Published:Updated:

உலகக் கோப்பைக்கு முன் இதைத் திருத்திக் கொள்ள வேண்டும்! - கோலியின் லாஜிக்

உலகக் கோப்பைக்கு முன் இதைத் திருத்திக் கொள்ள வேண்டும்! - கோலியின் லாஜிக்
உலகக் கோப்பைக்கு முன் இதைத் திருத்திக் கொள்ள வேண்டும்! - கோலியின் லாஜிக்

நியூசிலாந்துக்கு எதிராக அச்ச உணர்வின்றி ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார். 

Photo Credit: ICC

90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நியூசிலாந்து மண்ணில் முதல் 2 ஒருநாள் போட்டிகளையும் வென்ற முதல் இந்தியக் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். குடியரசு தினத்தில் பெற்ற வெற்றி, இந்திய வீரர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் சேர்த்தது. ரோஹித் ஷர்மா 87 ரன்களும், தவான் 67 ரன்களும் சேர்ந்தனர். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 40.2 ஓவர்களில் 234 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Photo Credit: BCCI

போட்டிக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடியதாகப் பாராட்டினார். அவர் பேசுகையில், ``இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இதுபோன்ற சிறிய மைதானங்களில், இந்த ஸ்கோர் போதுமானதல்ல. ஆனால், எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். குறிப்பாக அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். 

Photo Credit: ICC

சில விஷயங்களில் நாங்கள் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இரண்டாவது டிரிங்ஸ் பிரேக்குக்குப் பின்னர் சில ரிஸ்குகள் எடுக்க நான் முடிவு செய்தேன். நான் ஆட்டமிழந்து வெளியேறியதும், புதிதாகக் களமிறங்கிய பேட்ஸ்மேனுக்கு சிறிது நேரம் தேவைப்படும். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இதுபோன்ற சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ள முயற்சிப்போம். எங்கள் ஸ்கோரில் 15 முதல் 20 ரன்கள் நாங்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். அதேநேரம், இந்த ஸ்கோரை எட்டியது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான்’’ என்றார்.