Published:Updated:

`விராட் கோலி ஆட்டத்தால் ரோஹித்தை மக்கள் மறந்துவிடுகிறார்கள்!’ - இங்கிலாந்து முன்னாள் வீரரின் ஆதங்கம்

`விராட் கோலி ஆட்டத்தால் ரோஹித்தை மக்கள் மறந்துவிடுகிறார்கள்!’ - இங்கிலாந்து முன்னாள் வீரரின் ஆதங்கம்
`விராட் கோலி ஆட்டத்தால் ரோஹித்தை மக்கள் மறந்துவிடுகிறார்கள்!’ - இங்கிலாந்து முன்னாள் வீரரின் ஆதங்கம்

விராட் கோலியின் ஆட்டத்தால் ரோஹித் ஷர்மாவை மக்கள் மறந்துவிடுகிறார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டாமினிக் கார்க் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மே மாதம் கடைசியில் தொடங்கவுள்ளது. ஆனால், இப்போது இருந்தே உலகக் கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது. இதே கேள்வி முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களிடம் எழுப்பப்படுகிறது. உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் பௌலர் டாமினிக் கார்க் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஸ்கை ஸ்போட்ர்ஸ் இணையத்தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இங்கிலாந்து அணியின் தற்போதைய நிலை குறித்துப் பேசினார். அவரிடம், தன் சொந்த நாட்டில் இல்லாமல் வெளி மண்ணான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியா உலகக் கோப்பை போட்டியில் எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், ``நிறைய பேர் இங்கிலாந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றும் என்று கூறிவருகிறார்கள். அதற்குக் காரணம் இங்கிலாந்தின் சமீபத்திய வெற்றிகள். இந்த வெற்றிகளுக்கு ஆண்ட்ரூ ஸ்டராஸ் எடுத்த முடிவுகள்தான் காரணம். இங்கிலாந்து அணி 50 ஓவர் போட்டிகளில் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஸ்டராஸ் சில முடிவுகளை எடுத்தார். இதனாலேயே இங்கிலாந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஒருநாள் போட்டிக்கான தகுதியான அணியாக இருக்கிறது.

ஒருநாள் போட்டிகளை வெற்றிபெறத் தேவையானதை இந்தியா கொண்டுள்ளது. அந்த அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடுகிறார்கள். உதாரணத்துக்கு ரோஹித் ஷர்மாவை எடுத்துக்கொள்ளுங்கள். ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். டெஸ்ட்டில் நிலையான இடத்தை அவரால் பெற முடியவில்லை. அதேநேரம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். விராட் கோலியின் சிறப்பாக ஆடும்போது, சில சமயங்களில் ரோஹித் மறக்கப்படுகிறார். விராட் கோலி நிறைய ரன்கள் சேர்க்கும்போது, ரோஹித்தின் சிறப்பான ஆட்டத்தை மக்கள் மறந்துவிடுகிறார்கள். 

இவர்களைத் தவிர்த்து வேறு யாரையாவது, ஏன் தோனியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வயதிலும் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியின் பௌலிங் லைன் - அப்பும் அதேபோல் சிறப்பாக இருக்கிறது. பந்துவீச்சில் அவர்கள் காட்டும் வேகம், திறமை நிறையவே என்னைக் கவர்ந்துள்ளது. ஆல்ரவுண்டராக ஹர்டிக் பாண்டியாவும் சரியாக ஆடுகிறார். இந்திய அணியில் அனைவரும் திறமையாக விளையாடி வருகின்றனர். எந்தப் போட்டிக்கு அவர்கள் சென்றாலும், மிகப்பெரிய சக்தியாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆக்ரோஷமாகவும் கிரிக்கெட்டை அணுகுகிறார்கள்" என்று கூறினார்.