனதும் அஷ்வின் பேட்டை தூக்கிக்கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

பஞ்சாப் அணியின் பௌலிங் யூனிட் மிகச் சிறப்பாக இருக்கிறது. டி20 ஸ்பெஷலிஸ்ட் ஆண்ட்ரூ டை, அவருக்குப் பக்கபலமாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வில்லியான், ஆர்/எம் அஷ்வின்கள், மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி, முஜீப், முகமது ஷமி, அன்கித் ராஜ்புத், சாம் கரண் என ஒரு பிளேயிங் லெவனையே நிரப்பும் அளவுக்கு தரமான பௌலர்கள் இருக்கிறார்கள்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

அதேசமயம் அவர்களின் மிடில் ஆர்டர் வழக்கம்போல் டான்ஸ் ஆடுகிறது. கருண் நாயர் ரஞ்சியிலேயே கைவிரித்துவிட்டார். சர்ஃபராஸ் கான், கடைசியாக எப்போது ஆடினார் என்றே தெரியவில்லை. மயாங்க் அகர்வால், பல நூற்றாண்டுகளாக மிடில் ஆர்டரில் சரியாக ஆட முடியாமல் தடுமாறுகிறார். டேவிட் மில்லர் மீது வழக்கம்போல் எக்கச்சக்க நெருக்கடி. அவரும் வழக்கம்போல் சொதப்பிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம். போன சீசனைப் போல் கே.எல்.ராகுல் தனி ஆளாகக் காப்பாற்றினால் பேட்டிங் கரைசேறும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

ஓவர்சீஸ் கோட்டாவில் மட்டும் சில மாற்றங்கள் செய்துள்ள கே.கே.ஆர், கடந்த ஆண்டை விடவுமே கொஞ்சம் பலமான அணியாக இருக்கிறது. 2018 சீசனில், அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் தினேஷ் கார்த்திக், டி-20 ஃபார்மேட்டில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார். கூடவே, ரஸல், நரைன் ஆகியோருடன் பிராத்வெயிட் சேர்ந்திருப்பது, அந்த அணியின் பேட்டிங், பௌலிங் இரண்டின் பலத்தையும் அதிகரித்துள்ளது. 

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

ஷுப்மான் கில், ஷிவம் மாவி, பிரஷீத் கிருஷ்ணா, நாகர்கோட்டி போன்ற இளம் பௌலர்கள் இந்த ஓராண்டில் நிறைய முதல் தர அனுபவம் பெற்றிருக்கிறார்கள். அவர்களோடு லாகி ஃபெர்குசன், அய்ன்ரிச் நார்டே ஆகியோர் சேர்வது பலம். கடந்த ஆண்டு பௌலிங்கால்தான் பல போட்டிகளில் முடிவு அவர்களுக்குப் பாதகமாக அமைந்தது. மிட்சல் ஜான்சன் இடத்தில் இப்போது இந்த நம்பத்தகுந்த வீரர்கள் இருப்பதால், கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

ஆனால், இந்த முறை பேட்டிங்கை கொஞ்சம் கவனமாகக் கையாளவேண்டும். ஜோ டென்லியை வாங்கி, கிறிஸ் லின்னுக்கு பேக் அப் தயார் செய்தவர்கள், மற்றொரு ஏரியாவில் கோட்டை விட்டனர். ரின்கு சிங் தவிர்த்து, பேக் அப் ஆப்ஷனாக உள்ளூர் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் யாருமே அந்த அணியில் இல்லை. அதனால், உத்தப்பா, நிதிஷ் ரானா இருவரும் ஃபார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லா போட்டிகளிலுமே விளையாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

கடந்த சீசனே உத்தப்பாவின் ஆட்டத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இப்போது அவர் உள்ளூர் போட்டிகளிலும் அதிகமாக விளையாடுவதில்லை. நடுவே கமென்ட்ரி பக்கமும் சென்றுவந்துவிட்டார். அணியில் ஹிட்டர்கள் நிறையவே இருப்பதால் (டி.கே உள்பட) அவர் ‘anchor’ ரோல் ஆடினால், அணிக்கு நல்லது. அதேபோல் ரஸல் காயமடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் உலகக் கோப்பை வாய்ப்பு மதில் மேல் பூனையாய் இருப்பதால், அவர் நான்காவது வீரராகக் களமிறங்க வாய்ப்பு அதிகம். ஆனால், அந்த நெருக்கடி தன் அணியை பாதிக்காமல் அவர் பார்த்துக்கொள்வது அவசியம்.

