Published:Updated:

27 பந்துகளில் 5 விக்கெட்; 77 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து! - முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் #ENGvWI

27 பந்துகளில் 5 விக்கெட்; 77 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து! - முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் #ENGvWI
27 பந்துகளில் 5 விக்கெட்; 77 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து! - முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் #ENGvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

Photo Credit: Windiescricket

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக அதிகமுறை (27 முறை) 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற இயான் போத்தமின் சாதனையைச் சமன் செய்தார். பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளையின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் வேகம் கீமார் ரோச் பந்துவீச்சில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறத் தொடங்கியது. விக்கெட்டுகளை விரைவாக இழந்த இங்கிலாந்து அணி, 30.2 ஓவர்களில் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். அவர்களில் யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo Credit: Windiescricket

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச், 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, அவர் 5 விக்கெட்டுகளை, தான் வீசிய கடைசி 27 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து கைப்பற்றினார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

212 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருக்கிறது. இதன்மூலம் அந்த அணி, இங்கிலாந்து அணியை விட 339 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. பிரிட்ஜ் டவுன் டெஸ்டில் இரண்டாம் நாளான இன்று மட்டும் 18 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.