Published:Updated:

ரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது எப்படி?! #NZvIND

ரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது எப்படி?! #NZvIND
ரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது எப்படி?! #NZvIND

நியுசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி,ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் தொடரை 2-1 என வென்று சரித்திரம் படைத்தது இந்திய அணி. அதே நேரம் டாஸ்மனியக் கடலின் இந்த பக்கம் உள்ள நியூசிலாந்தில், இலங்கையை 3-0 என புரட்டிப் போட்டது நியூசிலாந்து அணி. இந்த இரண்டு அணியும் இப்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்றாவதாக இருக்கும் நியூசிலாந்து அணி மோதுவதால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  #NZvIND

கடைசியாக 2014-ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி 4-0 என படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தமுறை தொடரை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது விராட் தலைமையிலான இந்திய அணி. 

நேப்பியரில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டி தொடங்கும் முன்பு “பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் 300 ப்ளஸ் ஸகோர் எல்லாம் அசால்ட்” என்றார்கள் வல்லுநர்கள். மைதானமும் சிறியதுதான். ஆட்டத்தில் பத்திற்கும் குறைவாகவே இரண்டு ரன்கள் ஓடப்பட்டது. 300 ரன்களுக்கு மேல் எடுக்கக்கூடிய அளவுக்கு பிட்ச் இல்லையென்றாலும் 250 ரன்களுக்கு மேல் எடுக்கக்கூடிய விக்கெட்தான். ஆனால், நியூசிலாந்தோ 157 ரன்களுக்கு ஆல் அவுட்.

ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலியே ஷமி நியூசிலாந்து ஓப்பனர் கப்டிலை வெளியேற்றினார். அற்புதமான இன்ஸ்விங்கரில் கப்டில் இன்சைட் எட்ஜ் ஆக, பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. தன் அடுத்த ஓவரில் மற்றுமொறு ஓப்பனரான கார்லின் முன்ரோவையும் பெவிலியன் திரும்ப வைத்தார்.  அரௌவுண்டு தி ஸ்டெம்ப்பில் அதே லென்த்... அதே இன் ஸ்விங்கர்... இந்தமுறை ஸ்விங் அதிகம். முன்ரோ அதை டிரைவ் செய்ய முற்பட்டு பந்தை முழுவதுமாக மிஸ் செய்தார். பந்து பைல்ஸை தட்டிச்சென்றது. இரண்டு பந்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். முதல் பந்து வலது கை ஆட்டக்காரருக்கு போடப்பட்டது. இரண்டாவது பந்து இடது கை ஆட்டக்காரருக்கு போடப்பட்டது.

ஆட்டத்தின் நான்காவது ஓவரிலியே நியூசிலாந்து ஓப்பனர் இருவர்களையும் வெளியேற்றி இந்தியாவை தொடக்கத்திலேயே ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார். இன்னும் சொல்லப்போனால் அவரது ஓப்பனிங் ஸ்பெல்தான் இந்திய வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்களான வில்லியம்சன், டெய்லர் இருவரும் வந்தபோது ஸ்கோர் 18-2. அந்த நிலையில் பேட்டிங்குக்கு வந்தால் யாருக்கும் பிரஷர் இருக்கத்தானே செய்யும். அதுவே அவர்களின் யதார்த்த ஆட்டத்துக்கு தடைப்போட்டது. காரணம் ஷமியின் அந்த ஸ்பெல்.

வில்லியம்சன் - டெய்லர் ஜோடி சரிவிலிருந்து மெல்ல ஸ்கோரை நகரச்செய்துக் கொண்டிருந்த சமயத்தில் சாஹலை அழைத்தார் கோலி. 14-வது ஓவரில் டெய்லரை `காட் அண்ட் போல்ட்’ செய்து ஜோடியைப் பிரித்து, தொடர்ந்து ஆறு போட்டிகளில் அரைசதம் கடந்த டெய்லரை 24 ரன்களில் வெளியேற்றினார். இரண்டு புல் லென்த் பாலை தொடர்ந்து ஒரு ஷார்ட் லென்த்தில் பிட்ச் செய்தார் சாஹல். நேராக அவர் கையில் விழுந்தது. அதன் பின் விக்கெட் மளமள வென விழத்தொடங்கியது. பின் சாஹல் உடன் குல்திப் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து பேட்ஸ்மென்களை திணறடித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் வில்லியம்சன் அரைசதம் கடந்தார். அவரும் குல்தீப் சுழலில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பாக குல்தீப் 4, ஷமி 3, சாஹல் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

“மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஸ்பின்னர்களை எதிர் கொள்ளும் விதத்தைப் பொறுத்தே இந்தத் தொடரின் வெற்றி நிர்ணயிக்கப்படும். அவர்களை சரியாகக் கையாளவேண்டும்” என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தொடர் தொடங்கும் முன் எச்சரித்தார். அவர் எச்சரித்ததைப் போலவே இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர்களை சரியாகக் கையாளாமல் நியூசிலாந்து வீரர்கள் பணிந்து விட்டனர். இந்தப் போட்டியில் இந்திய ஸ்பின்னர்கள் 7 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அடுத்து158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் ஓப்பனர்கள் தவான்-ரோஹித் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. 41 ரன்கள் எடுத்த போது சூரிய வெளிச்சம் கண்ணில் படுவதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் டக்வொர் லூயிஸ் முறைப்படி ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டு, 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கபட்டது. பிரேஸ்வெல் பந்தில் ரோஹித் 11 ரனில் ஸ்லிப்பில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஐசிசி டோர்னமென்ட் வருகிறதென்றாலே ஃபார்முக்கு வந்துவிடுகிறார் தவான். ஷூபம் கில் அணியில் ‘ஓப்பனர் பேக்கப்பாக ‘அணியில் சேர்க்கபட்டதால் தவான் இந்தப் போட்டியில் எப்படியாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தார். கடந்த 12 போட்டிகளில் அவர் அடித்த டாப் ஸ்கோர் 35 ரன்கள் மட்டுமே. ஆனால், இந்தப் போட்டியில் அரைசதம் கடந்து (75 ரன்) தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்த ஃபார்ம் உலகக் கோப்பையிலும் தொடர வேண்டும்.

45 ரன்னில் பெர்குசன் பந்தில் கோலி வெளியேற பிறகு வந்த அம்பதி ராயுடு ஆட்டத்தை முடித்தார். இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. ஆட்டநாயகன் விருதை முகமது ஷமி தட்டிச்சென்றார். 

அடுத்த கட்டுரைக்கு