மும்பை இந்தியன்ஸ்

கடந்த ஆண்டு, மும்பை இந்தியன்ஸின் பௌலர்கள் ரன்களை வாரிவழங்க, பல போட்டிகள் கையை விட்டு நழுவியது. இப்போது அதைச் சரியாக பேலன்ஸ் செய்தால் நிச்சயம் மீண்டும் கோப்பையைக் கைப்பற்றலாம். ஒரு பொசிஷனுக்கு நிறைய வீரர்கள் இருப்பதால், பிளேயிங் லெவனை பேலன்ஸ் செய்யவேண்டிய சவாலும் கேப்டன் ரோஹித்துக்கு இருக்கிறது.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

சீனியர் வீரர்கள் என்பதற்காக யுவராஜ் சிங், பொலார்ட் போன்றவர்களை அணியில் சேர்க்காமல், சரியான வீரர்களை களமிறக்குவது முக்கியம். டிரான்ஸ்ஃபர் மூலம் டி காக் ஒப்பந்தம் செய்யப்பட்டது அருமையான காய்நகர்த்தல். ஈவின் லூயிஸ், டி காக் கூட்டணி சிறப்பான தொடக்க ஜோடியாக இருக்கும். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு சிறப்பாக தொடக்கம் கொடுத்திருந்தார். ஆனால், பொலார்டைவிட மிடில் ஆர்டருக்கு அவர் நம்பத்தகுந்த ஆப்ஷன். ரோஹித், சூர்யா மிடில் ஆர்டரில் ஆடுவது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் நெருக்கடியைக் குறைக்கும்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

அடுத்து பாண்டியா பிரதர்ஸ்... எந்த டி20 அணிக்கும் இவர்கள் மிகப்பெரிய பொக்கிஷம். இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இந்திய அணிக்கு விளையாடிய அனுபவம், குருனாலிடம், இன்னும் முதிர்ச்சியான பெர்ஃபாமன்ஸை வெளிக்கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம்.  மலிங்கா, மெக்லனகன், மில்னே, பெரண்டார்ஃப்... மிரட்டலான வேகப்பந்துவீச்சுக் கூட்டணி. மலிங்கா மீண்டும் அணியில் இணைந்திருப்பது பெரும் பலம். என்னதான் வயதாகியிருந்தாலும், அவரது ஸ்லிங் பந்துவீச்சு இல்லாமல் ஐ.பி.எல் தொடரின் கலர் கொஞ்சம் குறைந்துவிட்டது. அவரோடு பெரண்டார்ஃப் களமிறங்கினால் ரைட்-லெஃப்ட் காம்பினேஷன் மிரட்டலாக இருக்கும். மயாங்க் மார்கண்டே - உள்ளூர் போட்டிகளில் நன்றாகவே விளையாடுகிறார். அதனால் தீபக் சஹார் தன் வாய்ப்புக்குக் காத்திருக்கவேண்டும்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

இந்த ஆண்டு மும்பை அணிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் ஹர்திக் பாண்டியா - பும்ரா இருவரையும் சரியாக ரொட்டேட் செய்வது. கடந்த சீசனில், சன் ரைஸர்ஸ் புவிக்கு கொடுத்ததுபோல், அவர்கள் இருவருக்கும் அவ்வப்போது ஓய்வு தருவது அவசியம். அனுகுல் ராய், பரிந்தர் ஸ்ரன் என ஓரளவு நல்ல ஆப்ஷன்கள் இருப்பதால், இந்திய அணியின் உலகக் கோப்பை வாய்ப்பை கருதி, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவர்களை சரியாகப் பயன்படுத்தவேண்டியது அவசியம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீதான தடை முடிவுக்கு வரப்போகிறது. ஆனால்... இப்போது காயம் அவரை கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கிவைக்கப்போகிறது. வங்கதேச பிரீமியர் லீகில் ஏற்பட்ட காயத்தால், ஓய்வில் இருக்கிறார் ஸ்மித். அடுத்து, ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் ஒருநாள் தொடரிலேயே அவர் விளையாடமாட்டார் என்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரம். ராயல்ஸ் அணி, ஸ்மித்துக்கு மாற்று வீரர் தேடிக்கொண்டிருக்கிறது என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஸ்டீவ் ஸ்மித் ஆடவில்லை என்றால், நிச்சயம் அந்த அணிக்கு அது பெரிய இழப்புதான்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

