Published:Updated:

ஒரே போட்டியில் 2 இரட்டை சதங்கள்! அசத்திய இலங்கை வீரர்

ஒரே போட்டியில் 2 இரட்டை சதங்கள்! அசத்திய இலங்கை வீரர்
ஒரே போட்டியில் 2 இரட்டை சதங்கள்! அசத்திய இலங்கை வீரர்

இலங்கை உள்ளூர் போட்டி ஒன்றில் நாண்டிஸ்க்ரிப்ட்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஏஞ்சலோ பெரேரா, 2 இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இந்தச் சாதனை படைக்கப்படுவது, இது இரண்டாவது முறையாகும். 

நாண்டிஸ்க்ரிப்ட்ஸ் அணியின் கேப்டனான ஏஞ்சலோ பெரேரா, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கெதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 201 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்களும் எடுத்து சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக, இங்கிலாந்தின் கெண்ட் அணி வீரர் ஆர்தர் ஃபாக், கடந்த 1938-ம் ஆண்டில் இந்தச் சாதனையை எஸ்ஸெக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் படைத்திருந்தார். 
அந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 444 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய நாண்டிஸ்க்ரிப்ட்ஸ் அணி, 480 ரன்கள் குவித்தது. 5-வது வீரராகக் களமிறங்கிய கேப்டன் ஏஞ்சலோ பெரேரா, 201 ரன்கள் எடுத்தார். 203 பந்துகளைச் சந்தித்த அவர், 20 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் மூலம் அந்த ஸ்கோரை எட்டினார். 

இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தபோது களமிறங்கிய பெரேரா, பதும் நிஸான்காவுடன் (167) இணைந்து 267 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 268 பந்துகளை எதிர்கொண்ட பெரேரா, 231 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம், அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 579 ரன்கள் குவித்தது. ஜனவரி 31-ம் தேதி முதல், பிப்ரவரி 3-ம் ஆண்டு வரை நடைபெற்ற அந்தப் போட்டி, டிராவில் முடிந்தது. 

கடந்த 2013 - 2016 இடைப்பட்ட ஆண்டுகளில், இலங்கை அணிக்காக 4 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளிலும் ஏஞ்சலோ பெரேரா விளையாடியிருக்கிறார். அதேபோல, 97 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 18 சதங்கள், 33 அரை சதங்களுடன் 6,941 ரன்கள் சேர்த்திருக்கிறார்.