Published:Updated:

ஒரு நிகழ்ச்சி, 11 வீரர்கள்... சில பதில்கள், பல கேள்விகள்... `மண்ணின் மைந்தர்கள்’ எப்படி?!

ஒரு நிகழ்ச்சி, 11 வீரர்கள்... சில பதில்கள், பல கேள்விகள்... `மண்ணின் மைந்தர்கள்’ எப்படி?!
ஒரு நிகழ்ச்சி, 11 வீரர்கள்... சில பதில்கள், பல கேள்விகள்... `மண்ணின் மைந்தர்கள்’ எப்படி?!

11 விளையாட்டு நட்சத்திரங்களின் சொல்லப்படாத அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளது `மண்ணின் மைந்தர்கள்’

``தமிழர்களுக்கும் விளையாட்டுக்கும் எப்போதுமே ஒரு பந்தம் உண்டு” என டிவி தொகுப்பாளர் கோபிநாத்தின் குரலில் தொடங்குகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் `மண்ணின் மைந்தர்கள்’ முதல் எபிசோட். தடைகளைத் தாண்டி வெற்றியைத் தொட்ட 11 தமிழக விளையாட்டு வீரர்களின் சாதனை கதைகள்தான் இந்த `மண்ணின் மைந்தர்கள்.’  

`மண்ணின் மைந்தர்கள்’ நிகழ்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 11 வீரர், வீராங்கனைகளின் சாதனைகளை செய்திகளில் நாம் கேட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் கடந்து வந்த பாதை, குடும்பம், பயிற்சியாளர்கள், நண்பர்கள் என அந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தவர்களையும் சேர்த்து காட்சிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு விளையாட்டு நட்சத்திரத்தை அறிமுகம் செய்கிறார் கோபிநாத்.

இன்ட்ரோவைத் தொடர்ந்து அடுத்த 45 நிமிடங்களுக்கு விளையாட்டு வீரரின் வாழ்க்கை பயணம் விரிகிறது. ஷரத் கமல் (டேபிள் டென்னிஸ்), சதீஷ் சிவலிங்கம் (பளூ தூக்குதல்), இளவழகி (கேரம்), லட்சுமணன் கோவிந்தன் (தடகளம்), ஆண்டனி கமல் (கபடி), சத்யன் (டேபிள் டென்னிஸ்), வாஷிங்டன் சுந்தர் (கிரிக்கெட்), ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), தர்மராஜ் சேரலாதன் (கபடி), கேஷ் (ஹாக்கி), ஜீவா குமார் (கபடி) என 11 விளையாட்டு நட்சத்திரங்களின் சொல்லப்படாத அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளது ‘மண்ணின் மைந்தர்கள்’. 

கோபிநாத் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்றதும், விளையாட்டு வீரர்களுடன் `ஒன் ஆன் ஒன்’ கலந்துரையாடல் இருக்கும் என எதிர்பார்த்தபோது, நிகழ்ச்சி அறிமுகம், முடிவு எனச் சில நிமிடங்களுக்கு மட்டுமே வந்து போகிறார் கோபி. ``நிகழ்ச்சி இப்படிதான் வர வேண்டும் என்பது குழுவின் முடிவு. இதுதான் ஃபார்மெட்டும்கூட. விளையாட்டில் சாதனை படைத்த தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பல தடைகளையும் தாண்டி வெற்றிபெற்ற இந்த நட்சத்திரங்கள், விளையாட்டின் மீது ஆர்வத்துடன் இருக்கும் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள். பொதுவாகவே, விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளில் வேலை செய்ய எனக்கு விருப்பம் என்பதால், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்” என்றார் கோபிநாத். 

சிறுவயது முதல் வெற்றிச்சிகரம் தொட்டது வரை படிப்படியாய் விரியும் கதைப்பயணத்தை விளையாட்டு வீரர்களே விவரிப்பது, மனதை நெகிழ வைக்கிறது. ``ஆட்டோ ஓட்டுநரான எங்க அப்பா என்னோட கனவுகளுக்கு ஆதரவா இருந்தார். வறுமையைக் காரணங்காட்டி என்ன படிக்கச் சொல்லல,  நல்ல கேரம் விளையாட கத்துக்கணும்னு ஊக்கப்படுத்தினார். நீ ஜெயிக்கணும்னு சொன்னார்” - இரண்டு முறை கேரம் போர்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இளவழகி சொன்னது. விளையாட்டில் தடம் பதிக்கும் ஒவ்வொரு வீரர் வீராங்கனையும் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் முன், சாம்பியனாகும் முன் சவாலான கட்டங்களை கடந்திருக்க வேண்டும். மண்ணின் மைந்தர்களுக்குப் பின்னால் நின்று, இந்த வெற்றிப்பயணத்தை ஊக்குவித்த பெற்றோர்களும், நண்பர்களும் எதார்த்தம் குறையாது பேசியது சிலிர்ப்பூட்டுகிறது. இப்படி ஒவ்வொரு எபிசோடிலும், சில தருணங்கள் நம்மை ரசிக்க வைத்தாலும், சில குறைகளும் எட்டிப்பார்த்தன.

வீரர்களைக் களத்தில் காட்ட தவறிய படக்குழு, ஸ்டுடியோவிலேயே அவர்களது வாழ்க்கை பயணத்தைக் காட்சிப்படுத்தியது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு முழு ஆவணப்படமா என்றால், நூறு சதவிகிதம் `யெஸ்’ சொல்லிவிட முடியாது. காரணம், விளையாட்டுப் பயணத்தின் ஃப்ளாஷ்பேக்கில் வரும் சித்திரிக்கப்பட்ட காட்சிகள் ஒட்டவில்லை. உதாரணத்துக்கு, ஓட்டப் பந்தய வீரர் ஜி.லட்சுமண் தொடர்பான எபிசோடில், மனம் லட்சுமண் ஓடும் காட்சிகளைத்தான் எதிர்பார்க்கிறது. ஆனால், அவருக்குப் பதிலாக வேறொருவர் பிராக்டீஸ் செய்யும் காட்சிகளில் ஒருவிதச் செயற்கைத்தன்மை புகுந்துவிடுகிறது. 

வழக்கமான அறிமுகம், தோல்வியிலிருந்து வெற்றி எனத் தெரிந்த டெம்ப்ளேட்டிலேயே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். அல்லது ஒவ்வொரு எபிசோடிலும் வெரைட்டி காட்டியிருக்கலாம். எதன் அடிப்படையில் இந்த 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதிலும் தெளிவு இல்லை. ஒருவேளை அடுத்த சீசனில், இன்னும் பல விளையாட்டுச் சாதனையாளர்களின் வாழ்க்கை பயணங்கள் காட்சிப்படுத்தப்படலாம். 

ஜனவரி 11-ம் தொடங்கிய `மண்ணின் மைந்தர்கள்’ சீரிஸில், 6 எபிசோட்கள் முடிந்துள்ளன. ஒவ்வொரு ஞாயிறும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மீதமுள்ள 5 எபிசோட்கள் வரும் வாரங்களில் ஒளிபரப்பப்பட உள்ளன. பெரிதும் கண்டுகொள்ளாத நம்ம ஊரு விளையாட்டு சாதனையாளர்களைக் கொண்டாட நினைத்ததற்காகவே, `மண்ணின் மைந்தர்கள்’ ஷோவைப் பாராட்டலாம்.

அடுத்த கட்டுரைக்கு