இது போதாதென இங்கிலாந்து வீரர்கள் கடந்த ஆண்டைப் போலவே பாதியில் சென்றுவிட வாய்ப்பு அதிகம். அப்படிப்போனால் பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் (ஆம், அவர் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு அதிகம்) என முன்னணி வெளிநாட்டு வீரர்கள் அனைவருமே நடையைக்கட்டிவிடுவார்கள். பின்பு ஆஷ்டன் டர்னர், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற பிக் பேஷ் பெர்ஃபார்மர்களை வைத்துத்தான் ஒப்பேற்றவேண்டும்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

இதெல்லாம் ஒரு பக்கம் நெருக்கடி என்றால், உலகக் கோப்பை வாய்ப்பை துரத்திக்கொண்டிருக்கிறார் முன்னாள் துணைக்கேப்டன் ரஹானே. இன்னும் துரத்திக்கொண்டேதான் இருக்கிறார். இந்த நெருக்கடியை சுமக்கும் பட்சத்தில், அவரிடம் நிச்சயம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

கடந்த முறை ஒற்றை ஆளாக பட்லர் அரையிறுதிக்கு அழைத்துச்சென்றதுபோல், இந்த முறையும் அவரே காப்பாற்றிச்சென்றால்தான் உண்டு. உனத்கட், ஸ்டோக்ஸ்... அவர்களை நம்புவதும் பெரிய ரிஸ்க்தான். சஞ்சு சாம்சன் அட்ரெஸே இல்லாமல் போய்விட்டார். இந்திய அணியில் பெரிய ரவுண்ட் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, இந்திய போர்டு பிரெசிடெண்ட் அணிக்கே அவர் தேர்வாகவில்லை. இந்த சீசன், அவரது சர்வதேச கனவுகளுக்கு மிகமுக்கியமானது. ரிஷப் பன்ட் பெரும் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்க, இப்போதும் சொதப்பினால், அவரது சகாப்தம் முடிந்துவிடும். கிங்ஸ் லெவனுக்கு அடுத்தபடியாக வீக்கான அணியாக இருப்பது ராயல்ஸ்தான்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

வழக்கம்போல் பலமான அணிதான். பேட்டிங் மட்டுமல்லாமல், பௌலிங்கிலும் பலமாகவே இருக்கிறது. தரமான வேகப்பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இம்முறை திறமையான உள்ளூர் பேட்ஸ்மேன்களையும் வாங்கியிருக்கிறார்கள். எல்லாம் பலமானதாகவே இருந்தாலும், இவர்கள் ஆர்.சி.பி-யாக இருப்பதே பலவீனம்தானே!

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

எல்லாம் சரியாக இருந்தாலும், தன் பிளேயிங் லெவன் செலக்ஷன், பௌலிங் ஆப்ஷன் போன்றவற்றால் அணியைப் பாதாளத்துக்குத் தள்ளுவார் விராட். ஆனால், ஆஸ்திரேலியாவில் அவர் காட்டிய முதிர்ச்சி, கேப்டன் கோலியின் 2.0 வெர்ஷனை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. அங்கு செய்த அசத்தலான கேப்டன்சியை இந்த ஃபார்மட்டிலும் கோலி தொடர்ந்தால் ஈ சாலா கப் நம்தே! அதற்கு அவர் என்ன செய்யவேண்டும்?

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

வேறு இந்திய விக்கெட் கீப்பர்கள் இல்லாததால் பார்த்திவ் பட்டேல் நிச்சயம் களமிறங்குவார். ஒரு ஓப்பனர் ஸ்லாட் ஓவர். இன்னொரு ஓப்பனராக தானே இறங்கி, ஏ.பி-யை ஒன் டவுனில் இறக்கி, மிடில் ஆர்டரை பலவீனமாக்காமல், புதிதாக ஒரு முடிவு எடுக்கவேண்டும். ஓப்பனராக பிக் பேஷில் அசத்திய ஸ்டாய்னிஸை பார்த்திவுடன் களமிறக்குவது அணிக்கு நல்ல பலனைக் கொடுக்கலாம். ஸ்டாய்னிஸ், நிதானமாக, அதிரடியாக என அணிக்குத் தேவையான ஆட்டத்தை கொடுக்கக்கூடியவர். அதுவும் கூலாக ஆடக்கூடியவர். அதனால், அவரை ஓப்பனராக களமிறக்குவது டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் இரண்டையும் பலப்படுத்தும்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

கோலி, டி வில்லியர்ஸ், ஹிட்மேயர் அடங்கிய மிடில் ஆர்டர் - ஏலியன் லெவல். ஆறாவது பேட்ஸ்மேன் - ஒருவேளை எல்லோரும் சொதப்பினால், அணியை தூக்கி நிறுத்துபவராக இருப்பது அவசியம். அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் ஆல்ரவுண்டர்கள் ஆக்ஷ்தீப் நாத், ஷிவம் தூபே இருவரில் ஒருவர் அந்த இடத்துக்கு ஃபிட்டாக இருப்பார்கள். எப்போதும் மிடில் ஆர்டரில் சொதப்பும் அந்த அணியை கரைசேர்க்க அனுபவம் முக்கியம். அதனால் ஆக்ஷ்தீப் சரியான சாய்ஸ். அதற்கு அடுத்து வாஷிங்டன் சுந்தர், சஹால், சௌத்தி, உமேஷ் யாதவ் அடங்கிய பௌலிங் கூட்டணி. 11-வது வீரராக முகமது சிராஜை தேர்வு செய்யாமல், தொடக்கப் போட்டியில், ஃபார்மில் இருக்கும் நவ்தீப் சைனியை முயற்சி செய்வது நல்லது. பிளேயிங் லெவன் சரியாக எடுத்து, கோரி ஆண்டர்சனுக்கு கடைசி ஓவர் கொடுப்பது போன்ற தவறான முடிவுகள் எடுக்காமல் இருந்தால், உலகக் கோப்பைக்கு முன் ஐ.பி.எல் கோப்பையை கோலி முத்தமிடலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அதே பலத்தோடு இருக்கிறது சன்ரைசர்ஸ். கடந்த ஆண்டு நூலிழையில் நழுவிய கோப்பையை இம்முறை வென்றுவிடும் உத்வேகத்தோடு இருக்கிறது அந்த அணி. கிட்டத்தட்ட ஸ்டீவ் ஸ்மித் நிலைதான் டேவிட் வார்னருக்கும். ஆனால், கடந்த ஆண்டைப் போலவே, அவர் இல்லாமலும் சன்ரைசர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஜானி பேர்ஸ்டோ, மார்ட்டின் குப்ஷில் என பலமான பேக் அப் ஆப்ஷன்களை வைத்திருக்கிறது அந்த அணி.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

வழக்கம்போல் பந்துவீச்சை நம்பித்தான் இந்த ஆண்டும் களமிறங்குகிறார்கள். ஷபாஷ் நதீம், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் வருகை அவர்களின் பௌலிங் ஆப்ஷன்களை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. அதேபோல் அவர்களின் பலவீனமான மிடில் ஆர்டரையும் விஜய் சங்கர் பலப்படுத்துவார்.

டேவிட் வார்னர் வந்துவிட்டால் தவானின் இழப்பு தெரியாது என்று நம்பலாம். தவான் வியாபாரத்தில் ஓரளவு சன்ரைசர்ஸ் லாபம்தான் அடைந்துள்ளது. அந்த டிரான்ஸ்ஃபருக்குப் பிறகு சர்வதேச அரங்கில் ஓர் அசத்தல் பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார் விஜய் சங்கர். இந்த ஐ.பி.எல் அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நன்றாக விளையாடும்பட்சத்தில், உலகக் கோப்பை அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

அதேப்போல் கலீல் அஹமது. அவருக்கும் இது மிகவும் முக்கியமான இரண்டு மாதங்கள். உமேஷ் யாதவ் மட்டுமல்லாமல் சித்தார்த் கௌல் ரூபத்தில், தன் அணியிலேயே போட்டியைக் கொண்டுள்ளார். விக்கெட்டுகள் வீழ்த்துவது அவருக்கு ரொம்ப முக்கியம். இந்த உலகக் கோப்பை செலக்ஷன் என்ற நெருக்கடி எதுவும் இல்லாமல், இந்த முறையாவது தன் முழு திறனையும் மனீஷ் பாண்டே காட்டியாகவேண்டும்.

புலி... கொடி... பாம்பு... தேன் யாருக்கு? - ஐ.பி.எல் அதகளம்

கடந்த முறை நழுவிய கோப்பையைக் கைப்பற்ற சன்ரைசர்ஸ் செய்யவேண்டிய விஷயம் - சில போட்டிகளில் முகமது நபியைக் களமிறக்குவது. லெக் ஸ்பின்னர் ரஷீத், லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் ஷகிப் கூட்டணியை இடது கை பேட்ஸ்மேன்கள் சிலபல போட்டிகளில் பதம் பார்த்தனர். அச்சுறுத்தும் இடதுகை பேட்ஸ்மேன்கள் கொண்ட அணிகளுக்கு எதிராக நபியைப் பயன்படுத்துவது பலன் தரும்.

- மு.பிரதீப் கிருஷ்ணா